விபத்தில் இணைந்த ஜோடி


விபத்தில் இணைந்த ஜோடி
x
தினத்தந்தி 17 Feb 2019 5:30 AM GMT (Updated: 16 Feb 2019 7:43 AM GMT)

ஒரே சாலையில் விபத்தில் சிக்கி முதுகுத்தண்டுவடத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு சக்கர நாற்காலிக்குள் முடங்கிய ஜோடி, காதலில் விழுந்து இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கிறது.

அந்த காதல் தம்பதியரின் பின்புலம் நெகிழ்ச்சியானது. அவர்களது பெயர் நேகால் தாகூர் - அனுப் சந்திரன்.  இருவரும் 11 ஆண்டுகளுக்கு முன்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்திருக்கிறார்கள். அப்போதுதான் இருவரும் ஒரே சாலையில் பயணித்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அது பற்றி நேகால் சொல்கிறார்:

‘‘நாங்கள் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசினோம். நான் கார் விபத்தில் படுகாயமடைந்து நடக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவத்தை கூறினேன். அப்போதுதான் அவரும் அதே சாலையில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. பயணத்தின்போது இருவரும் பயன்படுத்தியதும் ஒரே வகை காராகத்தான் இருந்திருக்கிறது. விபத்து நடந்த காலகட்டத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.

ஒரே விதமாகவே காயமடைந்து முதுகு தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகி நடமாட முடியாத நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். விபத்தில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிகழ்வுகளை இருவரும் நினைவு கூர்ந்தோம். ஆரம்பத்தில் எங்கள் பேச்சு விபத்து, மறுவாழ்வு நிகழ்வுகள் பற்றியதாகவே இருந்தது. இருவருக்கும் இடையே புரிதல் இருந்ததால் நட்பாக பழக தொடங்கினோம். பின்னர் நண்பர்களுடன் வெளியே சென்றோம். சக்கர நாற்காலி மட்டுமே துணையாக இருந்த நிலை மாறி ஆறுதலாக இன்னொரு துணை கிடைத்த மன நிறைவு உருவானது. பின்பு நீண்ட நேரம் செல்போனில் மனம் விட்டு பேசினோம். மெசேஜ் அனுப்பி தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தோம். சில நாட்கள் அதிகாலை 4 மணி வரை கூட எங்களுடைய உரையாடல் நீடித்திருக்கிறது’’ என் கிறார்.

இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். நேகால் 20 நாள் பயணமாக வெளிநாடு சென்றிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளியும், தனிமையும் தங்களுக்குள் காதல் அரும்பியிருப்பதை தெரியப்படுத்தி இருக்கிறது.

‘‘நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டிருப்போம். அவள் வெளிநாடு சென்றதும் பேச முடியாத நிலை உருவானது. வாரம் ஒரு முறை பேசினாள். தினமும் பேச முடியாமல் போனதால் எப்போது அவள் அழைப்பு வரும் என்ற ஏக்கத்துடன் இருந்தேன். அவளை இழந்து தனிமையில் இருப்பது போன்ற எண்ணம் உருவானது. என் உணர்வுகளை அவளிடம் வெளிப்படுத்தினேன். அவளும் அதே மனநிலையில் இருப்பதாக சொன்னாள். எப்போது சந்திப்போம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம்’’ என்கிறார், அனுப் சந்திரன்.

மும்பையை சேர்ந்த இருவரும் சக்கர நாற்காலியில் சுழன்றாலும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டியிருக் கிறார்கள். ஒருவருக்கொருவர் மனதார விரும்பினாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஏழு ஆண்டுகள் நண்பர்களாகவே தொடர்ந்திருக்கிறார்கள். அதன் பிறகு அனுப் தன்னுடைய விருப்பத்தை நேகாலிடம் தெரிவித்துவிட்டு திரு மணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். ஆனால் இருவருடைய வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ‘எழுந்து நடமாட முடியாத நிலையில் இருக்கும் நீங்கள் எப்படி திரு மணம் செய்து கொண்டு வாழ முடியும்?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இருவரும் வாழ்க்கையில் இணைவதில் பிடிவாதமாக இருந்ததால் பின்னர் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்திருக்கிறார்கள். அவர்களுடைய திரு மணம் கடந்த ஆண்டு நடந்திருக்கிறது.

அனுப் தனியார் வங்கியில் பணிபுரிகிறார். நேகால் சுய தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

Next Story