மண்பானையும்... மகத்துவங்களும்...!


மண்பானையும்... மகத்துவங்களும்...!
x
தினத்தந்தி 11 Jan 2019 10:43 AM GMT (Updated: 11 Jan 2019 10:43 AM GMT)

குட்டீஸ், நீங்கள் மண்பானையை பார்த்திருக்கிறீர்களா? மண்பானையில் சமைத்த உணவை சாப்பிட்டு இருக்கிறீர்களா?

மண்பானையில் வைத்த குளிர்ந்த நீரை பருகி இருக்கிறீர்களா? இவையெல்லாம் தனிச்சுவை கொண்டவை. பொங்கல் பண்டிகை சமயத்தில்தான் நீங்கள் மண்பானையைப் பார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பழங்காலத்தில் மண்பானைகள்தான் மகத்துவம் நிறைந்த பாத்திரமாக விளங்கியது. இன்று அதன் அருமை பெருமைகளை அறிந்து பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. மண்பானையின் வரலாறும், அதன் மகத்துவங்களையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

மண்பானைகள் நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே பயன்படுத்தப்படுகிறது. கிழக்கு ஐரோப்பாவில் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பானைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் பாரம்பரியத்திற்கேற்ற வகையில் பானைகளும், மண்பாண்டங்களும் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளன.

மண்பானை களிமண்ணால் செய்யப்படும் ஒரு பாத்திர வகையாகும். சமையலுக்கும், பல்வேறு பொருட்களை பத்திரப்படுத்தவும் மண்பானைகள் பயன்படுத்தப்பட்டன.

தேவைக்கும், அதில் சேமிக்கப்படும் பொருட்களுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு அளவுகளில் மண்பானைகள் தயாரிக்கப்பட்டன. உதாரணமாக நீரை சேமித்து வைக்கவும், சமைக்கவும் சராசரி அளவுடைய மண்பானைகள் தயாரிக்கப்பட்டன. குழம்பு வைப்பதற்கு அளவில் சிறிய பானைகளும், தானியங்களை சேமிக்க பெரிய அளவிலான பானைகளும் உருவாக்கப்பட்டன.

அளவில் மிகப்பெரிய பானைகளை குறுக்கை என்று அழைப்பார்கள். இதை மருவிய நிலையில் குலுக்கை என்று கூறுவோரும் உண்டு. இவற்றில் நெல் போன்ற தானியங்களை சேமித்து வைப்பார்கள். இவை சில அடி உயரங்களில் இருந்து, ஆள் உயரத்தையும் தாண்டி பெரியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பானைகள் உருண்டை வடிவிலும், உள்ளே வெற்றிடம் கொண்டதாகவும் இருக்கும். கழுத்துப்பகுதி சிறுத்தும், கையில் பிடிக்க ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பானை தயாரிக்க பல முறைகள் உள்ளன. மண்ணின் தன்மைக்கு ஏற்ப இதன் தயாரிப்பு முறை மாறுபடும். பானையை உருவாக்க களிமண் பயன்படுத்தப்படும். இதை நீர்சேர்த்து கெட்டியாக பிசைந்து கொண்டு, பானை உருவாக்கும் பிரத்தியேக சக்கரத்தில் சாந்தை சுழலவிட்டு கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வனைந்து மண்பானையை தயாரிப்பார்கள். பிறகு அதை தீயில் சுட்டு எடுப்பார்கள்.

மண்பானை தயாரிப்பில் வெறும் களிமண் மட்டுமல்லாது கருப்பட்டி, உப்பு, கடுக்காய் சேர்க்கப்படுவது உண்டு. வண்ணத்திற்காக நிறப்பொடிகளையும் சேர்க்கிறார்கள்.

உலகம் முழுக்க மண்பாண்டப் பொருட்கள் விதவிதமாக தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு பானைக்கும் தனிப் பெயர் உண்டு. சோறு சமைக்கப் பயன்படும் பானையை அடிசிற்பானை என அழைத்தனர். கஞ்சியை வடிப்பதற்கான வாய் அகன்ற மற்றொரு பானையை பயன்படுத்தினர். இதை கஞ்சிப்பானை என்று அழைத்தனர்.

அடிப்புறம் சுருங்கி, மேற்பகுதி விரிந்தபானை, அக்குப்பானை எனப்படுகிறது. இதேபோல மேல்பகுதியும், அடிப்பகுதியும் சிறுத்து, நடுப்பகுதி அகலமாக இருக்கும் பானை, அகட்டுப்பானை எனப்பட்டது.

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிப் பயன்படுத்தப்படும் பானைகளை அடுக்குப்பானை என குறிப்பிட்டனர்.

அதேபோல திருமணத்தின்போது நாட்டப்படும் அரசாணி கால் கம்பத்திற்கு அருகே ஒரு மங்கலப்பானையை வைப்பார்கள், அதற்கு அரசாணிப் பானை என்று பெயர். மேலும், பழமையான திருமணங்களில் 7 பானை வரிசை என்ற பெயரில் பானைகளை அடுக்கி வைத்து ஒருவகை சடங்கு நடத்தப்பட்டிருக்கிறது.

உறியடி திருவிழா பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். பானையில் மஞ்சள் கலவை புனித நீர் அல்லது சில பொருட்களை வைத்து உயரத்தில் தொங்கவிட்டு, அதை அடித்து உடைக்கும் போட்டி நடத்தப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதற்கென தயாரிக்கப்படும் பானைகள் உறிப்பானை எனப்பட்டது.

இரும்பை உருக்கி வார்க்கவும், ஒருவகை பானைகளை நம் மூதாதையர்கள் தயாரித்துள்ளனர். இதற்கு எக்குப்பானை என்று பெயர்.

கர்நாடக இசைக்கருவியான கடம், பானை வடிவம் கொண்டதுதான். தட்டித்தாளம் உருவாக்குவதற்கேற்ப இது கெட்டியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பொங்கல் பண்டிகைக்கு தயாரிக்கப்படும் பானைகளில் வண்ணங்கள் பூசப்பட்டு, அழகுப்பொருளாக விற்கப்படுகிறது. ஓவியம் வரையப்பட்ட பானைகள், ஓவியப்பானை என்றும், எழுத்துகள் எழுதப்பட்ட பானை எழுத்துப்பானை என்றும் அழைக்கப்பட்டன.

பானைகளைக் கொண்டு மிதவை செய்து பயன்படுத்தி உள்ளனர். மிதவையின் ஓரத்தில் கட்டப்பட்ட பானைகள் கட்டுப்பானைகள் என்று அழைக்கப்பட்டன.

கோவில் பண்டிகையில் கரகம் எடுப்பதற்கு தனியே கரகப்பானைகள் தயாரிக்கப்பட்டன.

தானியங்களை அலசிய நீரை ஊற்றி கால்நடைகளுக்கு வழங்குவதற்காக தனியே ஒருவகை பானையை பயன்படுத்தினர். இதுவே கழுநீர்ப் பானை என்றும் கழனிப் பானை என்றும் அழைக்கப்பட்டது. காடிப்பானை என்றும் சிலர் அழைப்பதுண்டு.

வளைந்த விளிம்பிற்குப் பதிலாக பிடித்து தூக்க வசதியாக காது வைத்து உருவாக்கப்பாட்ட பானைகள், காதுப்பானை எனப்பட்டன.

கூடை வடிவிலும், பானை செய்து பயன்படுத்தி உள்ளனர். இவை கூடைப்பானைகள் எனப்பட்டன.

இறந்தவர்களை அடக்கம் செய்ததும் பானையில்தான். இவை சவப்பானை அல்லது ஈமத்தாழி எனப்பட்டன.

சுவற்றில் தொங்கவிடும் வகையிலும் பானைகள் வனையப்பட்டன. இவை தோற்பானை என்று அழைக்கப்பட்டன. தரையில் வைக்கும்போது உருளாமல் இருப்பதற்காக 4 கால்கள் கொண்ட நாற்கால் பானைகளும் இருந்துள்ளன.

காற்று புகும் வகையில் துளையிடப்பட்ட பானைகளை பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகித்தனர். இவை பொள்ளற்பானை எனப்பட்டது.

மடங்களில், திருமண வீடுகளில் சமைப்பதற்கு இன்று பெரிய பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்போது பெரிய வடிவ பானைகள் இதற்காக தயாரிக்கப்பட்டன. அவை மடைக்கலப் பானை எனப்பட்டது.

மண்பானைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவை. பயன்படுத்த எளிதானவை. ஆரோக்கியமும் தரக்கூடியவை. மண்பானையின் மகத்துவம் அறிந்து அதைப் பயன்படுத்தி நன்மை பெறலாம்.

புதையல் பானைகள்

மண்பானைகளை நாணயங்களை சேமித்து வைக்கவும் பயன்படுத்தினார்கள். தரைக்கு அடியில் குழி தோண்டிவைத்து காசுகளை போட்டு வைத்தனர். மன்னர்களும், மக்களும் இப்படி ரகசியமாக பயன்படுத்த்திய காசுப்பானைகள், பொற்பானைகள் பிற்காலத்தில் புதையலாக தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன. 

பெருமையின் ரகசியம்

மண்பானைகள் இன்று மடிந்துவிட்டதாகச் சொல்லலாம். அவற்றை அருங்காட்சியகங்களில்தான் பார்க்க முடிகிறது. ஆனால் நம் நமது மூதாதையர்கள் 69 வகையான பானைகளை பயன்படுத்தி உள்ளனர். நாம் எல்லாவற்றையும் பொதுவாக பானை என்றே அழைக்கிறோம். ஆனால் முன்னோர் பயன்படுத்திய ஒவ்வொரு பயன்பாட்டிற்கான பானையிலும் சிறிது வித்தியாசம் இருக்கும். அதற்கென் தனி பெயர்களும் உண்டு. உதாரணமாக தானியங்களை சேமித்து வைக்கப்பயன்படும் பானைகளை அகப்பானை என்று அழைத்தனர். அகம் என்பது தானியங்கள், தவசங்களைக் குறிக்கும் இன்னொரு சொல்லாகும்.

மண்பானை சமையல் ருசி நிறைந்தது. மண்பானையில் உள்ள நுண்துளைகள் வெப்பத்தையும், நீராவியையும் சீராக பரவச் செய்வதால் உணவு சுவை நிறைந்ததாக மாறுவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதுபோலத்தான் மண்பானையில் வைக்கப்படும் நீரும், நுண்துளைகளால் குளிர்ச்சியாக பராமரிக்கப்படுகிறது. மண்பானை சமையல் நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

Next Story