மக்களின் பகையான வாகனப் புகை...!


மக்களின் பகையான வாகனப் புகை...!
x

உலக அளவில் தற்போது காற்று மாசுபட்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சுப் புகை. மற்றொன்று வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை. தொழிற்சாலைகளின் மாசு காற்று அது நிறுவப்பட்ட இடத்தின் அருகில் வசிப்பவர்களை பாதிப்பு அடைய செய்கிறது. ஆனால் வாகனப் புகை வாகனங்களின் பெருக்கத்தால் உலகெங்கும் உள்ள மக்களை பாதிக்க செய்கிறது.

இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு சுமாராக ஒரு லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் வாகனங்கள் சென்னை மாவட்ட ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகிறது. ஒரு மாவட்டத்தில் மட்டுமே இத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது என்றால் உலகெங்கும் உள்ள வாகனப் பயன்பாடு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. டெல்லியில் , காற்று மண்டலத்தில் புகை மூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசு அதிகரிப்பால், ஒற்றைப்படை எண்ணுள்ள வாகனங்களை ஒரு நாளும், இரட்டை படை எண்ணுள்ள வாகனங்களை மறுநாளும் பயன்படுத்துவது என, அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தியது; அதை, வாகன ஓட்டிகள் சரிவர கடைபிடிக்கவில்லை.

இதே நிலை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வந்து விடுமோ என்ற அச்சம் நாளடைவில் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், சில இடங்களில் ஆய்வு செய்தது. அதில், காற்றில் கலந்துள்ள கார்பன்- டை- ஆக்சைடு அதிக அளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ‘அதாவது, 1 லிட்டர் அளவு காற்றில், குறிப்பிட்ட அளவு மனிதனுக்கு ஒவ்வாத வாயுக்கள் இருக்கலாம். அதன்படி, 1 கோடி யூனிட் அளவுள்ள காற்றில், 200 யூனிட் அளவு ஒவ்வாத வாயுக்கள் இருக்கலாம். அதை தாண்டினால் பிரச்சினைதான் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் இந்த அளவு 300 யூனிட் ஆக அதிகரித்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இரண்டிலும் இருந்து உருவாகும், கார்பன்- டை- ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் துகள்கள் என சென்னை நகரத்தின் காற்று மண்டலம் மாசு அடைந்துள்ளதாக தெரிகிறது.

சென்னை மட்டுமல்லாது பெருநகரங்களில் வாகனங்களின் பெருக்கத்தால் புகையும் கூடுதலாக இருக்கிறது. அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு அலர்ஜி, காசநோய், இதயநோய் ஏற்படுகிறது. லண்டனில் உள்ள ஆராய்ச்சி மையம், வாகனப் புகை அதிகமாக உள்ள இடங்களில் வாழ்கின்ற நோயுற்ற மனிதர்களை ஆய்வு செய்ததில் 1 கிராம் மூளைத் திசுவில் 1 மில்லியன் அளவான இரும்புத் துகள்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இது போன்று வாகனங்களில் புகை இவ்வளவு கேடாக இருக்கும்போது, ஒரு சில கார் உற்பத்தி கம்பெனிகள் இதிலும் மோசடி செய்கிறது. கார்களிலிருந்து வெளியாகும் புகை அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அந்த அளவை விட 40 மடங்கு அதிகமான நைட்ரஜன் ஆக்சைடை வெளியிடும் அளவு வரம்பை மீறி ஒரு கார் நிறுவனம் தயாரித்துள்ளது. அப்படி தயாரிக்கப்பட்ட கார்களில் ஆய்வு செய்த போது அந்த கார் சுற்று சூழலுக்கு ஏற்ற கார் என காட்டும் அளவு தில்லு முல்லு செய்த காருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அது போன்ற கார்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஒரு வீட்டிற்கு ஒரு கார் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும். பெருநகரங்களில் வேலைக்கு செல்வோருக்கு மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் என பல வகையான ரெயில்களை நகரம் முழுவதும் இயக்குகிறார்கள். அதில் மிக விரைவில் இலக்கை சென்றடைந்து விடலாம். குளிர்சாதன வசதிகளுடனும் இருப்பதால் அதை பயன்படுத்தி வாகனங்களால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்தி நோயற்ற வாழ்வு வாழ்வது நம் கைகளில்தான் உள்ளது என உணர வேண்டும்.

நெய்தல் வய் நீதிமணி, சிதம்பரம்.

Next Story