சிறப்புக் கட்டுரைகள்

சிந்திப்பதே வாழ்வு + "||" + Thinking is life

சிந்திப்பதே வாழ்வு

சிந்திப்பதே வாழ்வு
கோடிக்கணக்கான உயிர்களின் சங்கமம் இவ்வுலகம். இதில் “கிடைத்தற்கரிய வாழ்க்கையை” பெற்ற உயிரினம் நாம் மட்டுமே!. ஆம்! பறவைகள் பிறக்கின்றன.
கோடிக்கணக்கான உயிர்களின் சங்கமம் இவ்வுலகம். இதில் “கிடைத்தற்கரிய வாழ்க்கையை” பெற்ற உயிரினம் நாம் மட்டுமே!. ஆம்! பறவைகள் பிறக்கின்றன. பறவைகளாகவே வாழ்கின்றன. பறவைகளாகவே மடிகின்றன. விலங்குகளும், இதர உயிரினங்களும் பிறப்பதுபோலவே, வாழ்ந்து மடிகின்றன. மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கு. மனிதன் தனது செயல்பாட்டினால் மனிதனாக வாழ்வான். கீழான செயல்பாட்டால் விலங்காகவே கருதப்படுவான். நல்ல செயல்பாடுகளினால் தெய்வமாகவே வணங்கப்படுவான். மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு காரணம் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்ற சிந்தனையோடு வாழ்வதுதான்.

ஒரு பெற்றோர் தங்களது ஒற்றைக் குழந்தையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வறுமையிலும், கடன் சுமையிலும் வாழ்ந்தனர். எனவே தற்கொலை செய்துகொள்வது என முடிவெடுத்தனர். எனவே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வதா? மருந்தை குடித்து இறப்பதா? தூக்குக் கயிற்றில் உயிரை விடுவதா? நெருப்பிற்கு இரையாவதா? தண்டவாளத்தில் தலை வைப்பதா? என ஆலோசித்தனர். அப்போது அந்த குழந்தை, அம்மா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது வாழ்வதற்கு ஒரு வழிகூட கிடைக்காதா? என்றது. அக்கேள்வி என்னும் சாட்டையடியில் விழித்தெழுந்தனர் பெற்றோர். இளம் தளிரையும் கருக்க நினைத்தவர்களின் வாழ்க்கை மீண்டும் பூத்தது. இத்தகைய மாறுபட்ட சிந்தனை இல்லாததால்தான் இவ்வுலகில் 40 மணித்துளிகளுக்கு ஒரு மனிதன் இவ்வுலகில் தற்கொலை செய்துகொள்கிறான்.

மகிழ்ச்சியாக வாழ்வதற்கே படைக்கப்பட்டவன் மனிதன். ஆனால் சோகத்தின் மறு உருவாய், வாழ்வதையே சாடிக்கொண்டிருப்பவர்களால் பிறந்ததன் நோக்கம் அர்த்தமற்றதாகி விடுகிறது. அதே நேரத்தில், அடுத்த நேரத்திற்கான உணவினைத் தேடிப் பெறவேண்டிய சூழ்நிலையில் உள்ள பறவைகளும், விலங்குகளும் கூட மகிழ்ச்சியாகவே வாழ்கின்றன. அவைகளை, நாம் அறிவில்லாதவைகள் என்கிறோம்.

“சிந்தனை என்பது உள்ளத்தின் விளக்கு” என்னும் மலேசியப் பழமொழிக்கேற்ப ஒரு நல்ல சிந்தனை ஒளியைப்போலவே நிறைய விளக்குகளை ஒளிரச் செய்யும். ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? என்ற ஐசக் நியூட்டனின் சிந்தனை புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க ஆணிவேராய் இருந்தது. புவியீர்ப்பு விசை உண்டென்றால் அவ்விசையிலிருந்து விடுபட்டால் நாம் விண்ணில் எளிதாகப் பறக்க முடியும் என்ற அடுத்த சிந்தனை உருவாகியது. விடுபடு திசைவேகத்தின் மூலம் உலகப் பரப்பிலிருந்து பறந்து நிலவிலே காலடி வைத்தான் மனிதன். அச்சிந்தனையை மெருகேற்றியதால் இன்று செயற்கைகோள்களை அனுப்பி மண்ணிலிருக்கும் நாமனைவரும் அலைபேசிகளால் ஒன்றிணைந்தோம். சிறிய பிரச்சினைகளை பெரிய சுமையாகச் சுமப்பவர்கள் ஆரோக்கியமற்ற சிந்தனையாளர்கள். ஆயிரம் பிரச்சினைகளையும் “இதுவும் கடந்து போகும்” என்று நினைப்பவர்கள் ஆரோக்கியமான சிந்தனையாளர்கள். பிரச்சினைகளைத் தீர்வு காண்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுபவர்கள் உலகளாவிய சிந்தனையாளர்கள். “நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்” என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகளுக்கேற்ப நற்சிந்தனை நல்ல மனிதர்களை உருவாக்குகிறது. சிந்தனைகளை கவனியுங்கள்; அவை வார்த்தைகளாக மாறும்; வார்த்தைகளை கவனியுங்கள்; அவை செயல்களாக மாறும்; செயல்களை கவனியுங்கள்; அவை பழக்கமாக மாறும்; பழக்கங்களை கவனியுங்கள்; அவை பண்பாக மாறும்; பண்பினை கவனியுங்கள்; அதுவே வாழ்க்கையாகும்.

எனவே, சிந்தனைகளை மாற்றினால் வாழ்வுமாறும் என்பது தான் இருபத்தோராம் நூற்றாண்டின் மாபெரும் கண்டுபிடிப்பு. ஒரு மனிதனின் வாழ்க்கை என்னும் ஓடத்தின் துடுப்பு தான் சிந்தனையாகும்.

ஒரு மனிதனுக்குள் ஒருநாளில் அறுபதினாயிரம் எண்ணங்கள் அலைகளைப்போல் வந்து மோதிச் செல்லும். இவற்றில் எத்தகைய எண்ணங்களை நாம் அவ்வப்போது அசைபோடுகிறோமோ அவை நம் மனதில் ஆழமாய்ப் படிந்துகொள்கின்றன. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மகிழ்ச்சியான சிந்தனைகளையே புரட்டிப் பார்த்தால் ஆற்றல் வெளிப்படும். உறவுகளுக்குள்ளே உள்ள நல்ல நினைவுகளை மட்டும் அடிக்கடி பார்ப்பவர்களின் உறவு கெட்டிப்படும். சிறு குற்றம் பார்த்தாலும் உறவுகள் வெடித்துச் சிதறும். களைகளைப் பிடுங்கி எறிந்து நல்விதைகளால் நாற்றாங்காலை அழகுப்படுத்தும் விவசாயியைப்போல் எதிர்மறைச் சிந்தனைகளை அகற்றி நற்சிந்தனைகளால் நிரப்பப்படும்போது நம் வாழ்க்கை செழிக்கும்.

ஒரு விளையாட்டுப் போட்டியில் இரண்டு அணிகள் பங்கேற்கின்றன. முதல் அணியிடம் கேள்வி கேட்கப்பட்டது. உங்களின் நோக்கமென்ன. “நாங்கள் தோற்கமாட்டோம்” என்றனர் ஒட்டுமொத்தமாய். அடுத்த அணியிடமும் அதே வினா. நாங்கள் “ஜெயிப்போம்” என்றனர் ஒரே குரலில். இருவரின் நோக்கமும் வெற்றியடைவதுதான் என்றாலும், வெற்றி பெறுவது இரண்டாம் அணியே. ஏனெனில் இரண்டாம் அணியின் சிந்தையில் “தோல்வி” என்ற எண்ணம் இல்லை. அதனை பதிலாய் வெளிப்படுத்தவுமில்லை. இது தேர்வுக்கும் பொருந்தும். “நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவேன்” என்ற நேர்மறைச் சிந்தனையாளர் மட்டுமே தேர்வை வெல்கிறார். இது வாழ்க்கைக்கும் பொருந்தும். உயர்வான சிந்தனை கொண்டவர்கள் தங்களோடு அவர்களைச் சார்ந்தோரையும் உயர்த்துகின்றனர். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்கின்ற சிந்தனை கொண்ட மனிதர்களால் மட்டுமே இவ்வுலகம் வாழ்கிறது.

தனக்கென சிந்தித்தால் விலங்கு! தன் குடும்பத்திற்காகச் சிந்திப்பது மனிதம்! சமுதாயத்திற்காக சிந்தித்தால் தலைவன். இன்று(பிப்ரவரி 22-ந் தேதி)உலக சிந்தனையாளர் தினம்.

ஆர்.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ். துணை ஆணையர், நுண்ணறிவு பிரிவு.