டிசம்பர் மாதத்தில் 137 கோடி டாலர் மதிப்பிற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி


டிசம்பர் மாதத்தில் 137 கோடி டாலர் மதிப்பிற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி
x
தினத்தந்தி 22 Jan 2019 8:44 AM GMT (Updated: 22 Jan 2019 8:44 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

டிசம்பர் மாதத்தில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, டாலர் மதிப்பு அடிப்படையில் 3 சதவீதம் உயர்ந்து 137 கோடி டாலராக இருக்கிறது.

பருத்தி உற்பத்தி

உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு தயாரிப்புகளை அளிப்பதிலும் நம் நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்திய ஜவுளி மற்றும் பருத்தி துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

நாட்டின் மொத்த ஆடைகள் ஏற்றுமதியில் பருத்தி ஆடைகளின் பங்கு ஏறக்குறைய 70 சதவீதமாக உள்ளது. இந்திய உற்பத்தி துறையில் ஜவுளித்துறையின் பங்கு 10 சதவீதமாக இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 13 சதவீதமாகவும் இத்துறையின் பங்கு இருக்கிறது.

சர்வதேச அளவில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் (2017-18) ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 4 சதவீதம் குறைந்து 1,672 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டில் அது 1,738 கோடி டாலராக இருந்தது. நடப்பு நிதி ஆண்டிலும் (2018-19) ஆடைகள் ஏற்றுமதி நிலவரம் திருப்திகரமாக இருக்க வாய்ப்பில்லை என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் அனைத்து வகையான ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி 3 சதவீதம் உயர்ந்து 137 கோடி டாலராக உள்ளது. 2017 டிசம்பரில் அது 134 கோடி டாலராக இருந்தது. ரூபாய் மதிப்பில் ஆடைகள் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்து ரூ.9,721 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.8,590 கோடியாக இருந்தது.

வளர்ச்சி விகிதம்

உள்நாட்டில் இப்போது ஆயத்த ஆடைகள் துறையினர் ஈட்டும் வருவாய் ஆண்டுக்கு 5,600 கோடி டாலராக உள்ளது. 2025-க்குள் இத்துறையின் வருவாய் 16,000 கோடி டாலராக அதிகரிக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story