நட்சத்திர வெளியிடையை அடைந்தது வாயேஜர் 2 விண்கலம்


நட்சத்திர வெளியிடையை அடைந்தது வாயேஜர் 2 விண்கலம்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:20 AM GMT (Updated: 17 Dec 2018 11:22 AM GMT)

முன்பொரு காலத்தில், சில ஆயிரம் கி.மீ தூரத்தில் உள்ள இலங்கை, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நம் பக்கத்து நாடுகளுக்கு சென்றுவந்து விட்டால் போதும், ‘சீமைக்கு சென்று வந்தவர்’ என்ற அடைமொழியோடு வலம் வரலாம்.

ஆனால் தற்போது, உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சுமார் 24 மணிநேரத்தில் சென்றுவிடலாம். எப்படி பார்த்தாலும் நாம் பூமிக்குள்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறோம். ஆக இது ஒரு பெரிய விஷயமில்லை.

ஆனால் நம் பூமியைத் தாண்டி நிலவுக்கோ, செவ்வாய் கிரகத்துக்கோ சென்று வந்துவிட்டால் அது மிகப்பெரிய சாதனைதான். ஏனென்றால், அது இன்னும் முழுமையாக சாத்தியப்படவில்லை. உலகில் முதல் முறையாக, நம் நட்சத்திர (சூரிய) மண்டலத்தையே தாண்டி நட்சத்திரங்களுக்கு இடையிலான பகுதியான ‘இன்டெர்ஸ்டெல்லார் ஸ்பேஸ்’ அல்லது நட்சத்திர வெளியிடையை வெற்றிகரமாக சென்றடைந்து அசத்தியிருக்கிறது நாசாவின் வாயேஜர் 2 (Voyager 2) விண்கலம்.

அதுமட்டுமல்லாமல், சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கடந்த 1977-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இந்த வாயேஜர் 2 விண்கலமானது தற்போதுதான் நம் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களை மூடியிருக்கும் ஹீலியோஸ்பியர் (Heliosphere) எனும் பகுதியை கடந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சூரியனில் இருந்து வெளியாகும் மின்னூட்டப்பட்ட துகள்களால் ஆன மற்றும் சோலார் காற்று காரணமாக உருவாகும் ஒரு மிகப்பெரிய குமிழிதான் இந்த ஹீலியோஸ்பியர் என்பது.

முக்கியமாக, கடந்த நவம்பர் 5-ம் தேதி ஹீலியோஸ்பியரை விட்டு வெளியேறிய வாயேஜர் 2 விண்கலம் தான் மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் ஹீலியோஸ்பியரை தாண்டிச் சென்றுள்ள உலகின் இரண்டாவது விண்கலம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வாயேஜர் 2 விண்ணில் ஏவப்படுவதற்கு சுமார் 16 நாட்களுக்கு முன்னர், விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர் 1 கடந்த 2012-ம் ஆண்டிலேயே ஹீலியோஸ்பியரை விட்டு வெளியேறிவிட்டது. ஆக வாயேஜர் 1 தான் மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் ஹீலியோஸ்பியரை விட்டு முதன்முதலில் வெளியேறிய உலகின் முதல் விண்கலம் ஆகும்.

இதைக்கேட்கும்போது, ‘ஓ....வாயேஜர் 2 இரண்டாவதாகத்தான் ஹீலியோஸ்பியரை விட்டு வெளியேறி இருக்கிறதா?’ என்று வாயேஜர் 2 குறித்து அலட்சியமாக எண்ணாதீர்கள். ஏனெனில், வாயேஜர் 2 கொஞ்சம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாகத்தான் வந்திருக்கிறது.

எப்படி என்றால், ஹீலியோஸ்பியருக்கும் நட்சத்திரங்களுக்கு இடையிலான பகுதிக்கும் இடையில் உள்ள, சூரியனுடைய வெப்பக்காற்றும் நட்சத்திர வெளியிடையின் குளிர்ந்த மற்றும் அடர்த்தியான காற்றும் சங்கமிக்கும் ‘ஹீலியோபாஸ்’ (Heliopause) எனும் பகுதியில் என்ன இருக்கிறது என்பது குறித்த துல்லியமான தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக்கூடிய அசாத்திய திறன்கொண்ட ‘பிளாஸ்மா சயன்ஸ் எக்ஸ்பெரிமென்ட்’ எனும் அதிநவீன விண்வெளி ஆய்வுக் கருவியானது வாயேஜர் 2-ல் தான் இருக்கிறது.

தற்போது, பூமியிலிருந்து சுமார் 1800 கோடி கி.மீ தூரத்தில் பறந்துகொண்டு இருக்கிறது வாயேஜர் 2. இந்த தூரம் என்பது பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு சுமார் 164 முறை சென்றுவரக்கூடிய தூரம் ஆகும். மேலும், தற்போது வாயேஜர் 2-வுடன் தொடர்பில் இருக்கும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு ஒளியினுடைய வேகத்தில் தகவல்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறதாம் வாயேஜர் 2. அப்படியிருந்தும், அந்த தகவல்கள் பூமியை வந்தடைய சுமார் 16.5 மணி நேரங்கள் ஆகிறதாம்.

சூரியனில் இருந்து பூமிக்கு வர சூரிய ஒளி எடுத்துக்கொள்ளும் நேரம் 8 நிமிடங்களே. முக்கியமாக, சூரியனில் இருந்து வெளியாகும் பிளாஸ்மாவின் மின்சாரத்தைப் பயன்படுத்தி சோலார் காற்றின் வேகம், அடர்த்தி, அழுத்தம் மற்றும் பாய்மம் ஆகிய பண்புகள் தொடர்பான தகவல்களை வாயேஜர் 2-வில் உள்ள பி.எல்.எஸ். (PLS) கருவியானது சேகரிக்கும். அதுமட்டுமல்லாமல், தற்போது செவ்வாய் கிரகத்தின் சப்தங்களை கேட்கத் தொடங்கியுள்ள மனிதர்களாகிய நாம் வருகிற 2025-ம் ஆண்டில் சூரியனையே தொட்டுவிடலாம் என்கிறார் இதுகுறித்து ஆய்வு நடத்தும் விஞ்ஞானி ரிச்சர்ட்சன்.

வாயேஜர் 2-ல் இருக்கும் பி.எல்.எஸ். கருவி மட்டுமல்லாமல், அதிலுள்ள the cosmic ray subsystem, the low energy charged particle instrument and the magnetometer ஆகிய மூன்று பிற கருவிகளில் இருந்து கிடைத்த தகவல்களையும் வைத்து வாயேஜர் 2 ஹீலியோபாஸ் பகுதியை தாண்டிவிட்டது என்று உறுதி செய்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

நட்சத்திர வெளியிடை குறித்த தகவல்களை மெல்ல மெல்ல சேகரிக்கத் தொடங்கியுள்ள வாயேஜர் 2 மற்றும் வாயேஜர் 1 விண்கலங்கள் ஹீலியோஸ் பியரை தாண்டிவிட்டாலும் கூட இன்னும் நம் சூரிய மண்டலத்தை தாண்டி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சூரியனுடைய ஈர்ப்பு விசையால் பற்றி இழுக்கப்படும் சிறு பொருட்களின் தொகுப்பான ஊர்ட் கிளவுட் (Oort Cloud) பகுதியைத் தாண்டித்தான் சூரிய மண்டலத்தின் எல்லை உள்ளது என்றும், வாயேஜர் 2 அதனைக் கடந்துசெல்ல எப்படியும் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளாவது ஆகும் என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

ஆக மொத்தத்தில், வாயேஜர் 2 காரணமாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நட்சத்திர வெளியிடை பகுதியானது நம் பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதிதான் என்றாலும், வருகிற ஆண்டுகளில் நட்சத்திரங்களுக்கு இடையில் உள்ள பல அதிசயங்களும் மர்மங்களும் மெல்ல மெல்ல கண்டுபிடிக்கப்படும் என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.

தொகுப்பு: ஹரிநாராயணன்

Next Story