உடல் வளைகிறது.. பதக்கங்கள் குவிகிறது..


உடல் வளைகிறது.. பதக்கங்கள் குவிகிறது..
x
தினத்தந்தி 10 Feb 2019 6:30 AM GMT (Updated: 9 Feb 2019 12:17 PM GMT)

“எனது உடல் ரப்பர் போன்றது. இதனை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம். கால்-கைகளை மட்டுமல்ல, தலையையும் என்னால் எப்படி வேண்டுமானாலும் திருப்பமுடியும்.

“எனது உடல் ரப்பர் போன்றது. இதனை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம். கால்-கைகளை மட்டுமல்ல, தலையையும் என்னால் எப்படி வேண்டுமானாலும் திருப்பமுடியும். இந்த ஆற்றலை நான் கடுமையான பயிற்சிகள் மூலம் பெற்றிருக்கிறேன். அது அனைவராலும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. எனக்கு பரிசுகளையும் பெற்றுத் தருகிறது” என்கிறார், 16 வயதான வைஷ்ணவி. இவர் கோவையில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி. சர்வதேச அளவிலான யோகாசன போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங் களை குவித்துக்கொண்டிருக்கிறார். கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.

அதுபற்றி வைஷ்ணவியிடம் பேசுவோம்!

“எனது சொந்த ஊர் திருப்பூர். அங்கு ஆறாம் வகுப்பு படித்தபோது யோகா பயிற்சி யளித்தார்கள். அப்போது சக மாணவிகளை விட, உடலை வளைத்து செய்யும் ஆசனங்களை நான் சிறப்பாக செய்தேன். அதனால் எனது ஆசிரியரின் பாராட்டு கிடைத்தது. எனக்கும் யோகா மீது ஆர்வம் ஏற்பட்டது. பெற்றோரும் என்னை ஊக்குவித்தார்கள். யோகா மாஸ்டர் சங்கர் எனக்கு பயிற்சி அளித்தார். சில ஆசனங்களை செய்துவிட்டு, போட்டிகளில் பங்குபெற்றேன். தொடக்கத்தில் பரிசுகள் கிடைக்கவில்லை.

பின்புதான் யோகாவை பரிசுக்காக செய்யாமல், ரசித்து அனுபவித்து செய்யத் தொடங்கினேன். பின்பு பதக்கங்கள் கிடைத்தன. படிப்படியாக முன்னேறி தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை பெற்றேன். அடுத்து வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பங்கு பெறத்தொடங்கினேன். கடந்த 5 ஆண்டுகளில் இந்தோனேஷியா, தாய்லாந்து, இலங்கை, அமெரிக்கா, சீனா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு சென்று போட்டிகளில் பங்கு பெற்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளேன். தாய்லாந்துக்கு 3 முறை சென்று பரிசை வென்றுள்ளேன். யோகா போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிகளை குறித்தபோதும் படிப்பிலும் சிறந்த மாணவியாகவே இருக்கிறேன்.

நான் 8-ம் வகுப்பு படிக்கும்போது யோகா நிகழ்ச்சிக்காக கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் குளோபல் பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்போது நான் செய்த ஆசனங்களை வியந்து பாராட்டிய அப்பள்ளியின் நிர்வாகி அனுஷா, அவரது பள்ளியில் சேர்ந்து படித்தால், எனது பள்ளி- கல்லூரி செலவினங்களை ஏற்றுக்கொள்வதாகவும், தொடர்ந்து நான் போட்டிகளில் பங்குபெறும் செலவினங்களுக்கு உதவுவதாகவும் உறுதி அளித்தார். எனக்கு மட்டுமில்லாமல் எனது தங்கைக்கான பள்ளிச் செலவினங்களையும் ஏற்றுக்கொண்டார். பார்க் குளோபல் பள்ளியில்தான் நானும் என் தங்கையும் படித்து வருகிறோம். பள்ளி நிர்வாகம் எங்களுக்கு பலவிதங்களில் உதவி வருகிறது..” என்று கூறும் வைஷ்ணவி, கின்னஸ் சாதனை படைத்ததை பற்றியும் விளக்குகிறார்.

“எனக்கு யோகாவில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. பள்ளியிலே அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். நான் தண்ட பேருண்ட ஆசனத்தின் மூலம் சாதனையை படைக்க விரும்பினேன். அதற்காக தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். தலை முன்பாக இருக்கும். அதே நிலைக்கு இரண்டு கால்களையும் வளைத்து கொண்டு வரவேண்டும். இந்த ஆசனத்தை செய்தவாறு, அதாவது தலைப்பகுதியை முன்பாக வைத்து, உடல் பகுதியை வளைத்தவாறு, இரு கால்களின் பெருவிரல்கள் மூலம், முன்பாக அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளை ஒவ்வொன்றாக பற்றிக்கொண்டு, பின்னர் அந்த முட்டைகள் விழுந்து விடாமல் பின்புறத்தில் வைக்கப்பட்டிருக்கும் கப்களில் வைக்க வேண்டும். இவ்வாறு 6 முட்டைகளை வைக்க வேண்டும். நான் அந்த சாதனையை நிகழ்த்தி காட்டினேன்.

இந்த சாதனையை குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும் என்பது தான் முக்கியமான விஷயம். அந்த வகையில் 18.21 வினாடிகளில் இந்த சாதனையை நிகழ்த்தினேன். இதுபோன்ற சாதனையை சீனாவை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே செய்து இருந்தார். ஆனால் அவர் அதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 21.58 வினாடி. நான், அவரது சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறேன். அடுத்து மீண்டும் சர்வதேச போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றேன். அங்கு தங்கம் வென்று திரும்பினேன். தொடர்ந்து யோகாவில் சாதனை படைக்க வேண்டும் என்பது என் விருப்பம். தற்போது ஜிம்னாஸ்டிக் பயிற்சியும் பெற்று வருகின்றேன். எதிர்காலத்தில் யோகாவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து, யோகா தெரபி சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவராகவேண்டும். இதன் மூலம் எனது வருமானத்துக்கும் வழிவகுத்து, இந்த சமுதாயத்துக்கும் சேவை செய்ய வேண்டும். குறிப்பாக நான் படித்து முடித்ததும் அரசு பள்ளிக்கூடங்களுக்கு சென்று ஆர்வமுள்ள மாணவிகளுக்கு யோகாவை சொல்லிக் கொடுப்பேன்” என்றவர், யோகாவின் சிறப்பு களையும் அடுக்குகிறார்.

“யோகா கற்றுக்கொள்வதால் மனம் ஒருநிலைப்படும். அதில் உள்ள தியான பயிற்சியும் சிறந்தது. பயிற்சிகளை அதிகாலை வேளையில் செய்தால் மனம் அமைதி அடைந்து அன்றைய நாள் முழுவதும் எண்ணங்கள் வலிமை அடையும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நான் 5 ஆண்டுகளாக ஆஸ்பத்திரிக்கு போனதில்லை. எனது தந்தையும் யோகாசனம் செய்வார். எனது தாயாருக்கு தைராய்டு நோய் இருந்தது. அதற்குரிய யோகாசனங் களை செய்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.யோகாவில் தியானம், ஆசனம் என இரண்டு வகைகள் இருக்கின்றன. யோகா மூலம் உடல், மனம், ஆன்மாவை ஒருநிலைப்படுத்தலாம். தைராய்டு இருப்பவர்கள் ஹாலாசனம் செய்யலாம். மூட்டுவலி இருப்பவர்களுக்கு வஜ்ராசனம், பத்மாசனம் ஏற்றது.

சிறுவயதிலே யோகாசனத்தை கற்று தொடர்ந்துகொண்டிருந்தால், நோயற்ற வாழ்வு வாழலாம். இதன் மூலம் மன அமைதி, நிம்மதியான தூக்கம், மனதை ஒரு நிலைப்படுத்தும் திறன் போன்றவை கிடைக்கும். அதன் மூலம் சிறந்த முடிவுகளை எடுக்கமுடியும். மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை பறந்து போய்விடும். மகிழ்ச்சியுடன் வாழலாம். எல்லோருக்கும் இது ஏற்றது. பெண்கள் யோகா கற்றுக்கொள்வது மிக நல்லது. மாணவ- மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் இதன் மூலம் கிடைக்கும்” என்றார், வைஷ்ணவி.

இவரது குடும்பம் ஏழ்மையானது. இவரது தந்தை சரவணன் கார் டிரைவர். தாய் விமலா. தங்கை யோகேஸ்வரி. பள்ளி அருகில் உள்ள சோமனூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

Next Story