சின்னதம்பி தரும் வாழ்க்கை பாடம்


சின்னதம்பி தரும் வாழ்க்கை பாடம்
x
தினத்தந்தி 13 Feb 2019 8:35 AM GMT (Updated: 13 Feb 2019 8:35 AM GMT)

சின்னா... சின்னதம்பி. நமக்கெல்லாம் மிக பரிச்சயமாகி விட்ட காட்டு குழந்தை. தன் வலசை பாதை களவு போக, உணவும் உறைவிடமும் தேடி ஊருக்குள் வந்துவிட்டவன்.

நாம் ஊர் என்றழைக்கும் இடம் அவன் வேர். இன்று அனாதை போல் அலையும் அந்த காட்டரசன் அவன் போக்கில் நமக்கு சில மிக இன்றியமையாத வாழ்க்கை பாடங்களை சொல்லி கொடுத்துக்கொண்டிருக்கிறான். அவை என்ன?காட்டில் ஆண் யானைகள் ஒரு வயதுக்கு மேல் தம் கூட்டத்திலிருந்து பிரிந்து விடும். சின்னாவிற்கு இருபது வயதுக்கு மேல் ஆகியும், ஜனவரி 26-ந் தேதி பிடிபடும் வரையிலும் அவன் தனது சொந்தத்துடனே சுற்றி இருக்கிறான். இன்னும் தனது உற்றாரை தேடி கொண்டு தான் இருக்கிறான். தன் சொந்த கூட்டம் மட்டும் அல்ல எதிர்கொள்ளும் கும்கிகளிடமும் நட்பாகி விட்டான்.

மனிதர்களைஅவன் சிறிதளவு கூட அச்சுறுத்தவில்லை. அவன் காட்டும் பாசமும்,நேசமும் அவன் எதிரிகளையும் மனமுருகச்செய்யும் சக்தி கொண்டதாகவே உள்ளது. இந்த நேசம் தான் அவனை இன்று வரை காக்கும் கவசமாகவும் உள்ளது. பாசம் கொண்ட உள்ளம் என்றும் மோசம் போவதில்லை அல்லவா! அந்த காடு அவன் பிறப்புரிமை. காலங்காலமாக அவன் மூதாதையர் வழி வந்த இடம். அதற்கு அவனே முதல் சொந்தக்காரன். நாம் அனைவரும் வந்தேறிகள் தான். அப்படி இருக்கும் போது நாம் லாரியில் ஏற்றி காடு கடத்தினால் சும்மா இருப்பானா? “எங்க வந்து, யார் கிட்ட?” என்பது போல் கொடுத்ததை கொண்டு சமரசம் ஆகாமல் நூறு கிலோமீட்டர் தூரம் நடந்தே திரும்ப வந்து விட்டான். இருந்தும் துரத்தினோம். மூன்று நாட்கள் விடாமல் நடந்தான்... மயங்கி கூட விழுந்தான்... ஆனால் பின்வாங்கினானா?

அவனை நாம் காடு கடத்திய காட்சி சினிமாவில் வரும் ஒரு கொடூரக்காட்சியை காட்டிலும் மோசமானது. கும்கிகள் நெட்டி குத்தின. ஜே.சி.பி. எந்திரங்கள் இழுத்தன. மனிதர்கள் கத்தி கூச்சலிட்டார்கள். இது அத்தனைக்கும் அசையாமல் அசராமல் தனி ஒருவனாக ஈடு கொடுத்தான். அப்பொழுதும் தன்னை விட்டுக்கொடுக்கவில்லையே ஒழிந்து யாரையும் ஆக்ரோஷத்தில் எதிர்க்கவோ தாக்கவோ இல்லை. இது எத்துணை தெளிவான யுக்தி! ஒரு சிறு நொடியேனும் அவன் வன்முறையை கையாண்டிருந்தால் இந்த பாழாய் போன மனித இனம் இந்நேரத்திற்கு அவனை சும்மா விட்டிருக்காது. ஐந்தறிவு கொண்ட ஜீவன் என்று நம்மில் சிலர் ஏளனமாக கூறும் அவன் கையாளும் அறப்போர், ராஜதந்திரிகள் கூட காணாததாய் இருக்கும்!

இவ்வளவு பதற்றத்திலும் இடையிடையே சில இனிமையான நொடிகளை ரசிக்க அவன் தவறவில்லை. கரும்போ கடலை பருப்பியோ “அப்போ எனக்கு பசிக்கும்ல.. சாப்ட கூடாதா” என்று ஒரு கட்டு கட்டினான். கலீமும் அவனும் தோஸ்தானார்கள். விட்டால் அவனை சுற்றி இருக்கும் மனிதர்களோடு அவன் ஒரு ரவுண்டு சீட்டு ஆடினால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அப்படி ஒரு வெள்ளந்தி மனசுக்காரன் அவன்.

இப்படி அவன் அவனாக இருப்பதன் மூலம் மட்டுமே அவன் நமக்கு எவ்வளவு கற்பிக்கிறான்! சின்னா ஒருவனிடமிருந்து மட்டுமே கற்பதற்கு இவ்வளவு இருக்கிறதென்றால் மற்ற ஜீவராசிகளிடமிருந்து இன்னும் எவ்வளவோ படிக்கலாமே... அதற்கு, முதலில் நம் மூட கண்கள் திறக்க வேண்டும். 

-பிரியாராஜன், வனவிலங்கு ஆர்வலர், பெங்களூரூ.

Next Story