உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 9 Dec 2018 10:21 AM GMT (Updated: 9 Dec 2018 10:21 AM GMT)

பக்கத்து மாநிலத்தை ஒரு புயலும், அதை தொடர்ந்து வந்த மழையும் புரட்டிப்போட்டு பெரும்சேதத்தை உருவாக்கியபோது, ஏராளமான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்கினார்கள்.

உண்ணவும், உடுத்தவும் வழியின்றி தவித்த அவர்களுக்கு, அருகில் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த தனிநபர்கள் குழுக்களாக இணைந்து உதவினார்கள். அப்படி உதவி செய்தபோதுதான் அந்த இளைஞனுக்கும்- இளம் பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

பலரும் உணவு, உடை போன்றவற்றை சேகரித்தும், சமைத்தும் வழங்குவதிலே குறியாக இருந்தபோது அந்த இளைஞன் மட்டும் பெண்களை பற்றி சிந்தித்து, மாதவிலக்கு காலத்துக்கு தேவையான ‘பேடுகளை’ சேகரித்தான். பல்வேறு பகுதியில் இருக்கும் நண்பர்களை தொடர்புகொண்டு, அங்குள்ள கடைகளில் இருந்து பேடுகளை வாங்கி உடனடியாக கொண்டு வரவைத்து, முகாம்களில் தங்கியிருந்த பெண்களுக்கு வழங்கினான். பெண்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவன் செய்த உதவி, அந்த இளம் பெண்ணின் இதயத்தை தொட்டது. மனதை அவனிடம் பறிகொடுத்தாள். காதலித்தார்கள். இருவரும் வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள்.

அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஆனால் இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளூரிலே தங்கள் திருமணம் நடந்தால் அது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால், வீட்டில் இருந்து வெளியேறி ரகசிய திருமணம் செய்துகொண்டு, அந்த மாநிலத்தின் எல்லைப் பகுதி கிராமம் ஒன்றில் குடியேறினார்கள்.

அந்த இளைஞனுக்கு சரியான வேலை எதுவும் அமையவில்லை. அதனால் அவர்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் என்ற தகவல் அந்த பெண்ணின் தாயாரை சென்றடைந்தது. அவர் உடனே தனது சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று, அந்த பணத்தில் மகளுக்கு பக்கத்து மாநிலத்தில் குறிப்பிட்ட அளவு விவசாய நிலத்தை வாங்கிக்கொடுத்தார். அதில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்திக்கொள்ளுமாறும் கூறினார். எக்காரணத்தைக் கொண்டும் சொந்த ஊருக்கு மட்டும் திரும்பிவிடவேண்டாம் என்றும் கூறிவிட்டு சென்றார்.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அந்த இளம் தம்பதியினர் முடிவு செய்தார்கள். அவர்கள் விவசாயம் செய்ய தயாரான நேரத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் அவர்களிடம் வேலை கேட்டு வந்தான். அவனையும் சேர்த்துக்கொண்டு கடுமையாக உழைத்தார்கள். ‘நிலையான வருமானத்தை உருவாக்கி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வரை குழந்தை பெற்றுக்கொள்வதில்லை’ என்றும் முடிவு செய்தார்கள். உழைப்பு கைகொடுத்தது. விவசாயத்தில் வருமானம் வந்தது. விளைநிலத்தை ஒட்டிய பகுதியில் இடம் வாங்கி பெரிதாக வீடு கட்டினார்கள். பக்கத்தில் உள்ள நிலங்களையும் வாங்கி விவசாயத்தை விரிவு படுத்தினார்கள். ஆறு வருடத்தில் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது.

சிறுவனாக வேலையில் சேர்ந்த அவனுக்கும் 21 வயது ஆனது. விவசாய பணிகளில் பெரும்பகுதியை அவன்தான் கவனித்தான். அவனை முழுமையாக நம்பி பணப் பொறுப்புகளையும் ஒப்படைத்திருந்தார்கள். ஏராளமான வேலை ஆட்களும் அவன் கட்டுப்பாட்டிலேயே இருந்தார்கள்.

வாழ்க்கையில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் அந்த தம்பதிகள், அடுத்து தாய்மைக்கு தயாராக விரும்பினார்கள். அது தொடர்பாக டாக்டரின் ஆலோசனைக்காக காரில் சென்றுகொண்டிருந்தபோது விதிவிளையாடியது. எதிரே வந்த லாரி மோதி, கார் விபத்தில் சிக்கியது. ஓட்டிச்சென்ற கணவர் படுகாயம் அடைந்து, கோமா நிலைக்கு சென்றார். சிகிச்சைகள் சில மாதங்களாக தொடர்ந்தது. அவள் முழுபொழுதும் கணவர் அருகிலே இருந்து கவனித்தாள். விவசாய பணிகள், வரவு செலவுகள் அனைத்தையும் அந்த வேலைக்கார இளைஞனின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.

பல மாதங்களாக உயர் சிகிச்சை அளித்தும் பலனில்லை. கணவர் இறந்துபோனார். அந்த மனஉளைச்சல் அவளை கடுமையாக பாதித்தது. சில மாதங்கள் எதிலும் கவனம் செலுத்தாமல் தனிமையில் இருந்து அழுதாள். பின்பு ஓரளவு மனதை தேற்றிக்கொண்டு அவள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியபோது, அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அந்த இளைஞன் தன்வசப்படுத்திவைத்திருந்தான். வேலை ஆட்களும் அவனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அவர்களில் சிலர் தோட்டத்திற்குள் ஆங்காங்கே குடிசைகளை போட்டுக்கொண்டு, ‘உரிமைக்குரல்’ எழுப்பினார்கள். அனைத்தையும் திரைமறைவில் இருந்து இயக்குவது அந்த வேலைக்கார இளைஞன் என்பது அவளுக்கு புரிந்தது. அதனால் அவனோடு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாள்.

‘உனக்கு என்னதான் தேவை? ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாய்?’ என்று அவனிடம், அவள் கேட்டபோது, ‘இங்குள்ள அனைவருமே நம் இருவருக்கும் உடல்ரீதியான தொடர்பு இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அதனால் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள். நான் உங்களைவிட வயதில் சின்னவன் என்றாலும், பல நடிகைகள் இப்போது அவர்களைவிட வயதில் சிறியவர்களைத்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். நீங்கள் என்னை திரு மணம் செய்துகொள்ள சம்மதித்ததும், நான் இங்குள்ள அனைத்து பிரச்சினை களையும் தீர்த்துவைத்துவிடுவேன். நீங்கள் நிம்மதியாக வாழலாம்..’ என்றான்.

அவன் தன்னை சுற்றி மிகப்பெரிய சதி வலை பின்னியிருப்பது அவளுக்கு புரிந்தது. தனது கணவரை அவனே விபத்து ஏற்படுத்தி கொன்றிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது. தட்டிக்கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில்தான் அவன் அவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதை உணர்ந்து, தனது பெற்றோருக்கு தகவல்கொடுத்தாள். அவர்கள் முழுபலத்தோடு வந்திறங்கியிருக்கிறார்கள். போலீஸ் உதவியையும் நாடியிருக் கிறாள்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளுக்கு இப் படிப்பட்ட ஆபத்துக்களும் ஏற்படுகின்றன.

- உஷாரு வரும். 

Next Story