சிறப்புக் கட்டுரைகள்

அதிர்ச்சியும்.. அவலமும்.. இ்ந்தியாவில் விற்பனையாகும் நேபாள பெண்கள் + "||" + Shock and misery ..Nepal country womens selling in India

அதிர்ச்சியும்.. அவலமும்.. இ்ந்தியாவில் விற்பனையாகும் நேபாள பெண்கள்

அதிர்ச்சியும்.. அவலமும்.. இ்ந்தியாவில் விற்பனையாகும் நேபாள பெண்கள்
நேபாள பெண்களை வளைகுடா நாடு களுக்குக் கடத்துவதற்கான மையமாக இந்தியா மாறியிருக்கிறது. இக்கடத்தலை தடுக்க முடியாமல் இந்திய, நேபாள போலீசார் திணறி வருகின்றனர். இதுதொடர்பாக பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள், “ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 பெண்களாவது நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குக் கடத்தப்படுகிறார்கள்” என்கின்றனர்.
2015-ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் இருந்து நேபாளம் இன்னும் முழுமையாக மீளவில்லை. அந்த பூகம்பத்துக்குப் பின்புதான் நேபாளத்தில் இருந்து பெண்களை கடத்துவது அதிகரித்துள்ளது.

வறுமையின் பிடியில் சிக்கியுள்ள நேபாளிய பெண்கள், கடத்தல்காரர்களுக்கு எளிய இலக்காகி உள்ளனர். அப்பெண்களுக்கான ‘தேவை’யும் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் அதிகரித்துள்ளதாம். நேபாளத்தில் இருந்து பெண்களை இந்தியாவுக்கு அழைத்து வருவது அன்றாடச் செயல்பாடாகிவிட்டது. வளைகுடா நாடுகளுக்கு அவர்களை அனுப்பும் மையமாக இந்தியா மாறியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப் படுகின்றனர்.

இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி கூறுகையில், தான் பொறுப்பேற்ற 2015-ம் ஆண்டு முதல் டெல்லி எங்கும் மொத்தம் 535 மீட்பு நடவடிக்கைகள் மூலம் பெண்களை தங்கள் அணி மீட்டிருப்பதாகவும், அவர்களில் 60 சதவீத பெண்கள் நேபாளத்தில் இருந்து கடத்தப்பட்டவர்கள் என்றும் சொல்கிறார்.

டெல்லி மகளிர் ஆணையம் சமீபத்தில், டெல்லியின் முனிர்கா, மைதான் கார்கி, பகார்கஞ்ச் பகுதிகளில் அடுத்தடுத்து 3 மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது அங்கிருந்த பெண்கள் அனைவரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட இருந்தார்கள் என்று அறிந்தது.

இதுதொடர்பாக நேபாள எல்லையோரப் பகுதியைச் சேர்ந்த போலீசார் கூறுகையில், தங்களை சட்டப்பூர்வமான வேலைவாய்ப்பு முகவர்களைப் போல காட்டிக்கொள்ளும் கடத்தல்காரர்கள், அந்தப் போர்வையில் பெண்களை இந்தியாவுக்குள் கொண்டுவந்து, பின்னர் வளைகுடா நாடுகளுக்கு விற்றுவிடுகிறார்கள் என்கின்றனர்.

பெண்கள் கடத்தல் தொடர்பாக பல சோதனைகள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மேலும் பல செயல்பாட்டாளர்கள், சில பெண்கள் தாங்கள் பாலியல் உள்ளிட்ட விஷயங்களுக்காக கடத்தப்படுவதை உணர்ந்தே இருக்கின்றனர், தெரிந்தே அதற்கு உடன்படுகின்றனர் என்கின்றனர். வறுமையும், கல்வியறிவின்மையும் அவர்களை இந்நிலைக்குத் தள்ளுகிறது.

‘‘இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம், சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினரும், அவர்களின் அக்கம்பக்கத்தினருமே கடத்தல்காரர்களுக்கு உதவுவதுதான். இந்த விஷயத்தை, மீட்கப்பட்ட பெண்கள் சிலரே எங்களிடம் கூறினர்’’ என்கின்றனர், திகைப்பு மாறாத சில செயல்பாட்டாளர்கள்.

போலீசாரும் இவ்விஷயம் தொடர்பாக, கடத்தப்பட்ட பெண்கள் சிலரை தாங்கள் மீட்டாலும், தங்களை கடத்தி வந்தவர்கள் பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிப்பதில்லை என்கின்றனர்.

‘‘தங்களை கடத்தி வந்தவர்கள் என்றில்லை, அவர்கள் ஏன் தங்கள் நாட்டில் இருந்து கிளம்பிவர முடிவு செய்தார்கள், எங்கே அவர்கள் கொண்டு செல்லப்பட போகிறார்கள், அதற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள்’’ என்கிறார், போலீஸ் அதிகாரி ஒருவர்.

‘‘போதுமான ஆதாரம் இல்லாதது, நீதிமன்றத்துக்கு வெளியே பேசி முடிக்க விரும்புவது, கடத்தப்பட்ட பெண்களின் சமூகப் பயம் போன்றவற்றால் பெரும்பாலும் கடத்தல்காரர்கள் தண்டனையில் சிக்காமல் தப்பிவிடு கிறார்கள்’’ என்று ஒரு பெண்ணிய செயல்பாட்டாளர் கூறுகிறார்.

நேபாளத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் எல்லையைக் கடந்து இந்தியா வருகிறார்கள். அவர்கள் ஒவ் வொருவரையும் கண்காணிப்பது எளிதான காரணம் அல்ல. நில வழியாக நேபாளத்தில் இருந்து இந்தியா வருவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை. இதுபோன்ற நிலைதான் கடத்தல்காரர்களுக்கு வசதியாகிவிடுகிறது என்று நேபாள எல்லைப் பகுதியில் பணியாற்றும் ஓர் அதிகாரி கூறுகிறார்.

மற்றொரு போலீஸ் அதிகாரி கூறும்போது, கடத்தப்பட்டதாக தாங்கள் சந்தேகப்படும் பெண்களை அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதே கடினமான செயலாக இருக்கிறது என்கிறார். ‘‘நேபாளத்தின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து பெண்களை அழைத்து வரும் கடத்தல்காரர்கள், எல்லையில் உள்ள போலீசாரை ஏமாற்ற பல வழிகளைக் கையாளுகிறார்கள். அப்பெண்களிடம் யாராவது விசாரித்தால், இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக அல்லது சுற்றுலா செல்வதாக கூறும்படி சொல்லிவைத்திருக்கிறார்கள்’’ என்று அந்த அதிகாரி கூறுகிறார்.

நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் பெண்களிடம் பாஸ்போர்ட் கேட்கப்படுவதில்லை என்பதால், அதை கடத்தல்காரர்களே வைத்துக்கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து அவர்கள் செல்லவேண்டிய நாட்டுக்கான விசா நடைமுறைகளை முடித்தபின், பெண்களிடம் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்கின்றனர். எந்தெந்தப் பெண்களை எந்த நாட்டுக்கு, எப்போது, எப்படி அனுப்புவது என்று டெல்லியில்தான் முடிவு செய்யப்படுகிறது.

கடத்தப்பட்ட நேபாள பெண்களை மறைத்து வைப்பதற்கு டெல்லியின் சில பகுதிகள் ‘பெயர் பெற்றவை’ என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். பொதுவாக, டெல்லியின் பகார்கஞ்ச், லட்சுமி நகர், கோவிந்தபுரி மற்றும் தென்மேற்கு டெல்லியின் மறைவான இடங்களில்தான் நேபாள பெண்கள் ஒளித்து வைக்கப்படுகின்றனர். விசா ஏற்பாடுகள் முடியும் சில நாட்கள் வரை அங்கே வைக்கப்பட்டிருக்கும் அவர்கள், பின்னர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்தியாவில் உள்ள நேபாள பெண்களால் நடத்தப்படும் அழகு நிலையங்கள், மசாஜ் கிளப்புகளுக்கும் அவர்கள் அனுப்பப்படுவது உண்டு.

பலரும், அழகு நிலையங்கள் என்ற முகமூடியை மாட்டிக்கொண்டு பாலியல் தொழில் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுக்கு அனுப்பப்போகும் பெண்களின் புகைப்படங்கள் முன்பே குறிப்பிட்ட நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டு ‘விலை’ பேசப்படுகிறது. வெளி நாடுகளுக்கு விற்றபின், அப்பெண்கள் குறித்து கடத்தல்காரர்கள் கவலைப்படுவதில்லை.

நேபாள பெண்கள் இந்தியா வழியாக பெரும்பாலும், மலேசியா, ஓமன், கத்தார், கிர்கிஸ்தான், குவைத், சவுதி அரேபியா, லெபனான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப் படுவதாக போலீஸ் வட்டாரத்தில் கூறு கின்றனர்.

இந்த அவலத்துக்கு விடிவு எப்போது என்பது தெரியவில்லை!