சிறப்புக் கட்டுரைகள்

சின்னத்திரைக்கு வருமா சென்சார் போர்டு? + "||" + Is the censor board coming to the screen?

சின்னத்திரைக்கு வருமா சென்சார் போர்டு?

சின்னத்திரைக்கு வருமா சென்சார் போர்டு?
இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட சின்னத்திரையே கொடிகட்டிப் பறக்கிறது. இன்று, அனைவரின் வீடுகளிலும் தொலைக்காட்சி இருக்கிறது.
தமிழ்நாட்டில், ஒவ்வொருவரும் சராசரியாக ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது. எனவே, அதிகளவு சேனல்களும் வந்துவிட்டன. பணம் செலுத்தியும், இலவசமாகவும் கிடைக்கும் அந்த சேனல்களில் விதவிதமான நிகழ்ச்சிகள் உலா வருகின்றன.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை சில குறிப்பிட்ட சேனல்கள் மட்டுமே இருந்தன. விவசாயம், ஆன்மிகம், மருத்துவம் என தரமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கால மாற்றத்தில் பல்வேறு சேனல்கள் வரத் தொடங்கியதும் போட்டி உருவானது. தொலைக்காட்சி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெறுவதற்காக ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான நிகழ்ச்சிகளையும், நெடுந்தொடர்களையும் ஒளிபரப்புகிறார்கள்.

வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாக ஜொலித்த நடிகர், நடிகையரும், இயக்குனர்களும் கூட சின்னத் திரையை நம்பி வருகிறார்கள். ஏனெனில் பெரிய அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தாததும், மக்களுக்கு மிக நெருக்கமானதும் இந்த சின்னத்திரைதான். காலையில் ஆரம்பிக்கும் நாடக நெடுந்தொடர்கள் இரவு 11 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது. வயதானவர்கள் வீட்டில் இருந்தால் காலையில் போடப்படும் தொலைக்காட்சி இரவு வரை ஓய்வதில்லை. அலுவலகம் செல்வோராக இருந்தால், வீட்டிற்குள் நுழையும் போதே அவர்களுக்குப் பிடித்த ஒரு தொடரைப் பற்றியோ, நிகழ்ச்சியை பற்றியோ கேட்டுக்கொண்டேதான் உள்ளே நுழைகிறார்கள். இவர்களின் ஆர்வத்தில் குழந்தைகளும் அதனைப் பார்க்க ஆரம்பித்து விடு கிறார்கள்.

மேலும் தனிமையில் வாழும் வயதானவர்கள், தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகையரையே தங்கள் சொந்த, பந்தங்களாக நினைத்துக்கொள்கிறார்கள். தொடரின் கதாநாயகிகளின் பெயர், உண்மை சுபாவம் ஆகியவற்றை மறந்து, கதாபாத்திரங்களையே நிஜமென்று நம்பும் அளவுக்கு அதில் ஒன்றிவிடுகிறார்கள். தொலைக் காட்சியில் பார்க்கத் தவறியவர்கள் கூட, இணையதளங்களிலும், ஹாட் ஸ்டார் போன்றவைகளிலும் பார்த்துவிடுகிறார்கள். தற்போது ஒளிபரப்பாகும் தொடர்களில் புது வியூகம் கடைப்பிடிக்கப்படுகிறது. திரைப்படங்களில் வருவது போல் பாடல்கள், தொட்டுப் பேசுதல், கட்டிப்பிடித்தல், கவர்ச்சி ஆடை அலங்காரம் என காண்பிக்கப்படுகிறது. தொடர்களின் கதைகள் கூட ஆரோக்கியமாக இருப்பதில்லை. குடும்பத்தைக் கெடுப்பது, முறையற்ற உறவு, பழி வாங்குவது என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பெரும்பாலும் கதைகளில் வில்லன்கள் இருப்பதில்லை. வில்லிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நல்ல முறையில் பழகும் உறவுகள் கூட இத்தொடர்களை பார்த்தால் சஞ்சலம் அடைகிறார்கள். இப்படி இருக்கலாமோ என தவறான எண்ண ஓட்டம் மனதில் ஏற்படுகிறது. பல வீடுகளில் ஒரு தொடரின், நடந்து முடிந்த பகுதியின் கதையை குழந்தைகளிடம் தான் கேட்கிறார்கள். இதனால் அவர்களையும் அறியாமல் குழந்தைகள் மனதில் நஞ்சு விதைக்கப்படுகிறது.

நகைச்சுவையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில், பார்ப்பவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஆபாசமான வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட வசனங்களுக்கும், அங்க அசைவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. சிறந்த நகைச்சுவை நடிகர்களாக வாழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, நாகேஷ் போன்றவர்கள் மக்களை சிரிக்க வைக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்தனர்.

நடன போட்டி நிகழ்ச்சிகளிலும், வெற்றி பெறுவதற்காக, காதல் பாடல்களுக்கு ஆடும்போது உச்சக்கட்ட உணர்வுகளுடனும், நெருக்கத்துடனும் போட்டியாளர்கள் நடனமாடுகிறார்கள். இம்மாதிரியான நிகழ்ச்சிகளில், குழந்தைகள் பங்குபெறும்போது அவர்களையும் இதுபோல் செய்ய வைத்து உற்சாகப்படுத்துகிறார்கள். என்னவென்று தெரியாமலேயே அவர்களும் கைத்தட்டல்களுக்கு மயங்கி ஆடுகிறார்கள். இதுபோல், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும், அதில் கலந்துகொள்வோரும் அணியும் ஆடைகள், ஆபாசத்தையே தூண்டுகின்றன. கலாசாரம் எங்கு அழிகிறதோ அங்கு குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விடுகிறது. நமக்கு நெருக்கமான, நம் வாழ்க்கையோடு பயணிக்கின்ற ஊடகத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறுவதுதான் வேதனையாக இருக்கிறது.

சில செய்தித் தொலைக்காட்சிகளிலும் வக்கிரமான, வன்முறையான செய்திகள் அப்படியே ஒளிபரப்பாகிறது. பரபரப்புக்காக பொதுமக்களின் உணர்வுகளை பலிகடாவாக்கக்கூடாது என்பதே பெரும்பாலானோரின் எண்ணம். பிரச்சினைக்குரிய நிகழ்ச்சிகளோ, தொடர்களோ ஒளிபரப்பப்பட்டால், இவற்றுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை, இது தனியார் நிகழ்ச்சி என்று சேனல்கள் ஒதுங்கி விடுகின்றன. எனவே இவை அனைத்தையும் ஒழுங்குமுறை செய்வது அவசியமானது. வெள்ளித்திரைக்கு இருப்பதுபோல் சின்னத்திரைக்கும் சென்சார் போர்டு இருக்க வேண்டும். தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கும், தொடர்களுக்கும், ஒளிபரப்பப்படும் செய்திகளுக்கும் என சில விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இவற்றில் பல தொடர்கள், வருடக்கணக்கில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்கள் என்பதால் முழுவதுமாக பார்த்து சான்றிதழ் வழங்க முடியாது. ஆனால் வன்முறைகளைத் தூண்டும் வகையில் காட்சிகள், கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை உடுத்துதல், வசனங்கள் பேசுதல் போன்றவை தங்கள் நிகழ்ச்சிகளில், தொடர்களில் இருக்காது என்று அவைகள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு, தயாரிப்பாளர்கள் உறுதிமொழி கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு ஆணையம் செயல்பட வேண்டியது இன்றியமையாதது.

தற்போது, சின்னத்திரை தமிழக குடும்பங்களில், தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதில் வரும் நிகழ்ச்சிகளும், தொடர்களும் இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே பொழுதுபோக்கு என்ற பெயரில், அவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் இருக்கக்கூடாது. அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டியது அனைவரின் கடமை ஆகும்.

- கலைச்செல்வி சரவணன், எழுத்தாளர், சென்னை