சிறப்புக் கட்டுரைகள்

ஜோடிகளை இணைக்கும் ‘காதல் பஸ்’ + "||" + 'Love bus' connecting pairs

ஜோடிகளை இணைக்கும் ‘காதல் பஸ்’

ஜோடிகளை இணைக்கும் ‘காதல் பஸ்’
கணினி யுகமும், கால மாற்றமும் காதல் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிவிட்டன. கண்களால் மட்டுமே காதலை வளர்த்துக்கொண்டிருந்த காதலர்கள் குறைந்துவிட்டார்கள்.
ணினி யுகமும், கால மாற்றமும் காதல் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிவிட்டன. கண்களால் மட்டுமே காதலை வளர்த்துக்கொண்டிருந்த காதலர்கள் குறைந்துவிட்டார்கள். காதலுக்கு தூதாக நெருங்கி பழகியவர்களை அனுப்பிக்கொண்டிருந்த நடைமுறையும் மலையேறிவிட்டது. கணினி யுகம் காதல் துணைவனாக, தூதுவனாக கரம் கோர்த்துக்கொண்டிருக்கிறது. எனினும் நேருக்கு நேர் சந்திக்கவும், பேசவும் தயங்கி பின்னர் உணர்வுப்பூர்வமாக காதலில் விழுந்து இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்றைய காதல் தம்பதியர்கள் எதிர்கொண்ட போராட்ட காதல் களம் இன்றைய காதலிலும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கிறது. நிகழ்காலத்துடன் அன்றைய காதலர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கவைக்கும் சம்பவங்கள் இவை.

பிரபலமான சுற்றுலாத்தலமான மூணாறில் இருந்து குயிலிமலை என்ற இடத்துக்கு கேரள அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு பஸ் போக்குவரத்து தொடங்கி 16 வருடங்கள் ஆகிறது. அந்த பஸ்சுக்கு பொதுமக்கள் வைத்திருக்கும் பெயர் ‘காதல் வண்டி’. இப்படி பெயர் வைக்க காரணம், பஸ்சில் வேலை பார்க்கும் கண்டக்டர்கள், பயணிகளாக பஸ்சுக்குள் ஏறிய பெண்களையே காதலித்து திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள். குழந்தைகள் பெற்று சந்தோஷமாக வாழ்க்கையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த பஸ் பயணத்தில் காதலை வளர்த்து 16 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்த முதல் ஜோடி ராஜூவ்- ஷிஜி. அந்த பஸ்சில் காலை மாலை, வேளைகளில் கல்லூரி மாணவிகள்தான் அதிக அளவில் பயணிக்கிறார்கள். அவர்கள் முருகாச்சேரி என்ற இடத்தில் உள்ள பாவநாத்மா என்ற கல்லூரியில் படிப்பவர்கள். கல்லூரி மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால் அந்த பஸ் கல்லூரி பஸ் போலவே காட்சியளிக்கும். அதில்தான் ராஜூவும், ஷிஜியும் முதன்முதலாக சந்தித்திருக்கிறார்கள். அப்போது ஷிஜி பி.காம் படித்துக்கொண்டிருந்திருக்கிறார். ராஜூவ் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்திருக்கிறார்.

‘‘ஷிஜியை பார்த்ததுமே எனக்கு பிடித்து போய்விட்டது. மூன்று மாதங்கள் கண்களாலேயே எங்கள் சந்திப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. அவளிடம் பேச தொடங்கியதும், ‘என்னை காதலிக்கிறாயா என்று கேட்கவில்லை. நாம் திருமணம் செய்து கொள்வோமா என்றுதான் கேட்டேன். உடனே அவள், ‘என் பெற்றோரிடம் வந்து பேசுங்கள்’ என்று சொன்னாள். அவளுக்கும் என்னை பிடித்திருப்பதால்தான் அவ்வாறு சொல்கிறாள் என்பதை யூகித்துவிட்டேன். எங்கள் காதல் பயணம் சுமுகமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. அவள் என்னை விட உயரமாக இருப்பாளோ? என்று குழம்பி போனேன்.

தினமும் அவள் பஸ்சில் குறிப்பிட்ட இடத்தில்தான் நிற்பாள். அந்த இடத்தில் நான் நின்று கொண்டு பஸ்சில் என் உயரத்தை சாக்பீஸ் மூலம் கோடு போட்டு வைத்தேன். அன்று அவள் வருகைக்காக காத்திருந்தேன். குறிப்பிட்ட நேரத்தில் அவள் வந்தாள். நான் போட்டிருந்த சாக்பீஸ் கோட்டுடன் அவளுடைய உயரத்தை ஒப்பிட்டு பார்த்தபோது அவள் உயரம் என்னை விட குறைவுதான் என்பது உறுதியானது. பின்னர் அவளது பெற்றோரை சந்தித்து பேசினேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். அதன் பின்பு எங்கள் திருமணம் நல்லபடியாக நடந்தது. எங்களுக்கு பென், இமானுவேல் என இரு மகன்கள் இருக்கிறார்கள்’’ என்கிறார், ராஜூவ்.

இந்த பஸ் பயணத்தில் இணைந்த மற்றொரு ஜோடி உமேஷ்-சித்ரா. இதில் சித்ரா, உமேஷ் அப்பாவின் நண்பர் மகள். அதனால் கல்லூரி படிக்கும்போது இருவருக்கும் அறிமுகம் இருந்திருக்கிறது. நல்ல புரிதலும் இருந்திருக்கிறது. ஒருவருக்கொருவர் பிடித்திருந்தும் காதலை சொல்லிக்கொள்ளவில்லை. படிப்பை முடித்ததும் இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதற்கிடையே உமேஷுக்கு கண்டக்டர் வேலை கிடைத்திருக்கிறது. அவரது சொந்த ஊர் அடிமாலி. அங்கு மூன்று ஆண்டுகள் கண்டக்டராக வேலை பார்த்தவர் பின்பு மூணாறு டெப்போவுக்கு இடமாறுதலாகி சென்றிருக்கிறார். அங்கு குயிலிமலை பாதையில் இயக்கப்படும் அந்த பஸ்சில் கண்டக்டராக பணியை தொடர்ந்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக அந்த பஸ்சில் சித்ரா ஏறி இருக்கிறார். அடிமாலிக்கு டிக்கெட் கேட்டவர் உமேஷை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

‘‘நாங்கள் இருவரும் ரொம்ப நாட்களுக்கு பிறகு சந்தித்து பேசியது மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது. இப்படியொரு சந்திப்பு எங்களுக்குள் நிகழும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருவரும் மனம் விட்டு பேசினோம். காதலையும் வெளிப்படுத்தினோம். அவளது வீட்டிற்கு சென்று பெண் கேட்டேன். ஏற்கனவே குடும்பத்தினருக்குள் அறிமுகம் இருந்ததால் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் பொறுப்பு வரவேண்டும் என்று ஒரு வருடம் திருமணத்தை தள்ளி வைத்தார்கள். நான் 21 வயதில் கண்டக்டர் வேலைக்கு சேர்ந்தேன். 26 -வது வயதில் எங்கள் திருமணம் நடந்தது’’ என்கிறார், உமேஷ்.

காதல் வாழ்க்கையில் இணைந்த கதை பற்றி சித்ரா சொல்கிறார்...

‘‘இவரை பஸ்சில் கண்டக்டராக பார்த்திருக்காவிட்டால் நாங்கள் இருவரும் சந்திக்க வாய்ப்பு இல்லாமலே போயிருக்கும். என் வாழ்க்கையும் வேறொரு கோணத்தில் திசைமாறி போயிருக்கும். இப்போதுபோல் அப்போதெல்லாம் செல்போன் கிடையாது. நாங்கள் சந்திப்பது, பேசுவது எல்லாமே காதல் வாகனமான அந்த பஸ்சில்தான்’’ என்று பழைய காதல் நினைவுகளில் மூழ்கினார், சித்ரா.

உமேஷ் இப்போதும் மூணாறு டெப்போவில்தான் பணியை தொடர்ந்துகொண்டிருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்போதும் பஸ்சில் ஜோடிகள் உருவாகிக்கொண்டிருக்கிறார்களா? என்று அவரிடம் கேட்டபோது..

‘‘பஸ்சில் ஏறும் இளைஞர்களில் பெரும்பாலானோர் எனக்கு நண்பர்கள்தான். தொடர்ந்து பஸ்சில் பயணிக்கும் இளம் பெண்கள் மீது சிலர் காதல்வசப்பட்டுவிடுகிறார்கள். ஆனால் காதலை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். சிலர் என்னிடம் காதலுக்கு உதவ முடியுமா? என்று கேட்பார்கள். நானும் காதல் அவஸ்தைகளை அனுபவித்து வந்தவன் என்பதால் பிரச்சினை வராத அளவுக்கு உதவி இருக்கிறேன்’’ என்கிறார்.

ராஜேஷ்-ஷெமீரா என்ற ஜோடியும் இதே பஸ்சில் சந்தித்து காதல் வசப்பட்டு, திருமணம் செய்தவர்களின் பட்டியலில் இணைந்தவர்கள். இவர்களது காதல் களம் போராட்டம் கலந்தது. அந்த பஸ்சில் கண்டக்டராக இருக்கும் ராஜேஷிடம் ஷெமீரா 10 ரூபாய் கொடுத்து ரூ.8.50 கட்டணத்துக்கான டிக்கெட் கேட்டிருக்கிறார். ராஜேஷோ அவர் இரண்டு ஸ்டாப்புக்கு முன்பே ஏறி இருக்கிறார் என்று நினைத்து 10 ரூபாய் டிக்கெட்டை கொடுத்துவிட்டார். இதையடுத்து ஷெமீரா மீதி 1.50 ரூபாயை கேட்டிருக்கிறார். அப்போதுதான் தான் தவறாக டிக்கெட் கொடுத்திருப்பதை அறிந்து வேறு டிக்கெட்டும், மீதி பணமும் கொடுத்திருக்கிறார். இருவருக்கும் இடையே டிக்கெட் விவகாரத்துக்காக நடந்த முதல் பேச்சு காதலுக்கு அடித்தளமும் அமைத்து கொடுத்துவிட்டது.

அப்போது விவசாய சேம நிதி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக ஷெமீரா வேலை பார்த்து வந்திருக்கிறார். அவருடைய வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதற்கு இரண்டு தனியார் பஸ்கள் இருக்கிறது. ஆனால் ஒரு பஸ்சில் ஏறினால் பணிக்கு முன்கூட்டியே செல்ல நேரிடும். மற்றொரு பஸ்சில் சென்றால் பணிக்கு செல்ல காலதாமதமாகிவிடும். இந்த அரசு பஸ் சரியான நேரத்திற்கு சென்றதால் அதிலேயே ஷெமீரா பயணித்திருக்கிறார். 1.50 ரூபாய் டிக்கெட் விவகாரத்திற்காக நடந்த பேச்சுவார்த்தை நட்பாக மாறி பின்னர் காதலை அரும்ப வைத்து விட்டது.

‘‘நாங்கள் தினமும் பஸ்சில் சந்தித்து பேச ஆரம்பித்தோம். அவளிடம் செல்போன் நம்பர் கேட்டேன். முதலில் தர மறுத்துவிட்டாள். ஒரு மாதம் பின் தொடர்ந்து சென்று செல்போன் எண்ணை வாங்கினேன். பிறகு போனில் நிறைய பேசினோம். நான் தாமதப்படுத்தாமல் முதலிலேயே காதலை சொல்லிவிட்டேன். ஆனால் அவள் பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தாள். கொஞ்சநாள் கழித்து தன் விருப்பத்தை சொன்னாள்’’ என்கிறார், ராஜேஷ்.

இவர்கள் காதல் கதையில் நிகழ்ந்த போராட்டத்தின் பின்னணியை ஷெமீரா விவரிக்கிறார்.

‘‘ஒருநாள் நான் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ராஜேஷை உடன் வர முடியுமா? என்று கேட்டேன். அவரும் சம்மதிக்கவே இருவரும் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தோம். அந்த பஸ்சின் கண்டக்டர் எங்கள் வீட்டில் இருவரும் சேர்ந்து போனதை சொல்லிவிட்டார். நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணம் 2012-ம் ஆண்டு நடந்தது. எங்களுக்கு ஆதித்யராம், அஸ்வின்ராஜ் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்’’ என்கிற ஷெமீரா தற்போது அரசு பணியில் இருக்கிறார்.

இவர்களை போலவே கடும் எதிர்ப்பை சம்பாதித்து காதல் வாழ்க்கையில் இணைந்த மற்றொரு ஜோடி சிஜோமோன்-ரேஷ்மா. அந்த பஸ்சில் சிஜோமோன் கண்டக்டராக பணியை தொடர்ந்தபோது ரேஷ்மா பி.காம் படித்துக்கொண்டிருந்தார். அஞ்சாம்மைல் என்ற இடத்தில் 11 பெண்கள் பஸ் ஏறுவார்கள். அவர்கள் அனைவருக்கும் சேர்ந்து ரேஷ்மா டிக்கெட் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அவர் எதற்காக டிக்கெட் எடுக்கிறார் என்று அவர் மீது கவனத்தை திருப்பியதே காதலுக்கு அடித்தளமிடவைத்திருக்கிறது.

‘‘அந்த பெண்களுக்கு மொத்தமாக டிக்கெட் எடுத்துக்கொண்டிருந்ததால் ரேஷ்மா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதுவே நாளடைவில் காதலாகிவிட்டது. இந்த பஸ்சில் கண்டக்டராக இருந்து முதலில் காதல் திருமணம் செய்த ராஜூவிடம் நான் காதலிக்கும் விஷயத்தை கூறி ஆலோசனை கேட்டேன். அவரே எனக்கு காதல் தூதுவனாக சென்று ரேஷ்மாவிடம் என் விருப்பத்தை சொன்னார்’’ என்கிறார்.

ரேஷ்மா டிக்கெட் எடுத்த 11 பெண்களில் ஒரு இளம்பெண் சிஜோமோன் மீது காதல் வசப்பட்டிருக்கிறார். அவர் ரேஷ்மாவை பார்க்கும்போது தன்னைதான் பார்ப்பதாக தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே சிஜோமோன் தனது செல்போன் நம்பரை பேப்பரில் எழுதி ரேஷ்மாவிடம் நீட்டியிருக்கிறார். அவரோ வாங்க மறுத்திருக்கிறார். உடனே அந்த பெண், ‘நீ வாங்கவில்லை என்றால் நான் வாங்கி அவரிடம் என் காதலை சொல்லிவிடுவேன்’ என்றிருக்கிறார். உடனே ரேஷ்மா சிஜோமோனிடம் செல்போன் நம்பரை வாங்கி பேசி இருக்கிறார். இரண்டரை வருடமாக இருவரும் காதலித்திருக்கிறார்கள். தங்கள் காதலை வீட்டிலும் தெரிவித்திருக்கிறார்கள். முதலில் சம்மதம் தெரிவித்த ரேஷ்மாவின் பெற்றோர் திடீரென்று உறவினர் வீட்டிற்கு அவரை கடத்தி சென்று தங்க வைத்துவிட்டார்கள்.

சிஜோமோனை செல்போனிலோ, நேரிலோ தொடர்பு கொள்ளாதவாறு தடுத்திருக்கிறார்கள். ‘கண்டக்டரை திருமணம் செய்ய வேண்டாம். உனக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறோம்’ என்று அவருடைய மனதை மாற்ற முயற்சித்திருக்கிறார்கள். ஒரு மாதம் இருவருக்குமிடையே தகவல் தொடர்பு இல்லாமல் இருந்திருக்கிறது. பின்னர் ரேஷ்மா தன் வீட்டிற்கு திரும்பி வந்திருக்கிறார். உடனே சிஜோமோனை தொடர்பு கொண்டு வீட்டில் கிளம்பியிருக்கும் எதிர்ப்பை எடுத்து கூறி இருக்கிறார். பெற்றோர் பிடிவாதமாக இருந்ததால் வீட்டை விட்டு வெளியேறி சிஜோமோனை பதிவு திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ரயான் என்ற மகன் இருக்கிறான்.

இப்போதும் மூணாறு - குயிலிமலை பஸ் மலையடிவாரத்தில் தவழ்ந்து சென்று தனது (காதல்) பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.