பருவநிலை மாற்றம் தொடர்பான ‘இறுதி எச்சரிக்கை’


பருவநிலை மாற்றம் தொடர்பான ‘இறுதி எச்சரிக்கை’
x
தினத்தந்தி 12 Jan 2019 12:27 PM GMT (Updated: 12 Jan 2019 12:27 PM GMT)

புவி பருவநிலை மாற்றம் குறித்த ‘இறுதி எச்சரிக்கை’ வெளியிடப்பட்டிருக்கிறது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேச அமைப்பான ‘பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளிடை குழு’, ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டது.

தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட புவியின் சராசரி வெப்பநிலை தற்போது 1 டிகிரி செல்சியஸ் கூடியுள்ள நிலையில், இது 1.5 டிகிரிக்கு மிகாமல் தடுக்க வேண்டும் என்று இந்த சிறப்பு அறிக்கை இலக்கு நிர்ணயித்தது.

ஆனால், 3 டிகிரி உயர்வை நோக்கி புவியின் வெப்பநிலை செல்லும் நிலையில் அதை தடுப்பதற்கு தீவிரமான, முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் கொண்டு வரவேண்டும். இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு 2035-க்குள் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு செலவாகும் என்கிறது இந்த அறிக்கை.

குறுகிய காலத்தில் பார்த்தால் இது பெரிய தொகை. ஆனால், இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கார்பன்-டை-ஆக்சைடை சூழலில் இருந்து நீக்கம் செய்தே ஆகவேண்டிய நிலை ஏற்படும்போது ஆகும் செலவை ஒப்பிட்டால் தற்போதைய செலவு மதிப்பீடு மிகவும் மலிவானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வுக்குள் கட்டுப்படுத்த முடியாமல் வெப்பநிலை உயர்வு 2 டிகிரி அளவுக்குச் செல்லுமானால், கடலடி பவளப் பாறைகள் முற்றிலும் அழியும். உலக கடல் மட்டம் 10 செ.மீ. உயரும். ஒரு கோடிப் பேர் கூடுதலாக வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

கடல் வெப்பநிலை, கடல் அமிலத்தன்மை வெகுவாக அதிகரிக்கும், அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றை விளைவிக்கும் திறன் பாதிக்கப்படும். ஏற்கனவே நாம் வந்தடைந்துள்ள, 1 டிகிரி வெப்பநிலை அதிகரிப்பு என்பதே அபாயகட்டம்தான் என இந்த அறிக்கையைத் தயாரித்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மூன்று ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. புவி உயிர்க்கோளாக நீடிக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையாக இந்த அறிக்கை பார்க்கப்படுகிறது.

Next Story