சிறப்புக் கட்டுரைகள்

வெற்றியின் ரகசியம்...! + "||" + The Secret of Success ...!

வெற்றியின் ரகசியம்...!

வெற்றியின் ரகசியம்...!
எப்போதும் போல, எல்லோரையும் போல யாரும் இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது எனும்போது, மாற்றம் பெறாத எதுவும், வித்தியாசமாக இல்லாத எவருடைய வாழ்வும் அத்தனை வரவேற்பைப் பெறாது. வந்து போவதில் என்ன இருக்கப் போகிறது என்று வித்தியாசமாக இருப்பவர்களே செய்தியிலும், சரித்திரத்திலும் இடம்பெறுகின்றனர்.

எப்போதோ படித்தது. ஆப்பிரிக்காவில் அத்தனை அதிகமாய் நாகரிகம் பரவாத நேரம். பிரபலமான செருப்பு நிறுவனம் தன் காலணிகளை அங்கே சந்தைப்படுத்துவதற்காக ஒரு விற்பனைப் பிரதிநிதியை அனுப்புகிறது. போனவன் திரும்பிவந்து தந்த பதில், “அங்கே யாருமே செருப்பு அணியாதபோது, எப்படி செருப்பு விற்பது?” சில மாதங்களுக்குப் பிறகு வேறு ஒரு இளைஞன் சென்றிருக்கிறான். சென்றடைந்த சில நாள்களுக்குள் ஆயிரக்கணக்கான செருப்புகளைத் தருவித்துக் கொண்டதோடு, செருப்பு அணிவது எத்தனைப் பாதுகாப்பானது என்பதை அங்குள்ள மக்களுக்குச் சொல்லிக் கொடுத்ததோடு, சிலருக்கு இலவசமாகவும், சிலருக்குக் குறைந்த விலையிலும் விற்றுச் சந்தைப்படுத்த தொடங்கியதைக் கூறுகிறான். இதுதான் வித்தியாசமாக சிந்திப்பதென்பது.

புதிதாகச் சிந்திப்பது இப்போதல்ல, அப்போதே இருந்திருக்கிறது. தாமஸ் ஆல்வா எடிசன் வெற்றி தோல்விகளைப் பற்றிச் சிந்திக்காமலும், கவலைப்படாமலும் உழைத்துக் கொண்டிருந்தவர் தாம் புதிதாகக் கண்டுபிடித்த மின் குமிழை (பல்ப்) பத்திரிகைச் செய்தியாளர்களிடம் காட்டி எரிவதை அறிமுகப்படுத்த விழைகிறார். தன் உதவியாளரை அழைத்து அதை பத்திரமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்த விடுதிக்குக் கொண்டுவரக் கொடுத்திருக்கிறார். உதவியாளர் பாவம், வரும் வழியில் அதைக் கீழே தவறவிட்டு உடைத்து விடுகிறார். வழக்கம் போலத் தோல்வி என்றாலும், துவண்டு போகாத அவர் மறுவாரம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். அதே நபரிடம் அதைக் கொண்டுவரப் பணித்தபோது அவருடைய நண்பர்கள் “இவன் பொறுப்பற்றவனாயிற்றே, மறுபடியும் உடைத்து விடுவானே” என்றபோது, “ஒருமுறை தவறு செய்தவன்தான் மறுமுறை கவனமாக இருப்பான்” என்று பதிலளித்தார் எடிசன்.

“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்”

என்பது நிர்வாகக் கலை. எவன் சரியாகச் செய்வான் என்பதை விடவும், எவன் பொறுப்பாகச் செய்வான் எனும்போது தவறு செய்தவன்தான் சரியான தேர்வாக இருக்க முடியும் என்று வித்தியாசமாக எடிசன் நினைத்ததுகூட திறமையான நிர்வாகக் கலைதான்.

பல நிறுவனங்களில் ‘வேலை தெரியாது, செய்ய முடியாது’ என்று சொல்லியே பலர் வேலைகளிலிருந்து நழுவிக் கொள்வார்கள். அதையே காரணமாக வைத்து பெரிய பொறுப்புகளிலிருந்தும் தம்மை பத்திரமாக விடுவித்துக் கொள்வார்கள். இவர்களுக்கு “வேலை கள்வர்கள்” என்றுகூட ஒரு பெயருண்டு. அவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வேலை வாங்கிக் கொள்வது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. சோம்பேறிகளிடம் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பது பழைய சித்தாந்தம். ஆனால் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ் “சோம்பேறிகளிடம்தான் வேலைகளை ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் சீக்கிரமாகச் செய்து முடிக்கும் எளிமையான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்” என்பார். இதுவோர் வித்தியாசமான கோட்பாடு. வெற்றிகரமான விளைவுகளுக்கு உகந்ததாக அவர் கண்டுபிடித்த இக்கோட்பாடு பெரிதும் வரவேற்கத்தக்கது.

மற்றுமோர் மாற்றுச் சிந்தனை. நியூயார்க் டைம்ஸ் நிருபர் இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு காலம் எப்படி மாறியிருக்கிறது என்பதை உணர்த்துவார். முன்பெல்லாம் பிள்ளைகளுக்கு உணவூட்டும் அமெரிக்கத் தாய், தன் பிள்ளைகள் சிதறடிக்கும் உணவைக் காட்டி, “இப்படியெல்லாம் உணவை வீணடிக்கிறாயே, இந்த உணவுக்குக்கூட வழியில்லாமல் இந்தியாவிலும், சீனாவிலும் எண்ணற்ற குழந்தைகள் தவிக்கிறார்கள்” என்று கூறியதுபோக, இப்போது, “இப்படி உணவை வீணடிக்கிறாயே. இன்னும் சில நாள்களில் இதுகூட நமக்குக் கிடைக்காமல் செய்ய இந்திய சீன இளைஞர்கள் நமது வாய்ப்புகளை இங்கு வந்து பறிக்கப் போகிறார்கள்” என்று எச்சரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அச்சுறுத்தல் என்பது அறிவுறுத்தலைவிடவும் வலிமையானது.

காலங்கள் மாறும்போது எதிலும் வெற்றிபெற மட்டுமல்ல, எதையும் இழந்து விடாமலிருக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துதான் தீரவேண்டியிருக்கிறது. இரண்டு இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் கல்வித் தகுதியிலும் நிறுவனத் தேர்விலும், நேர்காணலிலும் சமமாகவே மதிப்பெண்கள் பெற்றிருக்க யாரைத் தேர்வு செய்வது, யாரைத் தவிர்ப்பது என்று நிர்வாகம் தவித்தபோது இருவரையும் அழைத்து ஒரு கேள்வியைக் கேட்கிறார் நிறுவனத் தலைவர். “இந்த வேலை கிடைக்காவிட்டால் நீ என்ன நினைப்பாய் எப்படி உணர்வாய்” என்றபோது, “என்ன நினைப்பது நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைத்துக் கொள்வேன்” என்கிறான் முதல் இளைஞன். அடுத்த இளைஞனுக்கும் அதே கேள்வி. அதற்கு அவன் தந்த பதில், “உங்கள் நிறுவனம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். வேறென்ன நினைப்பது? “இரண்டாவது இளைஞனே தேர்ந்தெடுக்கப்படுகிறான். இது வித்தியாசமான பதில் மட்டுமல்ல, நம்பிக்கை மிகுந்த விவேகமான பதிலும்கூட. இதுதான் சிலரின் வெற்றி ரகசியம். வித்தியாசமாக சிந்தியுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

- ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர்