நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 33,000 கோடி டாலரை எட்டும் - மத்திய அமைச்சர் தகவல்


நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 33,000 கோடி டாலரை எட்டும் - மத்திய அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 9 March 2019 8:24 AM GMT (Updated: 9 March 2019 8:24 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நடப்பு 2018-19-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 33,000 கோடி டாலரை எட்டும் என மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

வர்த்தக பற்றாக்குறை

நம் நாட்டில் சரக்குகள் ஏற்றுமதியை பொறுத்தவரை வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது, ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. அதே சமயம், சேவைகள் பிரிவில் பொதுவாக இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக உள்ளதால் அந்தப் பிரிவில் வர்த்தக உபரி காணப்படுகிறது.

இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கம், கடந்த 2017-18-ஆம் நிதி ஆண்டில் சரக்குகள் ஏற்றுமதி இலக்கை 32,500 கோடி டாலராக நிர்ணயித்து இருந்தது. ஆனால் ஆண்டில் 30,284 கோடி டாலர் அளவிற்கே ஏற்றுமதி இருக்கிறது. எனினும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஏற்றுமதி 30,000 கோடி டாலரை தாண்டி இருக்கிறது. இதற்கு முன் 2014-15-ஆம் ஆண்டில் ஏற்றுமதி 30,000 கோடி டாலருக்கும் அதிகமான அளவில் இருந்தது.

ஏற்றுமதியாளர்கள் சங்கம்

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) சரக்குகள் ஏற்றுமதி 35,000 கோடி டாலராக அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் சங்கம் மதிப்பீடு செய்துள்ளது. சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது (30,284 கோடி டாலர்) இது ஏறக்குறைய 20 சதவீத வளர்ச்சியாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக, சென்ற ஆண்டில்தான் ஏற்றுமதி 30,000 கோடி டாலரை தாண்டியது.

அடுத்த சில ஆண்டுகளில் சரக்குகள் ஏற்றுமதியை இரண்டு மடங்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்து இருந்தார். இதற்காக விவசாயம், தோட்ட விளைபொருள்கள், மலைப்பயிர்கள் மற்றும் மீன் வளம் ஆகிய 4 துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என அவர் கூறி இருந்தார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி) சரக்குகள் ஏற்றுமதியின் பங்கை 20 சதவீதமாக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், இது தொடர்பாக விரைவில் திட்ட ஆவணம் ஒன்று வெளியிடப்படும் என்றும் சுரேஷ் பிரபு கூறி உள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு தற்போது 18 முதல் 19 சதவீதம் வரை இருக்கிறது.

மேலும், நடப்பு நிதி ஆண்டில் சரக்குகள் ஏற்றுமதி 35,000 கோடி டாலரை எட்டும் என அவர் முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது ஏற்றுமதி 33,000 கோடி டாலர் அளவிற்கே இருக்கும் என கூறி உள்ளார். எனினும் இது சென்ற நிதி ஆண்டை விட சுமார் 3 ஆயிரம் கோடி கோடி டாலர் அதிகமாகும்.

ஜனவரி நிலவரம்

ஜனவரி மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 2,636 கோடி டாலரை எட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 3.74 சதவீத வளர்ச்சியாகும். இதே மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 0.01 சதவீதம் மட்டும் அதிகரித்து 4,109 கோடி டாலராக உயர்ந்துள்ளது. எனவே 1,473 கோடி டாலர் அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1,567 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டில், ஜனவரி வரையிலான முதல் 10 மாதங்களில் சரக்குகள் இறக்குமதி 11.27 சதவீதம் அதிகரித்து 42,773 கோடி டாலராக உள்ளது. ஏற்றுமதி 9.52 சதவீதம் உயர்ந்து 27,180 கோடி டாலராக இருக்கிறது. எனவே முதல் 10 மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 15,593 கோடி டாலராக உள்ளது. 

Next Story