பலம் தரும் ‘பச்ச குதிரை’


பலம் தரும் ‘பச்ச குதிரை’
x
தினத்தந்தி 16 Jan 2019 9:43 AM GMT (Updated: 16 Jan 2019 9:43 AM GMT)

உயரம் தாண்டும் போட்டியை பாரம்பரியமாகவே பச்சகுதிரை தாண்டுதல் என்னும் வடிவில் தமிழர்கள் ஆடிவருகிறார்கள்.

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல்... என்று தாண்டுவதில் பலவகை உண்டு. ஆனால், உயரம் தாண்டும் போட்டியை பாரம்பரியமாகவே பச்சகுதிரை தாண்டுதல் என்னும் வடிவில் தமிழர்கள் ஆடிவருகிறார்கள். கிராமங்களில் சிறுவர்கள் குழுவாக இணைந்து இதனை விளையாடுகிறார்கள். பச்சகுதிரை தாண்டுதலை ஜல்லிக்கட்டு வீரர்கள் தொடர்ந்து ஆடி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகும். மாடுபிடி வீரர்களுக்கு பச்சகுதிரை தாண்டுதல் ஒருவகை பயிற்சி ஆகும்.

பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வரும் காளையர்கள், தங்கள் பயிற்சியின் போது நேரம் ஒதுக்கி பச்சகுதிரையும் தாண்ட தவறுவது இல்லை. உயரத்துக்கு தகுந்தபடி வரிசையாக பலர் குனிந்து நிற்க அவர்கள் மீது கைகளை ஊன்றிக் கொண்டு தாண்ட வேண்டும்.

ஜல்லிக்கட்டின் போது வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் காளை சீறி பாய்ந்து வெளியே வரும். அந்த காளைகள் திமிறும். தனக்கு எதிராக வருபவர்களை கொம்புகளால் தூக்கி வீசி பந்தாடும். அவற்றின் கொம்புகளில் சிக்காமல் திமிலில் விழுந்து, காளையை அடக்கி தனது வீரத்தை பறைசாற்ற காத்திருப்பான் மாடு பிடிவீரன்.

இதற்காக கடுமையான பயிற்சிகளை பெற வேண்டும். அந்த பயிற்சியில் பச்சகுதிரை விளையாட்டு முக்கிய இடம் பிடிக்கிறது. வீரர்களின் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்க இது உதவுகிறது. காளைகளை அவற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, அடக்க தேவையான வலுவை பச்சகுதிரை விளையாட்டு தருகிறது. பச்சகுதிரை விளையாட்டில் கால்தாண்டல், ஆள்தாண்டல், குனிதல் என 3 நிலைகள் உள்ளன.

குறைந்தது 7 பேர் இந்த விளையாட்டில் பங்கேற்க வேண்டும். இவர் களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தரையில் அமர்ந்து ஒரு காலை மட்டும் நீட்டி இருப்பார். அதை மற்றவர்கள் தாண்டுவார்கள். அடுத்ததாக ஒரு கால் பாதத்தின்மீது மற்றொரு கால் பாதத்தை வைத்து உட்கார்ந்திருப்பவரை தாண்டுவது. படிப்படியாக அவர் தன் நிலையை உயர்த்துவார். இதனால் தாண்டுபவர்கள் தாண்ட வேண்டிய உயரம் கூடிக் கொண்டே போகும். இந்த முதல் கட்டத்திற்கு கால் தாண்டல் என்று பெயர்.

கால் தாண்டல் நிலை நிறைவடைந்த பின்பு, ஆள்தாண்டல் என்பது ஆரம்பமாகும். இதில் ஒருவர் குனிந்து நிற்பார். மற்றவர்கள் அவர் முதுகில் கையை ஊன்றி தாண்ட வேண்டும். குனிந்துகொண்டு நிற்பவர் தலையைத் தொங்க விட்டபடி, குனிந்து நிற்க வேண்டும். அப்படி குனியாவிட்டால், கிராமத்து மொழியில் “தலையை வெட்டி நாய்க்குப் போடு” என்று சொல்லி தலையை தட்டி குனிய சொல்வார்கள். அவரை மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து, தங்கள் இரு கால்களையும் அகற்றியபடி தாண்டுவார்கள்.

இதில் குனிந்து நிற்பவர் கால்கட்டைவிரலைப் பிடித்துக்கொண்டு நிற்பது, கணுக்காலை பிடித்துக்கொண்டு நிற்பது, முழங்காலை பிடித்துக்கொண்டு நிற்பது, தொடையைப் பிடித்துக்கொண்டு நிற்பது, கைகளை கட்டிக்கொண்டு அல்லது கும்பிட்டுக்கொண்டு குனிந்து நிற்பது என ஒவ்வொரு நிலையாக உயரம் கூடிக்கொண்டே வரும். மற்றவர்கள் அதை தாண்ட வேண்டும்.

குனிந்து நிற்பவர் மீது தாண்டுபவரின் கால்கள் தொட்டுவிட்டால், அவரை குதிரையை போல குனியவைத்து நிற்க விடுவார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக பலரை குனிந்து நிற்க சொல்லி தாண்டுவதும் உண்டு. இந்த விளையாட்டின் மூலம் கால்கள், கைகள் என உடலின் அனைத்து பாகங் களும், முக்கியமாக தசைகளும் வலுப்பெறுகின்றன. மூளை சுறுசுறுப்படைகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது.

Next Story