பள்ளி பயணங்களில் பாதுகாப்புக்கு வழிமுறைகள்...!


பள்ளி பயணங்களில் பாதுகாப்புக்கு வழிமுறைகள்...!
x
தினத்தந்தி 8 March 2019 5:59 AM GMT (Updated: 8 March 2019 5:59 AM GMT)

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தனியார் பள்ளி வாகனங்களில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், மாணவ, மாணவிகள் விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

 மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பள்ளி வாகன விபத்துக்கள் நடந்தவுடன் நீதிமன்றம் உத்தரவைதொடர்ந்து அரசு தற்காலிகமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் தற்போது வரை தனியார் பள்ளி வாகன விபத்துகளில் மாணவர்கள் சிக்கி உயிரிழப்பதும், காயமடைவதும் நடந்து கொண்டே உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் அதிகமான பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளனர் என்பதை ஊடக செய்திகள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

பள்ளி குழந்தைகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பயணத்திற்கு செல்லும் போது மாநில அரசு நிர்வாகமும், பெற்றோர்களும் இதுவரை அச்சப்படாத நிலை தான் நீடிக்கிறது. மேலும் கடந்த காலத்தில் வேலூரில் சுருதி என்ற பள்ளி மாணவி பள்ளி பேருந்தின் நடுவில் ஓட்டையில் இருந்து விழுந்து இறந்த போதுதான் சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு தனியார் பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்க உத்தரவிட்டது. அதன் பின்பும் தற்போது வரை தனியார் பள்ளி வாகனங்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றன. இதற்கு காரணம் அரசு வழி வகுத்துள்ள மாணவர்கள் நலனற்ற கல்வி கொள்கைகளே ஆகும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளை தொடங்க விரும்புபவர்கள் விண்ணப்பம் அளித்தவுடன் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துவிடுகின்றனர். இதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போல் பெருகிவிட்டன. இந்த பள்ளிகள் சுற்றுவட்டார நகர மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த மாணவர்களை அழைத்து வருவதற்கு வாகனங்களை விதிமுறைகளை மீறி இயக்கி வருகின்றன. அதாவது இந்த தனியார் பள்ளிகள் செயல்படும் இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள மாணவர்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற அரசு விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை தாண்டி பள்ளி வாகனங்களை இயக்கும் வேலையை செய்து வருவது அரசு விதி மீறலாக உள்ளது. மேலும் பள்ளிகளை வணிக நோக்கில் நடத்துவதே கல்வி நெறிகளுக்கு எதிரானது. மேலும் தனியார் பள்ளி வாகனங்களுக்கு வாகன கட்டணம் என்ற பெயரில் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ள பெற்றோர்கள் பள்ளி கட்டண சுமையுடன் வாகன போக்குவரத்திற்கும் கூடுதல் பணம் கட்ட வேண்டியுள்ளது. மேலும் தனியார், கல்லூரி வாகனங்கள் மூலம் சாலைகளில் சுற்றுச்சூழல் மாசு, போக்குவரத்து நெருக்கடி, எரிபொருள் செலவு, மாணவர்கள் உடல், மனநலம் பாதிப்பு போன்றவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

உலகில் நாள் ஒன்றுக்கு 500 குழந்தைகள் பயணத்தில் ஏற்படும் விபத்தில் இறக்கின்றனர் என்று யுனிசெப் அறிக்கை கூறுகிறது. எனவே இது போன்ற பள்ளி வாகன விபத்துக்களை தடுப்பதற்கும் மாணவர்களுக்கு உடல் நலம் சமூக உறவு மேம்படுத்துவதற்கும், பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிளில் செல்லும் வழிமுறைகளையும் அரசு உருவாக்க வேண்டும். தற்போது தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகளினால் தனியார் பள்ளி வாகனங்களின் பதிவு உறுதிப்பாடு, அமைப்பு ஆகியவை மட்டுமே பரிசோதிக்கப்படுகின்றன. ஆனால் பள்ளி வாகனங்கள் இயக்கப்படும் தூரம், நேரம், நிறுத்தங்களின் எண்ணிக்கை பற்றி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக தனியார் பள்ளி வாகனங்கள் விபத்துக்களை ஏற்படுத்தியுடன் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். தனியார் பள்ளிகள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மட்டுமே வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும். பள்ளி வாகன போக்குவரத்து ஆகிய கல்வி சாராத செயல்பாடுகளில் தனியார் பள்ளி நிர்வாகம் ஈடுபடுவதை தமிழக அரசு படிப்படியாக தடை செய்ய வேண்டும். அரசு போக்குவரத்து மூலம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். கல்வி கொள்கையை முழுமையாக கடைபிடிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டு மாணவர்களின் கல்வித்தரம் உயிர்வாழும் உரிமையை பாதுகாக்க அரசு உரிய விதிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறான தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகள், கட்டுபாடுகளை அரசு பள்ளி கல்வித்துறை மூலம் செயல்படுத்தினால் நகர, கிராம பகுதி அரசு மற்றும் தனியார் அதிகாரிகள், ஊழியர்கள், கிராம ஏழை எளிய பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். எனவே தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக தனியார் பள்ளி வாகனங்களுக்கு என்று தனி சட்டத்தை உருவாக்க வேண்டும். இவற்றை நிறைவேற்றும் பட்சத்தில் பள்ளி பயணங்கள் பாதுகாப்பாக இருக்கும். அரசு மாணவர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு, தமிழ்நாடு.

Next Story