சிறப்புக் கட்டுரைகள்

உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்... + "||" + If you want to double your money

உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்...

உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால்...
எந்த விஷயத்திலும் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். பொருளாதாரத்திலும் அப்படித்தான்.
சேமிப்பு, முதலீடுதான் நம் பொருளாதார அஸ்திவாரத்தை வலுவாக்கும்.

சேமிப்பு என்கிறபோது, உலகப் பெரும் பணக்காரர் வாரன் பபெட் கூறிய மந்திர வார்த்தைகளைப் பின்பற்றினால் மாயாஜாலம் நிகழும்.

அதாவது, ‘செலவு செய்தபின் மிஞ்சிய பணத்தைச் சேமிக்காமல், சேமித்தபிறகு மிஞ்சும் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்’ என்கிறார், பபெட்.

அதேபோல, ‘தூங்கும்போதும் பணத்தைச் சம்பாதிக்கக்கூடிய வழியை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால், சாகும்வரை நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்றும் பபெட் சொல்கிறார்.

உங்களிடம் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா?

பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு போன்ற முதலீடுகளில் உங்களிடம் உள்ள பணத்தை வேகமாக இரட்டிப்பாக்க முடியும் என்றாலும் அவற்றில் ‘ரிஸ்க்’ உண்டு. எனவே, அவை போன்று ரிஸ்க் ஏதும் இல்லாமல் உங்கள் கையில் உள்ள பணத்தை எப்படி ‘பிக்சட் டெபாசிட்’ மூலம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவது எனப் பார்க்கலாம்...

உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை ஆண்டுக்கு 8 சதவீதம் லாபம் அளிக்கக்கூடிய ஒரு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடத்துக்கு முதலீடு செய்யுங்கள்.

இப்படிச் செய்யும்போது நீங்கள் முதலீடு செய்த ஒரு லட்சம் ரூபாய், ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

இதுவே இரண்டாம் வருடம் முடியும்போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் 8 சதவீதக் கூட்டு வட்டி கிடைக்கும். இப்படியே தொடர்ந்து 10 வருடம் செய்திருக்கும்போது உங்கள் பணம் இரட்டிப்பாகி 2 லட்சத்து 15 ஆயிரத்து 892 ரூபாயாக இருக்கும்.

ஆனால் தற்போது பெரும்பாலான வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 6.8 சதவீத வட்டி விகித லாபத்தை மட்டுமே அளிக்கின்றன. எனவே 8 சதவீதத்துக்கும் அதிகமான லாபம் அளிக்கும் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது எளிமையாக 10 வருடத்தில் இரட்டிப்பாக்க முடியும்.

வீடு, கார் அல்லது அது போன்றவற்றை நீங்கள் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும்போது பணத்தை இப்படிச் சேமிக்கும் போது எளிதாக ரிஸ்க், பயம் ஏதுமில்லாமல் முதலீட்டைப் பெருக்கலாம்.

மொத்தமாக பெரும் தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது? அவர்கள், ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாத தவணையாக முதலீடு செய்து தமது பணத்தின் மீது லாபம் பெற முடியும்.