சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : நன்மை செய்யும் ஓசோன் படலத்தை சிதைக்கலாமா? + "||" + Day Information: To destroy the ozone layer of good?

தினம் ஒரு தகவல் : நன்மை செய்யும் ஓசோன் படலத்தை சிதைக்கலாமா?

தினம் ஒரு தகவல் : நன்மை செய்யும் ஓசோன் படலத்தை சிதைக்கலாமா?
சூரியனின் புறஊதா கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது ஓசோன் படலம்.
ஓசோன் படலம் சிதைந்து வருவதை தடுக்க வேண்டும் என்று 1970-களில் விஞ்ஞானிகள் குரல் கொடுத்தனர். ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை கண்டறிந்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் குளோரோ புளூரோ கார்பன்கள், மிதைல் குளோரோபார்ம் போன்ற வேதிப்பொருட்கள் ஓசோன் படலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன.

பூமியில் இருந்து 15 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் உயரம் வரை உள்ள வளிமண்டலப் பகுதி ஸ்டிராட்டோஸ்பியர் எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் மீது சூரியனின் புறஊதா கதிர்வீச்சு வேதிவினை புரிவதால் ஆக்சிஜன் அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஆக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக மாறுகின்றன. இது ஒரு படலம் போல பூமியைச் சூழ்ந்திருக்கிறது. இந்தப் படலம் இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை.

அண்டார்டிகா பனிக் கண்டத்தின் மேற்பகுதியில் ஓசோன் படலம் மெலிந்து காணப்படுகிறது. இந்தப் பரப்பளவு ஆஸ்திரேலியாவின் பரப்பைப் போல் மூன்று மடங்கு. இதை ‘ஓசோன் ஓட்டை’ என்று சொல்வதைவிட ஓசோன் படல மெலிவு என்று சொல்லலாம். இதனால் புறஊதாக் கதிர்கள் எளிதில் உள்ளே நுழைகின்றன.

குளிர்பதனப் பெட்டி, ஏ.சி-யில் இருந்து வெளியாகும் குளோரோ புளூரோ கார்பன் ஓசோனுடன் வினைபுரிந்து குளோரினாகவும், ஆக்சிஜனாகவும் மாறுகிறது. இதனால் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து போகிறது. உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைடு, ஜெட் விமானங்கள் வெளியிடும் நைட்ரிக் ஆக்சைடு போன்றவையும் இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

மரக்கட்டை, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது, தீயணைப்பு கருவிகள், ஸ்பிரேக்களில் இருந்து வெளியேறும் குளோரோ புளூரோ கார்பன், டூவீலர்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசுபடுவதாலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக புற்றுநோய், தோல் நோய்கள், பார்வை இழப்பு, பயிர்களுக்குப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். உலகில் தோல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 80 ஆயிரம் பேர் பலியாவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓசோன் படல மெலிவு விரிவடைவது தடுக்கப்பட்டு விட்டாலும்கூட, ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாக சீரமைக்கப்படவில்லை.

அதனால் வளி மண்டலத்தில் இருந்து பூமியில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு நன்மை செய்யும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஓசோனைச் சிதைக்கும் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியாக வேண்டும்.