ஜனவரி மாதத்தில் மேலும் முன்னேற்றம் சில்லரை விலை பணவீக்கம் 2.05 சதவீதமாக குறைந்தது


ஜனவரி மாதத்தில் மேலும் முன்னேற்றம் சில்லரை விலை பணவீக்கம் 2.05 சதவீதமாக குறைந்தது
x
தினத்தந்தி 13 Feb 2019 10:13 AM GMT (Updated: 13 Feb 2019 10:13 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

ஜனவரி மாதத்தில் சில்லரை விற்பனை விலை பணவீக்கம் 2.05 சதவீதமாக குறைந்துள்ளது. டிசம்பர் மாத பணவீக்கம் (2.19 சதவீதத்தில் இருந்து) 2.11 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 5.07 சதவீதமாக இருந்தது.

மூன்று பிரிவுகள்

2012 ஜனவரி மாதத்தில் இருந்து நுகர்வோர் விலை பணவீக்கம் (சிபிஐ) எனப்படும் சில்லரை விற்பனை விலை பணவீக்க புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த பணவீக்கம் கிராமம், நகரம் மற்றும் நாடு (நகரங்களும், கிராமங்களும்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வெளியிடப்படுகிறது.

கடன் வட்டி விகிதங்கள் தொடர்பான பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. இவ்வங்கி வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும்போது சில்லரை விற்பனை விலை பணவீக்கத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனால் பணவீக்கத்தை துல்லியமாக அளவிட முடியும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு 4.92 சதவீதத்தை எட்டியது. ஜூலையில் 4.17 சதவீதமாக குறைந்தது. ஆகஸ்டில் 3.69 சதவீதமாக மேலும் குறைந்தது. செப்டம்பர் மாதத்தில் 3.77 சதவீதமாக உயர்ந்தது. அக்டோபர் மாதத்தில் 3.31 சதவீதமாக குறைந்தது. நவம்பர் மாதத்தில் 2.33 சதவீதமாக மேலும் குறைந்தது. டிசம்பர் மாதத்தில் 2.11 சதவீதமாக (மறுமதிப்பீடு) குறைந்தது.

இந்த நிலையில், ஜனவரி மாதத்தில், மேலும் முன்னேற்றமாக சில்லரை விலை பணவீக்கம் 2.05 சதவீதமாக குறைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத ரிசர்வ் வங்கி

பாரத ரிசர்வ் வங்கி கடந்த 7-ந் தேதி (வியாழக்கிழமை) கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை அறிவித்தது. அப்போது வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை இவ்வங்கி 0.25 சதவீதம் குறைத்தது. எனவே ரெப்போ ரேட் 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

சில்லரை விலை பணவீக்கம். நடப்பு மார்ச் காலாண்டில் 2.8 சதவீதமாக குறையும்; அடுத்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) இந்தப் பணவீக்கம் 3.2-3.4 சதவீதமாக இருக்கும்; டிசம்பர் காலாண்டில் 3.9 சதவீதமாக உயரும் என ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

Next Story