சிறப்புக் கட்டுரைகள்

கடந்த ஆண்டு, மிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்று + "||" + Last year, one of the hottest years

கடந்த ஆண்டு, மிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்று

கடந்த ஆண்டு, மிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்று
கடந்த 2018-ம் ஆண்டு, 1880 முதலான உலக வரலாற்றில் மிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்று என்று ‘நாசா’ தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நாசாவும், தேசிய கடலியல் மற்றும் வளிமண்டலவியல் நிர்வாக அமைப்பும் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1880-க்குப் பிந்தைய காலகட்டத்தில், 2015, 2016, 2017 ஆண்டுகளுக்குப் பின் மிக வெப்பமான ஆண்டாக 2018 திகழ்ந்துள்ளது.

நவீன காலப் பதிவுகளில், கடந்த 5 ஆண்டுகள்தான் மொத்தமாக மிகவும் வெப்பமான ஆண்டுகள் ஆகும். அதிலும், ‘நீண்டகாலமாக அதிகரித்துவரும் உலக வெப்பநிலை உயர்வில், 2018-ம் ஆண்டுதான் அதிவெப்பமான ஆண்டு’ என, நாசாவின் கோடார்ட் வானியல் ஆய்வு நிறுவன இயக்குநர் கெவின் ஷிமிட் கூறுகிறார்.

பெரும்பாலும் வானிலை தன்மைகள், பிராந்திய வெப்பநிலையைப் பாதிக்கின்றன. எனவே, உலகின் அனைத்துப் பகுதிகளும் ஒரே மாதிரி சூடாவதில்லை. 2018-ம் ஆண்டில், அமெரிக்காவில் அடுத்தடுத்து உள்ள 48 மாநிலங்களின் வெப்பநிலை, இதுவரை பதிவானதிலேயே 14-வது அதிகபட்சமானதாக இருந்தது.

6300 வானிலை நிலையங்கள், கப்பல் மற்றும் கடல் மிதவைகளால் பதிவு செய்யப்பட்ட கடற்பரப்பு வெப்பநிலைகள், அண்டார்டிக் ஆய்வு நிலையங்களில் பதிவான வெப்பநிலை அளவுகள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து நாசா ஆய்வு மேற்கொண்டது.

ஆர்ட்டிக் பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பு வலுவாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் அதிகமாக பனிப் பாறைகள் உருகின.

கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக்கில் பனிப்பாறைகள் பெருமளவு உருகியது, கடல் மட்ட உயர்வுக்குக் காரணமானது. உலக வெப்பநிலை உயர்வு, நீண்ட காட்டுத் தீ மற்றும் அதீத வானிலை நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்தது என்று ஷிமிட் தெரிவித்தார்.

உயரும் கடல்மட்டத்தால் கடற்கரைப் பகுதிகள் பாதிப்பு, வெப்ப அலைகள், கடும் மழைப் பொழிவு, சுற்றுச்சூழல் மாற்றம் என்று நீண்டகால உலக வெப்ப மயமாதலின் தாக்கம் ஏற்கனவே உணரப்பட்டு வருகிறது என்று ஷிமிட் சொல்கிறார்.

உலக வெப்பமயமாதல் என்பது அமெரிக்காவில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. உலக பருவநிலை மாற்றம் தொடர்பான 2015-ம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் நிர்வாகம் விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

உலக வெப்ப அதிகரிப்பின் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்கிறது, அதீத வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்ற கருத்துகள் குறித்து தனது சந்தேகத்தை டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் டிரம்ப் நிகழ்த்திய வருடாந்திர உரையிலும் உலக வெப்பமயமாதல் பற்றிக் குறிப்பிடவில்லை.