தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?


தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
x
தினத்தந்தி 13 Dec 2018 7:11 AM GMT (Updated: 13 Dec 2018 7:11 AM GMT)

‘நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி’ என எதிர்க்கட்சிகளால் வர்ணிக்கப்பட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா, தன்வசமிருந்த மூன்று மாநிலங்களை இழந்து இருக்கிறது. காங்கிரசிடம் இருந்த ஒரு மாநிலம் ‘கை’ நழுவி போய்விட்டது. பொதுவாக பார்த்தால், 2014-ம் ஆண்டிலிருந்து இறங்கு முகத்தில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியை அளித்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலைப் புது நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கான உற்சாகத்தைக் கொடுத்திருக்கின்றன. நரேந்திர மோடி பா.ஜ.க வின் முகமான பிறகு பெரும்பாலும் வெற்றிகளையே குவித்து வந்த அந்தக்கட்சிக்கு இது தார்மீக பின்னடைவுதான். இதையெல்லாம் தாண்டி மாநில வாரியாக இந்தத் தேர்தல் முடிவுகளை நுணுக்கமாக கவனிக்க வேண்டியிருக்கிறது.

ராஜஸ்தானில் இருபதாண்டுகளாக காங்கிரசும், பா.ஜ.க.வுமே மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றன. இந்த முறையும் அதுதான் நடந்திருக்கிறது. ராஜவம்சத்தை சேர்ந்த முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாதான் அங்கே பா.ஜ.க.வின் முகம். மக்களைவிட அதிகமாக சொந்த கட்சியினரிடம் அவர் வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவருக்கு எதிரான கலகக் குரல்கள் ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதாவில் எதிரொலித்துக்கொண்டிருந்தன. அக்கட்சிக்கு கட்டமைப்பு ரீதியான பலமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடனும் வசுந்தராவுக்கு போதிய நல்லிணக்கம் இல்லை. இதெல்லாம் சேர்ந்து அங்கே பா.ஜ.கவை வீழ்த்தி இருக்கிறது.

ராஜஸ்தானை விட பா.ஜ.கவுக்கு கடும் எதிர்ப்பு அலை வீசிய மாநிலம் சத்தீஷ்கார். அந்த மாநிலத்தை முற்றிலுமாக காங்கிரசிடம் பாரதீய ஜனதா பறிகொடுத்து இருக்கிறது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்த ரமன் சிங் அரசு மீதான ஊழல் புகார்கள், வேலைவாய்ப்பின்மை போன்ற காரணிகள் சேர்ந்து காங்கிரசுக்கு சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது சத்தீஷ்கார்.

எப்படியாவது வென்றுவிடலாம் என்று பாரதீய ஜனதா நம்பியிருந்த மத்திய பிரதேசத்தில் நூலிழையில் தோற்றிருக்கிறது. அங்கே 15 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக கோலோச்சிய சிவராஜ் சிங்சவுகான், முன்னொரு காலத்தில் மோடிக்கு இணையாக அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டவர். விவசாயிகள் பிரச்சினை, சவுகான் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை பாரதீய ஜனதாவிடம் இருந்து ஆட்சியைப் பறித்திருக்கின்றன. பிரசாரத்தின் போது அதையே பிரதானமாக சொன்ன காங்கிரஸ், கோட்டையைப் பிடித்திருக்கிறது.

மேலோட்டமாக பார்க்கும்போது தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு ஆதரவானதாக தெரிந்தாலும் வட கிழக்கில் கடைசியாக தன்வசமிருந்த மிசோரம் மாநிலத்தை அக்கட்சி இழந்திருக்கிறது. 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய காங்கிரஸ் வெறும் 5 இடங்களுடன் பரிதாபமாக தோற்றிருக்கிறது. அதாவது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் பாரதீய ஜனதாவுக்கு என்ன நேர்ந்ததோ அது, காங்கிரசுக்கு மிசோரத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஐந்து முறை முதல்-மந்திரியாக இருந்த காங்கிரசின் லால் தன்ஹவ்லா போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறார். அங்கே மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆட்சியைப் பிடித்த நிலையில், ஒரே ஒரு சட்டப்பேரவை உறுப்பினருடன் பா.ஜ.க தனது கணக்கை தொடங்கி இருக்கிறது.

தெலுங்கானாவில் முன்கூட்டியே தேர்தலைச் சந்தித்த சந்திரசேகர ராவ் சொல்லி வைத்து அடித்திருக்கிறார். அங்கே பாரதீய ஜனதாவோ, காங்கிரசுடன் சேர்ந்து சந்திரபாபு நாயுடு அமைத்த மெகா கூட்டணியோ எடுபடவில்லை. தெலுங்கானாவுக்கு எதிரானவர் சந்திரபாபு நாயுடு என்ற டி.ஆர்.எஸ் கட்சியின் பிரசாரம் எடுபட்டுவிட்டது. கூடவே தெலுங்கானா உருவாக காரணமாக இருந்தவர் என்பதோடு , அடித்தட்டு மக்களைக் கருத்தில் கொண்டு சந்திரசேகர ராவ் அரசு செயல்படுத்தும் திட்டங்களே அவர்களுக்கு அங்கே வெற்றியை ஈட்டித்தந்திருக்கிறது. காங்கிரசாவது கவுரவமான தொகுதிகளில் வென்றிருக்கிறது. பாரதீய ஜனதா ஒரு தொகுதியைத் தாண்டவில்லை.

5 மாநில தேர்தல் முடிவுகளை ராகுல் காந்தியின் வெற்றி என்று சொல்லிவிட முடியாது; ஆனால் நிச்சயமாக நரேந்திர மோடியின் தோல்வி என்று சொல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் இத்தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்ததில் மாநில ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பது முக்கியமான சக்தியாக இருந்தாலும் அது மட்டுமே காரணம் என்று சொல்லி கடந்து போவது சரியாக இருக்காது. மத்திய அரசு மீதான கோபமும் கணிசமான அளவுக்கு களமாடி உள்ளது. மோடி பிரதமரான பிறகு நடந்த எல்லா தேர்தல்களிலும் அவர் மட்டுமே பாரதீய ஜனதாவின் முகமாக முன்னிறுத்தப்பட்டார். இதுவரை கிடைத்த வெற்றிகளுக்கெல்லாம் அவர்தான் காரணம் என்றால், இப்போதைய தோல்விக்கும் அவரே காரணமாக இருக்க முடியும். இந்த முறை தேர்தல் பிரசாரத்தின் போது முன்பு போல மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய வாதங்களை அவரால் முன்வைக்க முடியாததைக் காண நேர்ந்தது. நான்கரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய, நேரடியாக மக்களை ஈர்த்த திட்டங்களை பட்டியலிட இயலவில்லை.

எனவே, நிச்சயமாக பாரதீய ஜனதா தங்களைச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. ‘மோடி அலை’ என்பதை மட்டுமே சொல்லி இனியும் வாக்குகளை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றில் சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை, அவை தந்த வலியை மறக்கும் அளவுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் அவை எல்லாம் சரியான முடிவுகள் என்று சொன்னால், அவற்றின் பலனை நேரடியாக மக்களை அனுபவிக்கச் செய்ய வேண்டுமல்லவா? அதில்லாமல் வாயால் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஆட்சிக்கட்டிலைத் தொலைத்திருக்கும் மூன்று மாநிலங்களுமே பாரதீய ஜனதாவுக்கு கட்டமைப்பிலும்,சிந்தாந்த ரீதியிலும் இரும்புக்கோட்டைகளாக இருந்தவை. செல்வாக்கான உள்ளூர் தலைவர்களை அக்கட்சி பெற்றிருந்த இந்த மாநிலங்களிலேயே இப்படியான சூழல் என்றால், நாட்டின் பிற பகுதிகளில் மக்களின் மனநிலை இன்னும் எதிராக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மோடியைப் போன்றே ராகுல்காந்திக்கும் தேர்தல் முடிவுகள் நிறைய செய்திகளைச் சொல்லி இருக்கின்றன. தலைவரான பிறகு சுவைக்கிற முதல் வெற்றி என்ற அடிப்படையில் அவர் மகிழ்ந்து கொள்ளலாமே தவிர, கொண்டாடி தீர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் ஆதரவு அலை அடித்துவிடவில்லை. அப்படி அடித்திருந்தால் சத்தீஷ்காரைப் போன்று மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் தலைவர்களை ஊக்குவித்தல், மாநிலக்கட்சிகளை அரவணைத்தல் என அவர்கள் போக வேண்டிய தொலைவும் அதிகமிருக்கிறது. மோடி எதிர்ப்பு அலை மட்டுமே காங்கிரசை கரையேற்றும் என்று நம்பியிருந்தால் கடைசி நேரத்தில் களம் எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும்.

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதிலும் இந்த தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி கணக்குகளை மாற்றிப் போடுவதற்கு காரணியாக அமையும். இரண்டு பெரிய தேசிய கட்சிகளுமே ‘பெரிய அண்ணன்‘ பாணியில் மாநிலக் கட்சிகளை அணுக முடியாத இக்கட்டில் அவர்களைத் தள்ளிவிட்டிருக்கின்றன இந்த முடிவுகள். மொத்தத்தில் 5 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்தேர்தலுக்கான முன்னோட்டம் என்று அடித்துச் சொல்லி விட முடியாது. வேண்டுமானால் அதற்கான களத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கும். இருவர் கரங்களிலும் இன்னும் நூற்று சொச்சம் நாட்களே இருக்கின்றன. என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். யார், என்ன செய்தாலும் முடிவு மக்கள் கையில்தான். ஜனநாயகத்தில் அவர்கள்தானே எல்லோருக்கும் எஜமானர்கள்!

கோமல் அன்பரசன், ஊடகவியலாளர்

Next Story