10 மாதங்களில் இல்லாத அளவிற்கு மொத்த விலை பணவீக்கம் 2.76 சதவீதமாக குறைந்தது


10 மாதங்களில் இல்லாத அளவிற்கு மொத்த விலை பணவீக்கம் 2.76 சதவீதமாக குறைந்தது
x
தினத்தந்தி 15 Feb 2019 12:03 PM GMT (Updated: 15 Feb 2019 12:03 PM GMT)

ஜனவரி மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 2.05 சதவீதமாக குறைந்து இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் அது 2.11 சதவீதமாக (மறுமதிப்பீடு) இருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 5.07 சதவீதமாக இருந்தது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

ஜனவரி மாதத்தில், 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு மொத்த விலை பணவீக்கம் 2.76 சதவீதமாக குறைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்தப் பணவீக்கம் 3.80 சதவீதமாக இருந்தது. சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் அது 3.02 சதவீதமாக இருந்தது.

கொள்கை முடிவுகள்

பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. இவ்வங்கி முன்பு மொத்த விலை பணவீக்கம் அடிப்படையில் தனது கொள்கை முடிவுகளை எடுத்து வந்தது. ஆனால் இப்போது சில்லரை விற்பனை விலை பணவீக்கத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனால் பணவீக்கத்தை துல்லியமாக அளவிட முடியும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரிசர்வ் வங்கி கடந்த 7-ந் தேதி (வியாழக்கிழமை) கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை அறிவித்தது. அப்போது வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை இவ்வங்கி 0.25 சதவீதம் குறைத்தது. எனவே ரெப்போ ரேட் 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

முன்னேற்றம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்ந்து இருந்தது. அக்டோபர் மாதத்தில் 5.28 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், நவம்பரில் அது 4.64 சதவீதமாக குறைந்தது. டிசம்பர் மாதத்தில் அது 3.80 சதவீதமாக மேலும் குறைந்தது.

இந்நிலையில், ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.76 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இது 10 மாதங்களில் இல்லாத முன்னேற்றமாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இப்பணவீக்கம் 3.02 சதவீதமாக இருந்தது.

ஜனவரி மாதத்தில் உணவுப்பொருட்களின் மொத்த விலை பணவீக்கம் 3.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்தில் அது 2.28 சதவீதமாக இருந்தது. உற்பத்தி பொருள் களை பொறுத்தவரை இப்பணவீக்கம் 2.61 சதவீதமாக குறைந்து இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் அது 3.59 சதவீதமாக இருந்தது. எரிபொருள்கள் மற்றும் மின்சார பிரிவில் மொத்த விலை பணவீக்கம் 1.85 சதவீதமாக குறைந்து இருக்கிறது. முந்தைய டிசம்பர் மாதத்தில் அது 8.38 சதவீதமாக இருந்தது.

சில்லரை விலை பணவீக்கம்

2012 ஜனவரி மாதத்தில் இருந்து நுகர்வோர் விலை பணவீக்கம் (சிபிஐ) எனப்படும் சில்லரை விற்பனை விலை பணவீக்க புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த பணவீக்கம் கிராமம், நகரம் மற்றும் நாடு (நகரங்களும், கிராமங்களும்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வெளியிடப்படுகிறது.

ஜனவரி மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 2.05 சதவீதமாக குறைந்து இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் அது 2.11 சதவீதமாக (மறுமதிப்பீடு) இருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 5.07 சதவீதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கி மதிப்பீடு

சில்லரை விலை பணவீக்கம். நடப்பு ஜனவரி-மார்ச் காலாண்டில் 2.8 சதவீதமாக குறையும்; அடுத்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) இந்தப் பணவீக்கம் 3.2-3.4 சதவீதமாக இருக்கும்; அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 3.9 சதவீதமாக உயரும் என ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ஆய்வறிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகிறது. இவ்வங்கியின் அடுத்த ஆய்வுக்கூட்டம் ஏப்ரல் 2-ந் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும். வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு அம்மாதம் 4-ந் தேதி (வியாழக்கிழமை) வெளிவரும்.

வட்டி விகிதங்கள்

ஜனவரி மாதத்தில் சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறைந்து இருப்பதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும், வட்டி விகிதங்களைப் பொறுத்தவரை பழைய நிலையே நீடிக்கும் என்பது பெரும்பாலான நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. 

Next Story