‘கால்’ கொடுத்து உதவும் ‘கை’


‘கால்’ கொடுத்து உதவும் ‘கை’
x
தினத்தந்தி 9 Dec 2018 8:13 AM GMT (Updated: 9 Dec 2018 8:13 AM GMT)

பள்ளி சிறுவர்களிடம் உனது லட்சியம் என்ன? என்று கேட்டால், டாக்டராக வேண்டும், கலெக்டராக வேண்டும் என்பாா்கள்.

வீர் அகர்வால் என்ற சிறுவனோ, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்பதுதான் தன்னுடைய விருப்பம் என் கிறான். மும்பையை சேர்ந்த வீர் அகர்வால், அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரு கிறான். படிக்கும் போதே தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றவும் தொடங்கி விட்டான்.

இவனுடைய முயற்சியால் நடக்கமுடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 300 பேர் செயற்கைகால்கள் உதவியுடன் நடமாட தொடங்கி இருக்கிறார்கள். தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் மத்தியில் செயற்கை கால்கள் பொருத்துவது பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறான். இணையதளம் மூலம் செயற்கை கால்கள் வாங்குவதற்கான நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறான்.

வீர் அகர்வால், மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை காட்டுவதற்கு அவன் விபத்தில் சிக்கி மீண்டு வந்திருப்பதே காரணமாக இருக்கிறது. அது பற்றி சொல்கிறான்.

‘‘நான் 5 வயதில் கார் விபத்தில் சிக்கினேன். எலும்பு முறிந்து மூன்று மாதங்கள் படுத்தபடுக்கையாக சிகிச்சை பெற்றேன். பிறகு ஊன்றுகோல் உதவியுடன் நடக்க தொடங்கினேன். எனது பெற்றோர் செலவை பற்றி கவலைப்படாமல் முறையான சிகிச்சை அளித்தார்கள். அதனால் விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்பினேன். எனக்கு கிடைத்தது போல் ஊனமுற்ற ஏழைகளுக்கும் தரமான சிகிச்சையும், ஆதரவும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு என்னால் எந்தவகையில் உதவ முடியும் என்றும் சிந்தித்தேன்.

இணையதளத்தில் தேடியபோது மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் பொருத்தி கொடுக்கும் ‘ஜெய்ப்பூர் பூட்’ அமைப்பை பற்றி அறிந்து கொண்டேன். அந்த அமைப்பு மூலம் மாற்றுத்திறனாளி களுக்கு செயற்கை கால்கள் பொருத்துவதற்கு திட்டமிட்டேன். பின்பு அதற்கு தேவையான நிதியை திரட்ட தொடங்கினேன். விபத்தில் கால்களை இழந்த ஊனமுற்றவர்கள், போலியா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு செயற்கைகால்கள் பொருத்த நிதியுதவி செய்கிறேன்" என்கிறான்.

வீர் அகர்வாலின் தீவிர முயற்சியால் 14 லட்சம் நிதி திரட்டப்பட்டிருக்கிறது. அதனை கொண்டு முகாம் நடத்தி 300 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்த உள்ளான்.

Next Story