“மை” பற்றிய உண்மைகள்!


“மை” பற்றிய உண்மைகள்!
x
தினத்தந்தி 15 Feb 2019 10:53 AM GMT (Updated: 15 Feb 2019 10:53 AM GMT)

உங்கள் ரீபில் பேனா அல்லது இங்க் பேனாவுக்குள் இருக்கும் மை பற்றிய ரகசியங்கள் தெரியுமா?

தாவர சாயங்கள், எலும்புகளில் இருந்து பழைய காலங்களில் மை தயாரிக்கப்பட்டுள்ளன. இன்றைய டிஜிட்டல் உலகில் மையின் பயன்பாடு அதிகம். மை தயாரிப்பு முறைகளும் புதிய பரிமாணத்தை எட்டிவிட்டன. மை பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்வோமா குட்டீஸ்?

காலம் காலமாக எழுத்துகள் மனிதனின் சிந்தனையை வெளிப் படுத்தி வந்துள்ளன. அச்சிடும் முறைகள் தோன்றிய பின் எழுத்துகளை பதிவிட மைகள் பெரிதும் பயன்பட்டன. அதற்கு முன்பும் சாயங்களை மையாக பயன்படுத்தி உள்ளனர். மை திரவமாகவும், பசைபோலவும் காணப்படுவது உண்டு.

4 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே மை பயன்படுத்தப்பட்டுள்ளது. சீனர்களும், எகிப்தியர்களும் எழுதுவதற்காக மையை பயன் படுத்தி உள்ளனர். கரி மற்றும் சாம்பலில் இருந்து அவர்கள் மை தயாரித்து உள்ளனர். தண்ணீர், எண்ணெய் மற்றும் விலங்குகளின் உடல் திரவங்களை, சாம்பலுடன் சேர்த்து மை தயாரிக்கப்பட்டது. தாவரங்களின் சாயங்களையும் மையாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மை பேனாக்கள் உருவாக்கப்படும் முன்பு மையை தொட்டு எழுத இறகுகள், தூரிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கூட்டன்பர்க் என்பவர் அச்சுத்துறைக்கு பயன்படும் மையை 15-ம் நூற்றாண்டில் உருவாக்கினார்.

நவீன கால மை தயாரிக்கப் பயன்படும், கனரக உலோகங்கள் மற்றும் புதுப்பிக்கமுடியாத எண்ணெய்ப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளன.

இன்றைய காலத்தில் மையானது பவுடராகவும், திடப்பொருளாகவும்கூட தயாரிக்கப்படுகிறது. நீர்போல திரவமாகவும், கெட்டிப்பொருளாகவும், பசைபோலவும் மைகள் உள்ளன. அடிப்படை வண்ணங்கள் மட்டுமல்லாமல், தேவைக்கேற்ற அனேக வண்ணங்களில் மை தயாரிக்கப்படுகிறது.

சாதாரண பந்துமுனை (பால்பென்) பேனாக்களில் உள்ள மை 3 கிலோமீட்டர் தூரம் எழுதக்கூடியது.

பிரபலமான அமெரிக்க கார்ட்டூன் கதாசிரியர்களில் ஒருவர் மார் குருன்வால்டு. மார்வெல் காமிக்ஸ் என்ற பெயரில் நிறைய காமிக் கதைகளை வெளியிட்டார். த அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா போன்ற புகழ்பெற்ற படங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் தனது கடைசி ஆசையாக, தான் மரணம் அடைந்ததும், தனது சாம்பலை, மையுடன் கலந்து காமிக் புத்தகம் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று ஸ்குவாடிரான் சுப்ரீம் என்ற அவருடைய கதை, அவரது அஸ்தி மையில் அச்சிடப்பட்டது.

கரையான்களின் உடலில் ஒருவிதமான மை சுரக்கிறது. பெரோமோன் எனப்படும் இந்த ரசாயனப் பொருளை, தனது உணவுபொருட்களில் சுரந்து அடையாளமிடும். நீண்ட காலத்திற்குப் பிறகும் அவற்றால் இந்த ரசாயனப் பொருளைக் கொண்டு தனது இரையை அடையாளம் காண முடியும். நாம் பயன்படுத்தும் பேனாமையில் பெரோமோன் ரசாயனப் பொருள் வாசனை உண்டு. இதைக் கொண்டுதான் நோட்டுபுத்தகம் இருக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடித்து கரையான்கள் அரிக்கின்றன.

பேனாவுக்கு பயன்படுத்தப்படும் மை, விலை மலிவானது. பிரிண்டர்களில் பயன்படுத்தப்படும் கேட்ரிஜ் மை, அதிக விலை கொண்டது. அமெரிக்காவில் ஒரு காலன் (3.7 லிட்டர்) பிரிண்டர் மை, 9 ஆயிரத்து 600 டாலர் விலை கொண்டது. இந்த விலைக்கு 9 ஆயிரத்து 250 லிட்டர் பெட்ரோல் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோபஸ், ஸ்குயிட் மற்றும் கட்டில்பிஷ் மீன் இனம் ஆகியவை ஆபத்து காலத்தில் ஒருவித மையை பீய்ச்சி அடிக்கும். இது உப்புசுவை கொண்டது. மேலை நாட்டு உணவு விடுதிகளில் ‘ஸ்குயிட் இங்க்’ என்ற பெயரில் இந்த மை, ஒரு சாஸ் வகையாக விருந்தில் பரிமாறப்படுகிறது. அதேபோல சில மருந்து பயன்பாட்டிற்கும் இந்த மையை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக புற்றுநோய் மருந்திலும் இது சேர்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் 1985-க்கு முன்பு அச்சிடப்பட்ட புத்தகங்களை குழந்தைகளுக்கு விற்க தடை போட்டு ஒரு சட்டம் வெளியானது. ஏனெனில் அப்போது பயன்படுத்தப்பட்ட மையில் ஈயம் கலந்திருப்பதும், அது குழந்தைகளை எளிதில் பாதிக்கும் என்றும், ஈய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே குழந்தைகள் புத்தகத்தை விற்க வேண்டும் என்றும் அந்த தடைச்சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அங்கு நூலகங்களில் இருந்தும், விற்பனையாளர்களிடம் இருந்தும் ஏராளமான குழந்தைப் புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டு அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தத்தை விலை மலிவான மையாக கருதுவது உண்டு. ஆனால் ரத்தம் வெளியேறுவது வேதனையைத் தரும் என்பதால் பலரும் ரத்தத்தை எழுதப் பயன் படுத்துவதில்லை. இருந்தாலும் ஆபத்தான வேளைகளில் ரத்தத்தை எழுத்தாகப் பயன்படுத்தி கருத்தை வெளியிட்ட சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. காதலர்களும், ஓவியர்களும் தங்கள் ரத்தத்தால் காதல் மொழிகளையும், ஓவியங்களையும் தீட்டியுள்ளனர்.

மையில் ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் அதை வாயில் வைத்து சுவைக்கவோ, குடிக்கவோ கூடாது. மையில் உள்ள பொருட்கள் தலைவலி, சரும எரிச்சலை உருவாக்கலாம். நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஆபத்தும் உண்டு.

Next Story