ஒரு கை ஓசை.. தன்னம்பிக்கை தரும் டீ மாஸ்டர்


ஒரு கை ஓசை.. தன்னம்பிக்கை தரும் டீ மாஸ்டர்
x
தினத்தந்தி 10 Feb 2019 6:00 AM GMT (Updated: 9 Feb 2019 11:31 AM GMT)

ஒரு கையோடு வாழ்க்கையில் உயர்ந்துகொண்டிருப்பவர், பெருமாள். 32 வயதான இவரது முந்தைய அடையாளம் நீச்சல் வீரர் என்பது.

ரு கையோடு வாழ்க்கையில் உயர்ந்துகொண்டிருப்பவர், பெருமாள். 32 வயதான இவரது முந்தைய அடையாளம் நீச்சல் வீரர் என்பது. இன்று சுயதொழிலில் இறங்கி ‘டீ மாஸ்டர்’ என்ற அடைமொழியோடு 23 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிக்கொண்டிருக்கிறார். தரமும், ருசியும் நிறைந்த உணவுப்பொருட்களை வழங்குவதால் இவரது உணவகம் பிரபலங்கள் விரும்பி வந்து சுவைக்கும் இடமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறது.

பெருமாள், மதுரை திருமங்கலம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் நீச்சல் போட்டியில் 3 வருடம் தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்றவர். சாதனைகள் அளவுக்கு வேதனைகளும் இவரை துரத்தியதால், அதில் இருந்து மீண்டு அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் தன் கையே தனக்கு உதவி என்று, சுயதொழிலில் உயரத்தை தொட்டிருக்கிறார். இவரது உணவகம் மதுரை திருமங் கலம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது.

உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?

எனது தந்தை அழகர்சாமி, ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா சரோஜா. 2 சகோதரர்கள், ஒரு சகோதரி. கடைசியாக நான். பெற்றோர் இறந்துவிட்டனர். உடன்பிறந்தவர்கள் என் கடையிலே வேலை செய்கிறார்கள். என் மனைவி சித்ராதேவியும் கடையில் எனக்கு உதவியாக இருக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரது ஒத்துழைப்புடன் கடையை நடத்திவருகிறேன்.

நீச்சலில் எப்படி ஆர்வம் வந்தது?

விவசாய பூமியான எங்கள் ஊரில் கிணறுகள், கண்மாய்கள் நிறைய உண்டு. அதில் நண்பர்களுடன் குளிப்பது வழக்கம். பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் கற்றுக்கொண்டேன். 12-ம் வகுப்பு படித்தபோது மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பங்குபெற்று முதல் முறையாக தங்கப் பதக்கம் வாங்கினேன். அப்போது தான் எனக்குள் இருந்த நீச்சல் திறனை நானே உணர்ந்தேன். தொடர்ந்து நீச்சல் பயிற்சிகளில் பங்கேற்றுவந்தேன்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின்பு கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. வரலாறு படித்தேன். அப்போது பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் 3 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் பெற்றேன். மேலும் சிறந்த நீச்சல் வீரருக்கான விருதும் பெற்றிருக்கிறேன்.

படித்து முடித்த பின்னர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது ஏற்பட்ட விபத்தில் எனது வலது கை துண்டாகியது. அதில் 60 சதவீத ஊனம் ஏற்பட்டது. அதன்பிறகு நீச்சல் போட்டிகளுக்கு செல்லவில்லை. வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு சோர்ந்துபோனேன்.

அப்போதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடத்தப்படும் விவரம் தெரியவந்தது. அதற்காக தேர்வானேன். தேனியை சேர்ந்த விஜயபாஸ்கர் எனக்கு நீச்சல் பயிற்சியளித்தார்.

பின்னர், சென்னையில் நடந்த தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றேன். அதே ஆண்டு தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் ப்ரீ ஸ்டைல் பிரிவில் 40 வினாடிகளிலும், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் 39 வினாடிகளிலும், பட்டர் பிளை பிரிவில் 43 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கங்கள் வென்றேன். பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியிலும், மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய போட்டியிலும் தங்கம் வென்றேன். இதுவரை 32 தங்கப்பதக்கமும், 2 வெள்ளிப் பதக்கமும் வென்றிருக்கிறேன். பின்பு சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பினேன். ஆனால் பயிற்சிக்கு பணம் இல்லாததால் என் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

அதன் பின்பு மாணவர்களுக்கு நீச்சல் மற்றும் கபடி பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். தற்போது பள்ளி களுக்கு சென்று மாணவர் களுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற தூத்துக்குடியை சேர்ந்த அருள்ராஜ் மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். அவரது இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பயிற்சியுடன் தன்னம்பிக்கையையும் சேர்ந்து அளித்ததன் மூலம் அவர் சாதித்துள்ளார். இன்னும் சாதிப்பார்.

நீச்சல் வீரரான நீங்கள் டீ மாஸ்டர் ஆனது எப்படி?

நீச்சல் போட்டியில் சாதித்ததை வைத்து அரசு வேலைக்கு முயற்சி செய்தேன். ஆனால் பல முறை முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. அதனால் சுய தொழில்தொடங்கி மற்றவர்களுக்கு வேலைகொடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அதன்படி மதுரை திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சிறிய அளவில் டீக்கடை வைத்தேன். அதில் நானே டீ போட்டு கொடுத்தும், வடை வகைகளை தயார் செய்தும் வைத்தேன். தனி ஒருவனாக தொடங்கிய இந்த கடையில் தற்போது நிறைய பேர் வேலை செய்கின்றனர். எங்கள் கடையில் வாழைப்பூ வடை மிகவும் சிறப்பு வாய்ந்தது. எப்போதும் சூடாக கிடைக்கும். இந்த வழியாக செல்லும் பிரபலங்கள் பலரும் எனது வாடிக்கையாளர்கள். அந்த அளவுக்கு தரத்தை கடைப்பிடிக்கிறோம்.

உங்கள் லட்சியம் என்ன?

மாற்றுத்திறனாளிகள் எல்லா துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்கான தகுதி அவர்கள் அனைவரிடமும் இருக்கிறது. அதற்கான முயற்சிகளிலும், பயிற்சிகளிலும் அவர்கள் ஈடுபடவேண்டும் என்பதே என் ஆசை.


Next Story