ஜனவரி மாதத்தில் 2.23 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி


ஜனவரி மாதத்தில் 2.23 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி
x
தினத்தந்தி 8 March 2019 9:47 AM GMT (Updated: 8 March 2019 9:47 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நம் நாட்டில், கடந்த ஜனவரி மாதத்தில் 2.23 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 6.6 சதவீதம் குறைவாகும்.

இந்தியா 2-வது இடம்

சர்வதேச அளவில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. உயர்தர தேயிலையான ஆர்தோடக்ஸ் ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சி.டி.சி. தேயிலை பெரும்பாலும் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி-நவம்பர்) தேயிலை ஏற்றுமதி சற்றே குறைந்து 22.58 கோடி கிலோவாக இருந்தது. அதில் காமன்வெல்த் நாடுகளுக்கான ஏற்றுமதி (5.84 கோடி கிலோவில் இருந்து) 5.49 கோடி கிலோவாக குறைந்தது.

இந்நிலையில், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் தேயிலை ஏற்றுமதி 6.6 சதவீதம் குறைந்து (2.39 கோடி கிலோவில் இருந்து) 2.23 கோடி கிலோவாக குறைந்து இருக்கிறது. இதில் காமன்வெல்த் நாடுகளுக்கு மட்டும் 50 லட்சம் கிலோ தேயிலை ஏற்றுமதியாகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 61 லட்சம் கிலோவாக இருந்தது.

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளுக்குக்கான ஏற்றுமதி (32 லட்சம் கிலோவில் இருந்து) 15 லட்சம் கிலோவாக சரிவடைந்து இருக்கிறது. ஈரானிற்கு 59 லட்சம் கிலோ தேயிலை ஏற்றுமதி ஆகி உள்ளது. பாகிஸ்தானிற்கான ஏற்றுமதி 11 லட்சம் கிலோவில் இருந்து 13 லட்சம் கிலோவாக அதிகரித்து இருக்கிறது.

இவ்வாறு தேயிலை வாரியத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரம் ஒன்றின்படி ஜனவரி மாதத்தில், டாலர் மதிப்பில் தேயிலை ஏற்றுமதி 3 சதவீதம் அதிகரித்து (7.05 கோடி டாலரில் இருந்து) 7.24 கோடி டாலராக உயர்ந்து இருக்கிறது.

2018-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.5,100 கோடிக்கு தேயிலை ஏற்றுமதியாகி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில் அது ரூ.4,988 கோடியாக இருந்தது.

காபி ஏற்றுமதி

நம் நாட்டில் காபி நுகர்வு குறைவாக உள்ளதால் உற்பத்தியாகும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது.

உள்நாட்டில் நுகர்வு மிகவும் அதிகமாக உள்ளதால் அதிக அளவு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. தேயிலை உற்பத்தியில் முன்னணி நாடுகளுள் ஒன்றான கென்யா அதன் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது.


Next Story