குலை குலையா முந்திரிக்கா... நரியே நரியே சுத்தி வா...


குலை குலையா முந்திரிக்கா... நரியே நரியே சுத்தி வா...
x
தினத்தந்தி 16 Jan 2019 7:41 AM GMT (Updated: 16 Jan 2019 7:41 AM GMT)

குலை குலையா முந்திரிக்கா- கிராமப்புறங்களில் சிறுவர்-சிறுமிகள் இன்றும் தங்களது பொழுதை ஜாலியாக கழிப்பதற்காக விளையாடும் கிராமிய விளையாட்டாக திகழ்கிறது.

இந்த விளையாட்டின் போது ஒரு அருமையான பாடலை பாடியபடிதான் விளையாடுவார்கள். அந்த பாட்டு இதுதான்...

குலை குலையா முந்திரிக்கா..!
நிறைய நிறைய சுத்திவா..!

ஓட்டு வீட்டுல ஏறுவேன்..!
ஈட்டியால குத்துவேன்..!

பச்சரிசியை தின்பேன்..!
பல்ல உடைப்பேன்..!

புழுங்க அரிசியை தின்பேன்..!
புதுப்பல்ல உடைப்பேன்..!

குலை குலையா முந்திரிக்கா..!
நரியே நரியே சுத்திவா..!

கொள்ளை அடிச்சவன் எங்கே இருக்கான்..!
கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி..!

அந்த காலத்தில் கிராமங்களில் உள்ள சிறுவர், சிறுமிகள் ஒன்றாக அமர்ந்து ‘குலை குலையா முந்திரிக்கா’ விளையாட்டை விளையாடுவதுண்டு. அதற்கு காரணம் பாடலுடன் விளையாடுவது எப்போதுமே குழந்தைகளுக்கு அதிக சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும் உண்டாக்கும்.

இந்த விளையாட்டை எத்தனை குழந்தைகள் வேண்டு மானாலும் ஒன்றாக சேர்ந்து விளையாடலாம். ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லா குழந்தைகளும் ஜாலியாக விளையாடக்கூடிய விளையாட்டு இதுவாகும்.

சரி இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்....

இந்த விளையாட்டில் இடையிடையே பாடல் வரும். இந்த பாடல் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக பாடப் படுகிறது. மற்ற விளையாட்டுகளை போல் விளையாடு வதற்கு அணி பிரிப்பது கிடையாது. ஆனால் குழு தலைவர் ஒருவர் உண்டு.

எல்லோரும் வட்டமாக உட்கார்ந்ததும் சுற்றி வருபவர் துண்டு அல்லது கர்ச்சீப் போன்ற துணி ஒன்றை எடுத்துக்கொண்டு, இந்த வட்டத்தை சுற்றி வேகமாக நடந்தவாறு முதல் அடியை பாட வேண்டும். சுற்றி வருபவர் ‘குலை குலையா முந்திரிக்கா..!’ என்று பாடுவார். திரும்ப குழுத் தலைவரும், ‘குலை குலையா முந்திரிக்கா..!’ என்று பாட, எல்லோரும் சேர்ந்து, ‘நிறைய நிறைய சுத்திவா..!’ என்று பாட வேண்டும். உடனே திரும்பவும், ‘ஓட்டு வீட்டுல ஏறுவேன்’ என்று குழுத்தலைவர் சொல்ல, ‘ஈட்டியால் குத்துவேன்..!’ என்று மற்ற குழந்தைகள் பாட வேண்டும். அடுத்து, ‘பச்சரிசியை தின்பேன்..!’ என்று சொல்ல, ‘பல்லை உடைப்பேன்’ என்று பாட வேண்டும்.

இப்படிச் சொன்னவுடனே குழுத்தலைவர் மீண்டும் ‘குலை குலையா முந்திரிக்கா..’ என்று முதல் அடியைப் பாடுவார். உடனே ‘நரியே நரியே சுத்திவா’ என்று மற்ற குழந்தைகள் பாட வேண்டும். அடுத்து ‘கொள்ளையடிச்சவன் எங்கு இருக்கிறான்?’ என்று குழுத்தலைவர் கேட்க, எல்லோரும், ‘கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி..!’ என்று ஒரே குரலில் சொல்வார்கள். பாட்டுப் பாடிக்கொண்டே சுற்றுபவர் வட்டத்தை சுற்றி ஓடிக்கொண்டே, கையில் வைத்திருக்கும் துணியை கீழே உட்கார்ந்திருக்கும் யார் பின்னாடியாவது தெரியாமல் போட்டுவிட்டு, திரும்பவும் சுற்றி வருவார். அவ்வாறு சுற்றி வருபவர் கையிலே துணி இல்லாததை பார்த்துவிட்டு, யார் பின்னால் துணி இருக்கிறதோ? அவர் அந்த துணியை எடுத்துக்கொண்டு சுற்றியவரை துரத்திக்கொண்டு போக வேண்டும். துணியால் அவர் முகத்தில் அடித்து விட்டால், அவர் “அவுட்”.

சுற்றியவர் வேகமாக ஓடிவந்து, யார் பின்னால் துண்டைப் போட்டாரோ, அவரோட இடத்திலே வந்து உட்கார்ந்துவிட்டால், துண்டைக் கையில் வைத்திருப்பவர் அவுட்.

ஒருவேளை, துண்டு பின்னால் இருப்பதை உட்கார்ந்திருப்பவர் கவனிக்கவில்லை என்றால், பக்கத்திலே உட்கார்ந்திருப்பவர் சைகையாலேயே சொல்வார்கள். அப்படியும் சொல்வதைக் கவனிக்காமல் இருந்தால், சுற்றிய நபர் வட்டத்தை ஒரு சுற்று சுற்றி வந்து, பின்னால் போட்ட துண்டை எடுப்பார். கவனிக்காமல் உட்கார்ந்திருப்பவர் முதுகில் துண்டால் அடித்து விட்டு ஓடுவார். உட்கார்ந்திருப்பவர் அப்போது எழுந்து, சுற்றியவரை விரட்டிப் பிடிக்க வேண்டும். இதில் அவுட் ஆகிறவர் மீண்டும் பாட்டு பாடிக்கொண்டே விளையாட்டை திரும்பவும் தொடர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் இன்றும் விளையாடப்படும் ‘குலை குலையா முந்திரிக்கா’ விளையாட்டை கோ-கோ விளையாட்டின் தாய் என்று சொல்கிறார்கள். சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு நேரத்தில் மாணவிகள் ஒன்றாக அமர்ந்து ‘குலை குலையா முந்திரிக்கா..!’ விளையாட்டை மிகவும் ஆர்வ மாக விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டு மூலம் சமயோசித ஆற்றல், உடல் திறன், மனதை ஒரு நிலைப் படுத் துதல் போன்றவை கிடைக்கிறது.

Next Story