பிளாஸ்டிக் தடையும்... குழப்பமும்...


பிளாஸ்டிக் தடையும்... குழப்பமும்...
x
தினத்தந்தி 7 Jan 2019 5:06 AM GMT (Updated: 7 Jan 2019 5:06 AM GMT)

பசுமையை நோக்கிய பயணத்தின் வெற்றிப்படிக்கட்டாக இந்த புத்தாண்டு தமிழகத்தில் இனிதே பிறந்திருக்கிறது.

பசுமையின் விழிப்புணர்வு படிப்படியாக பிளாஸ்டிக் பயன்பாட்டின் மூலமாக ஏற்படும் தீமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அதன் பாதிப்பை நாம் நேரில் காணமுடியும் அளவுக்கு குப்பை குவியலாக நம் முன் குவிந்த பிளாஸ்டிக் பொருட்களே உதாரணம்.

காலையில் எழுந்து டாஸ்மாக் கடையோரமாகவோ, திருமண மண்டபங்கள் பகுதியிலோ, திருவிழாக்கள் முடிந்த இடத்திலோ குப்பைகளை அகற்றுவதற்கு முன்பு நடந்து சென்றால் பிளாஸ்டிக் தம்ளர்களும், தண்ணீர் காலி பாக்கெட்டுகளும் குவிந்து கிடப்பதை பார்க்க முடிந்தது. அதுமட்டுமில்லாமல் தீபாவளி பண்டிகை அன்று சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களில் கடை வீதிகளுக்கு சென்று பார்த்தால் பிளாஸ்டிக் பைகள் குப்பை, குப்பையாக சிதறி ரோட்டில் கிடப்பதை பார்க்க முடியும்.

இவ்வாறு சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சிக்காக பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விக்கு விடை கிடையாது. இந்த குப்பைகள் மட்கப்படுவதுமில்லை. எனவே இதற்கு தீர்வு என்பது பிளாஸ்டிக் தடை மட்டும்தான். அதனால்தான் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடைக்கான உத்தரவை பொதுமக்களும் வரவேற்கிறார்கள்.

பல ஆண்டுகளாக நமது வாழ்வில் அங்கம் வகுத்து, எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உடனடியாக பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதை அனைவரும் அறிவர். அதற்காக முதல்கட்டமாக தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருக்கிறது. இவை அனைத்தும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு நேரடியாக குப்பை மேட்டிற்கு செல்லும் பிளாஸ்டிக் வகைகள். இதை தடை செய்தால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இந்த திட்டத்தை வெற்றி கரமாக செயல்படுத்த அனைவரது முயற்சியும் தேவை.

உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் பொருட்களான தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், மெழுகு பூசப்பட்ட காகித தம்ளர்கள், பிளாஸ்டிக் டீ தம்ளர்கள், பிளாஸ்டிக் தம்ளர்கள், தெர்மக்கோல் தம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் ஆகிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை உற்பத்தி செய்தாலோ, விற்பனை செய்தாலோ, பயன்படுத்துவதற்காக வைத்திருந்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்படுவதாக பல்வேறு இடங்களில் வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக மளிகை பொருட்களில் பருப்பு, சர்க்கரை, மிளகு, சீரகம் உள்ளிட்ட பொருட் களை பேக்கிங் செய்து வைத்திருந்தால் அதற்கு அனுமதி இருக்கிறது. இதேபோல் குடோன்களில் வைத்து அந்த பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை பேக்கிங் செய்து மளிகை கடைகளுக்கு அனுப்பி வைக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் சில்லரை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக அதே பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்தால் அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் உண்டு. இதுபோன்ற தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்வதால் சிறு, குறு மற்றும் நடுத்தர பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் முதல் விற்பனையாளர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர மற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் சிறு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கடலை மிட்டாய், முறுக்கு தயாரிப்பு போன்ற குடிசை தொழில் நடத்தி வருபவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து கடைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் கடலை மிட்டாய் தயாரிக்கும் இடத்திற்கும் சென்று லட்சக்கணக்கான மதிப்பிலான காலி பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்திருப்பது, குடிசை தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

தடை செய்யப்படாத பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்த பொருட்களையோ, குடோன்களில் பேக்கிங் செய்வதற்காக பிளாஸ்டிக் கவர்களையோ வைத்திருந்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், அதுவே மளிகை கடைகள், மாவு விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதே பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த அனுமதி கிடையாது என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம் தருகிறார்கள். இது பிளாஸ்டிக் பயன்பாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், குடிசை தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக உற்பத்தியாளர்கள், வியாபாரிகளை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, விளக்கம் அளிக்கவும் அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக் தடைக்கான உத்தரவை அனைத்து தரப்பினரும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முடியும்.

- தாமுசரோ


Next Story