காலைநேரத்தில் கண்ணீர் சிந்தவைக்கும் ‘டாய்லெட்’ கதைகள்..


டாக்டர் எஸ்.அமுதகுமார், பொது மற்றும் குடும்ப நல மருத்துவர், சென்னை.
x
டாக்டர் எஸ்.அமுதகுமார், பொது மற்றும் குடும்ப நல மருத்துவர், சென்னை.
தினத்தந்தி 17 Feb 2019 9:24 AM GMT (Updated: 17 Feb 2019 9:24 AM GMT)

நமது உடல் நுட்பமாக இயங்கும் தொழிற்சாலை போன்றது. நாம் அதிசயப்படும் அளவுக்கு அது அற்புதமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அது எந்த ஒவ்வொரு வினாடியும் எந்த சிரமமும் இல்லாமல் தன் பணியை சிறப்பாக செய்யவேண்டும் என்றால் நாம் உணவு உண்ண வேண்டும்.

அந்த உணவு சரியான முறையில் ஜீரணமாகி, உடல் இயக்கத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கிவிட்டு, கழிவுகள் இயல்பாக வெளியேறவும் வேண்டும். இந்த சுழற்சி முறை சரியாக இருந்தால்தான் உடல் சுறுசுறுப்பாக இயங்கும். இதில் தடை ஏற்பட்டால் உடல் நோய்களின் கூடாரமாகிவிடும்.

“அதெல்லாம் சரிதான் டாக்டர். நல்லதையே சாப்பிடுகிறோம். நன்றாகவே ஜீரணமும் ஆகிறது. ஆனால் பிரச்சினை டாய்லெட்டில்தான் ஆரம்பிக்கிறது. வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு போயிருந்தேன். அங்குள்ள டாய்லெட்டில் மிகவும் அவதிப்பட்டுவிட்டேன். ஏன் கஷ்டப்பட்டீர்கள் என்று நீங்கள் என்னைக் கேட்கவில்லையே?” என்ற கேள்வியை நண்பர் கேட்டுவிட்டு, பதிலையும் அவரே சொன்னார்.

“அங்கு ‘இந்தியன் டைப் டாய்லெட்’ இருந்ததே எனது கஷ்டத்துக்குக் காரணம்” என்றார் அவர். “இந்தியன் டைப் டாய்லெட்’ என்றால் அவ்வளவு பிரச்சினையா!! தினமும் நிறையபேர் இந்தியன் டைப் டாய்லெட்டைத் தானே உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் ஏன் உங்களுக்கு மட்டும் அது கஷ்டம் தருகிறது?” என்று நான் கேட்டேன்.

“என்னைப்போல் ‘இந்தியன் டைப் டாய்லெட்டை’ உபயோகித்து கஷ்டப்படுபவர்கள் ஏராளம். இந்தியன் டைப் டாய்லெட்டை உபயோகிக்காமலேயே இருந்துவிட்டு, திடீரென்று உபயோகித்து கஷ்டப்படுபவர்களும் ஏராளம். எல்லோருமே சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், வயிற்றை சுத்தமாக காலி பண்ணவும் முடியாமல், வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் வயதானவர்கள் படும் கஷ்டம் இருக்கிறதே, அது கண்ணீரை வரவழைத்துவிடும்” என்றார் அந்த நண்பர்.

காலைக்கடனை குறிப்பிட்ட நேரத்தில், தினமும், ஒழுங்காக, சரியாக, சுத்தமாக, முடித்துவிட்டால், அப்போது ஏற்படும் சந்தோஷமும், உற்சாகமும் அளவிட முடியாதது.

“நாற்காலியில் உட்காருவது போலுள்ள வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டை தினமும் உபயோகித்துப் பழகிய எனக்கு திடீரென்று காலை மடக்கி குத்துக்காலிட்டு உட்காருவது போலுள்ள டாய்லெட்டை உபேயாகித்தபோது, இரண்டு கால் முட்டிகளும் மடங்க மறுத்தது. கட்டாயப் படுத்தி, கால் முட்டியை மடித்தபோது, முட்டிகளில் வலி அதிகமாகி, டாய்லெட்டில் உட்காரவே முடியாமல்போய்விட்டது” என்று அவர் சொன்னபோது கண்கள் கலங்கிவிட்டன. அந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருக்கிறார். அறுபது வயதான அவரது நிலையே அப்படி என்றால், அதற்கு மேல்பட்ட முதியோர்கள் தினமும் எவ்வளவு கண்ணீர்வடிப்பார்கள்!

‘ஆனக் கதகள்’ (யானைக் கதைகள்) என்ற தலைப்பில் மலையாள மொழியில் யானைகளைப் பற்றிய ஆயிரக் கணக்கான விஷயங்கள் கொண்ட ஒரு புத்தகம் இருக்கிறது. அதுபோல ‘டாய்லெட் கதைகள்’ என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டால், லட்சக்கணக்கான பேர் வெளியில் சொல்லமுடியாத தங்களது பல டாய்லெட் பிரச்சினைகளை அந்தப் புத்தகத்தில் சொல்வார்கள். அவ்வளவு பிரச்சினைகள் பலபேருக்கு இருக்கிறது. ஆணும் சரி, பெண்ணும் சரி, உலகெங்கிலுமுள்ள ஜனத்தொகையில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்டோர், இந்த டாய்லெட் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நாம் சாப்பிட்ட பலவிதமான உணவு, கடைசியில் கழிவுப்பொருளாக மாறிய பிறகு, குறிப்பிட்ட நேரத்தில் உடலை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். கழிவுப்பொருளாக மாறிய உணவு, பெருங்குடலின் கடைசிப் பாகத்திற்கு வந்துவிட்ட பிறகு, வெளியே வராமல் மலக்குடலிலேயே இருப்பதும் நல்லதல்ல. குடலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பதும் நல்லதல்ல. பாதாம் அல்வா என்றாலும் சரி, முந்திரி பக்கோடா என்றாலும் சரி கழிவுப்பொருளாக மாறிய பிறகு, அது கெட்டுப்போன ஒரு பொருள்தான். அது நமது உடலுக்குள் நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அதனால்தான் தினமும் காலையில் கட்டாயம் வயிற்றை சுத்தம் பண்ணிவிட வேண்டும் என்று சொல்கிறோம்.

வயிற்றுக்குள் கெட்டுப்போன பொருள் அதிக நேரம் இருக்கக்கூடாது என்று சொல்லும்போது வயிற்றை சுத்தமாக காலி பண்ண மிக முக்கிய உதவியாக இருக்கும் ‘டாய்லெட்டும் ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது அல்லவா! எனவே ‘டாய்லெட்’ பிரச்சினையை முதலில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வீட்டிலும் சரிசெய்து கொள்ள வேண்டும்.

காலைக்கடனை கழிப்பதற்கு தனிமையான, ஒதுக்குப்புறமான, ஓர் இடம் வேண்டும் என்று மனிதன் நினைக்க ஆரம்பித்த பிறகுதான், ‘டாய்லெட்’ என்றொரு அமைப்பு வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது. டாய்லெட் என்றொரு அமைப்பு உருவாவதற்கு முன்பு மனிதன், தான் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில், நினைத்தபடி உட்கார்ந்து, மலக்குடலிலுள்ள திடக்கழிவை வெளியேற்றிக் கொண்டிருந்தான். பல பேருக்கு முன்னிலையில், பொது இடங்களில், எல்லோரும் பார்க்கும்படியான ஒரு சூழ்நிலையில், திடக்கழிவை வெளியேற்றக் கூடாது என்று நமது முன்னோர்களுக்கு சொன்னபோது, அந்தக் காலத்தில் இந்தச் சொல்லுக்கு அதிகமான வரவேற்பு இல்லை. ஆனால் ‘டாய்லெட்’ என்றொரு அமைப்பை உருவாக்கியபிறகு, அதற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

முதலாம் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் செல்லப்பிள்ளையாக இருந்த, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘சர் ஜான் ஹாரிங்டன்’ என்பவர் தான், 1596-ம் ஆண்டில் ஒரே நேரத்தில் மேலிருந்து கீழ் அதிக தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுத்தம் பண்ணும் டாய்லெட்டைக் கண்டுபிடித்தார். அதற்கு முன்னர் நாமே தண்ணீரை ஊற்றி சுத்தம் பண்ணும் முறைதான் இருந்தது. ஆனால் இந்த முறையில் சுத்தமும், சுகாதாரமும் சரியாக கடைப்பிடிக்க முடியவில்லை. துர்நாற்றம், நோய் பரவும் அபாயம் முதலியவை அதிகமாகவே இருந்தது. சர் ஜான் ஹாரிங்டன் கண்டுபிடித்த டாய்லெட், உபயோகத்திற்கு வந்த பிறகு தான், சுத்தம் சுகாதாரம் ஓரளவு பேணப்பட்டது.

அன்றாடம் உடலிலிருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவு உடலின் மீதோ நாம் உடுத்தியிருக்கும் துணியின் மீதோ பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் திறந்த வெளியில் திடக்கழிவுகள் கிடந்தால் அதன்மூலம் நோய்கள் பரவிவிடக்கூடாது என்பதற்காகவும்தான் ‘டாய்லெட்’ வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தனக்கு வசதியான பல வழிகளில் திடக்கழிவை வெளியேற்றிக் கொண்டிருந்தாலும் ‘டாய்லெட்’ என்னும் கலாசாரம் 19-ம் நூற்றாண்டில்தான் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.

இதைத் தொடர்ந்து, உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் தங்களது வசதிக்கேற்ப, தங்களது தேவைக்கேற்ப, பலவிதமான வகைகளில் டாய்லெட்டுகளை உருவாக்கினார்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான டாய்லெட்டுகள் உருவாக்கப்பட்டன. உலகம் முழுவதும் சுமார் 12 விதமான டாய்லெட்டுகள் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு உபயோகத்தில் இருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தன.

- அடுத்த வாரமும்.

கட்டுரை: டாக்டர் எஸ்.அமுதகுமார், பொது மற்றும் குடும்ப நல மருத்துவர், சென்னை.

Next Story