சிறப்புக் கட்டுரைகள்

உயர்ந்த பதவியும்.. நிமிர்ந்த வாழ்க்கையும்.. + "||" + Superior position Erect life ..

உயர்ந்த பதவியும்.. நிமிர்ந்த வாழ்க்கையும்..

உயர்ந்த பதவியும்.. நிமிர்ந்த வாழ்க்கையும்..
“காலில் கொலுசு அணிந்துகொண்டு அது குலுங்கும் ஓசையோடு நடக்க நான் ஆசைப்பட்டேன்.
“காலில் கொலுசு அணிந்துகொண்டு அது குலுங்கும் ஓசையோடு நடக்க நான் ஆசைப்பட்டேன். ஆனால் ஆணாக இருந்த நான் கொலுசு அணிந்தால் என்னை குடும்பத்தினர் சும்மா விடமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் ஆறாம் வகுப்பு படித்தபோது என் அம்மா, அவருக்காக கொலுசுகள் வாங்கினார். அம்மா இல்லாத நேரம் பார்த்து நான் அதை எடுத்து என் சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். அம்மாவும், அக்காவும் கொலுசை காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தபோது நான் பள்ளிக்கு கிளம்பினேன். பாதி தூரம் சென்றதும் காலில் கொலுசை அணிந்துகொண்டேன்.

பள்ளியில் கொலுசோடு என்னை பார்த்தவர்கள் கிண்டலடித்து சிரித்தார்கள். ஆனால் நான் மகிழ்ச்சியில் என்னையே மறந்திருந்ததால், யாருடைய கிண்டலும் என் காதுகளில் விழவில்லை. நான் பள்ளிக்கு கொலுசு அணிந்து வந்த தகவல் தோழி ஒருத்தி மூலம் என் அம்மாவுக்கு தெரிந்துவிட்டது. வீட்டிற்கு சென்றதும் ரத்தம் வரும் அளவுக்கு அம்மா என்னை அடித்தார். அப்போது காயமடைந்த தழும்புகள் இப்போதும் என் உடலில் இருக்கிறது. இப்போது நான் பெண்ணாகி, கொலுசு அணிந்து ஆனந்த மடைந்தாலும், அந்த வலி நினைவுகள் வரத்தான் செய்கின்றன” என்கிறார், சாரா ஷெய்க்கா.

இவர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. அடுத்து ஆண் குழந்தையாக இவர் பிறந்ததும் அதிக மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சாராவுக்கு இரண்டு வயதானபோது, தந்தை குடும்பத்தை பிரிந்து சென்றுவிட்டார். அதனால் குழந்தைகளை வளர்க்க, தாயார் தனிமையில் போராடியிருக்கிறார்.

“தந்தையின் தவறான முடிவால் எங்கள் வாழ்க்கை போராட்டக் களமாகிவிட்டது. எனது சிறுவயது பருவம் அவ்வளவு மகிழ்ச்சியாக அமையவில்லை. நான் ஆறு வயதாக இருந்தபோது என் அக்காளுக்கு திருமணம் நடந்தது. என் அக்காள் கணவர் மிகுந்த கோபக்காரர். நான் பெண்களுடன் சென்றாலோ, கண்மை இட்டுக்கொண்டாலோ, நெயில் பாலீஷ் போட்டுக்கொண்டாலோ என்னை அடித்து உதைப்பார். அவர் முரட்டுத்தனமாக என்னை ஏன் தாக்குகிறார் என்பதைக்கூட அந்த வயதில் என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. நான் அடிவாங்கிக்கொண்டு அலறுவதை அம்மாவும் மவுனமாக நின்று பார்த்துக்கொண்டிருப்பார்.

நான் வீட்டின் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அங்கு ஆண் நண்பர்கள் யாரும் கிடையாது. நிஷா என்ற ஒரே ஒரு தோழி மட்டும் இருந்தாள். பத்தாம் வகுப்பு வரை அவள் மட்டுமே என் தோழி. பெண்களை போன்று ஹேன்ட் பேக் போட்டுக்கொண்டு, குடையை பிடித்துக்கொண்டு செல்ல ஆசைப்படுவேன். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அக்காளின் உடைகளை அணிந்து அழகுபார்த்து மகிழ்வேன்” என்று கூறும், சாரா ஷெய்க்காவின் உள்ளுணர்வுகளை பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைவிழா நிறைவேற்றி வைத்திருக்கிறது.

‘ஸ்கூல் யூத் பெஸ்டிவலில்’ இவர் நாடோடி நடனப் போட்டியில் விரும்பி சேர்ந்திருக்கிறார். அதில் பெண் வேடத்தை தேர்ந்தெடுத்து நளின மாக உடை அணிந்து, ஆபரணங்களும் அணிந்து அபாரமாக ஆடியிருக்கிறார். அது அவரது மனதுக்கும், உடலுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

“நான் சிறு வயதில் இருந்தே நடனம் கற்றேன். கலாமண்டலம் ராதாமணி எனது குரு. ஆண் உடலும், பெண் மனதுமாக நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது உடற்கூறு பற்றி ஆசிரியை பாடம் நடத்துவார். அப்போது திருநங்கைகளின் உடல்வாகு பற்றி கூறும்போது சக மாணவர்கள் எல்லோரும் என்னை பார்த்து நக்கலாக சிரிப்பார்கள். அதன் பின்புதான் திருநங்கைகள் பற்றி ஆசிரியர் ஒருவர் எனக்கு விளக்கமாக சொன்னார். அதை தொடர்ந்து நான் திருநங்கைகள் பற்றிய விஞ்ஞானபூர்வமான கட்டுரைகளை படித்து, அவர்களை பற்றி தெள்ளத்தெளிவாக அறிந்தேன். ஆனால் என் மன உணர்வுகளை என் குடும்பத்தார் யாரும் கண்டுகொள்ளவில்லை. என்னை அடித்து காயப்படுத்தினாலும், எனது பெண் உடைகளை- ஆபரணங்களை எரித்தாலும் நான் மனம் மாறிவிடுவேன் என்று தவறாக நினைத்துக்கொண்டு என்மீது வன்முறைகளை ஏவிவிட்டார்கள்.

அவைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். அங்கிருந்த பெண்மணி என்னை அவரது மகள் போன்று பாதுகாத்தார். ஒரு மாதம் கடந்ததும், நான் அங்கிருப்பது தெரிந்து என் தாயார் வந்து அழைத்தார். எவ்வளவோ நிர்பந்தம் செய்தும் நான் அம்மாவுடன் செல்லவில்லை. சென்றிருந்தால் நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அந்த பெண்மணி வீட்டிலே தங்கியதால்தான் நான் இன்றும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அங்கிருந்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னை வந்தேன்” என்கிறார்.

சாரா, சென்னையில் வேலைபார்த்துக்கொண்டே படிப்பையும் தொடர்ந்திருக்கிறார். எம்.எஸ்சி. மைக்ரோபயாலஜி, எம்.பி.ஏ. போன்றவைகளை படித்துள்ளார்.

“படிப்பை முடித்துவிட்டு கொல்லத்திற்கு சென்றேன். சென்னையில் கிடைக்கும் வரவேற்பு அங்கு கிடைக்கவில்லை. அங்கு ரெயிலில் செல்லும்போதுகூட நான் மோசமான அனுபவத்தை பெற்றிருக்கிறேன். என் வீட்டில் உள்ளவர்கள், எனக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துவைத்தால் நான் உணர்வுரீதியாக சரியாகிவிடுவேன் என்று தப்புக்கணக்கு போட்டார்கள். அக்காள் கணவர், நான் ஜிம்முக்கு போய் பயிற்சி பெற்றால் முழு ஆணாகிவிடுவேன் என்ற தவறான நம்பிக்கையில் இருந்தார். வீட்டில் உள்ளவர்களின் தொந்தரவை தாங்கிக்கொள்ள முடியாமல் விசிட்டிங் விசாவில் அபுதாபி சென்றேன். அங்கிருந்துகொண்டுதான் என்னை பெண்ணாக மாற்றுவதற்கான ஆபரேஷன் பற்றியும், எனது புதிய பெயர் பற்றி எல்லாம் சிந்தித்தேன். பின்பு சென்னை வந்து அந்த மாற்றங்களை எல்லாம் செய்து, உருவத்தாலும், பெயராலும் நான் பெண் ஆனேன்” என்று கூறும் சாரா, பிரபலமான நிறுவனங்களில் சிலவற்றில் உயர்பதவி வகித்துள்ளார். தற்போது மல்ட்டி நேஷனல் நிறுவனம் ஒன்றில் எச்.ஆர்.கண்சல்ட்டன்ட் பணியில் இருக்கிறார்.

“இப்போது நான் சட்டக் கல்வியும் கற்றுக்கொண்டிருக்கிறேன். திருமணத்தை பற்றியும் சிந்திக்கிறேன். நான் அழகாக இருப்பதால் சிலர் முன்வருகிறார்கள். ஆனால் முறைப்படியான திருமண வாழ்க்கை வாழ வேண்டும் என்றதும் விலகிவிடுகிறார்கள். தாம்பத்ய விஷயத்திலும் ஒரு ஆணை திருப்திப்படுத்த என்னால் முடியும். கர்ப்பப்பை இல்லாததால் தாய்மை மட்டுமே அடைய முடியாது. இதை எல்லாம் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்த முன்வரும் பொருத்தமான ஆணை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்” என்று தன்னம்பிக்கை பொங்க சொல்கிறார், சாரா ஷெய்க்கா.

இவர் நம்பிக்கை வெல்லட்டும்!