சாதனை ‘தோல்வியாளர்’


சாதனை ‘தோல்வியாளர்’
x
தினத்தந்தி 16 March 2019 1:02 PM GMT (Updated: 16 March 2019 1:02 PM GMT)

வெற்றியில் சாதனை படைக்கலாம், தோல்வியில் சாதனை படைக்க முடியுமா? ‘முடியும்’ என்கிறார், ஒடிசா மாநிலம் பெர்காம்பூரைச் சேர்ந்த ஷியாம்பாபு சுபுதி.

தேர்தல்கள்தோறும் நின்று சந்தோஷத்தோடு தோல்வியைத் தழுவுபவர் இவர். வெற்றி பெறத் தவறுவது இவருக்கு ஒரு பொருட்டே அல்ல. தேர்தலில் நிற்க வேண்டும். அவ்வளவுதான்.

84 வயதாகும் ஷியாம்பாபு, 1957-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை 28 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். அவற்றில், 10 சட்டப்பேரவைத் தேர்தல்களும் அடக்கம்.

இவரை, ‘உலகின் மிகப் பெரிய தேர்தல் தோல்வியாளர்’ என்று வர்ணித்துள்ளது, பி.பி.சி. தொலைக்காட்சி.

முதன்முதலில், 1957-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தேர்தல் உலகில் பிரவேசித்தார், ஷியாம்பாபு.

அப்போது, இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்த இளைஞரான ஷியாம்பாபு, மாநில மந்திரி பிருந்தாபன் நாயக்கை எதிர்த்துப் போட்டியிட்டார்.

‘‘நான் அவரை எதிர்த்து ஹிஞ்சிலி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றேன்’’ என்று சுவாரசியமாக நினைவுகூர்கிறார், ஷியாம்பாபு.

இவர் முதன்முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது, 1962-ல். வெற்றியை எதிர்நோக்கி நிற்கும் வேட்பாளர்கள் மத்தியில், நிச்சயத் தோல்வியை உணர்ந்தே நிற்பார் ஷியாம்பாபு.

இவர் இவ்வளவு ஆர்வமாக தேர்தல்களில் போட்டியிடுவது ஏன்?

‘‘தேர்தலில் நிற்பதுதான் என் வாழ்க்கையின் ஒரே விருப்பம். நான் வெற்றி, தோல்வியைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் என்னையும் ஒருநாள் மக்கள் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்று ஷியாம்பாபு நம்பிக்கை மனிதராகப் பேசுகிறார்.

தேர்தலில் நிற்பதில் மட்டுமல்ல, பெருந்தலைகளை எதிர்த்துப் போட்டியிடுவதிலும் ஷியாம்பாபுவுக்குத் தனி சந்தோஷம்.

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், முன்னாள் முதல்வர்கள் பிஜு பட்நாயக், ஜே.பி. பட்நாயக், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராம் சந்திரநாத், சந்திரசேகர் சாகு ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டிருக்கிறார் இந்த தேர்தல் நாயகர்.

அடிப்படையில் ஒரு ஹோமியோபதி மருத்துவரான ஷியாம்பாபு, பெரும்பாலான தேர்தல்களில் ‘டெபாசிட்’ இழந்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் ஒரு விஷயமா என்கிறார்.

நாட்டை தேர்தல் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், ஷியாம்பாபு வழக்கம்போல் சுறுசுறுப்பாகிவிட்டார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒடிசா கஞ்ஜம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா மற்றும் பெர்காம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் சுயேச்சையாகப் போட்டியிடப் போகிறார். ஏற்கனவே இந்த இரு தொகுதிகளிலும் 9 முறை போட்டியிட்டுத் தோற்ற பலத்த அனுபவம் ஷியாம்பாபுவுக்கு உண்டு.

தானே வேட்பாளர், தானே பிரசாரகர் என்ற முறையில் சுறுசுறுப்பாகத் தேர்தல் பணியாற்றி வருகிறார் இவர்.

மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், அதிகாலையில் பலரும் நடைப்பயிற்சி செய்யும் இடங்களில் ஷியாம்பாபு தானே பிரசார துண்டுச்சீட்டுகளை விநியோகிக்கிறார்.

‘‘நான் போட்டியிடும் இரு தொகுதிகளிலும் ஏற்கனவே பல பகுதிகளில் பிரசாரத்தை முடித்துவிட்டேன்’’ என்கிறார், உற்சாகமாக.

ஷியாம்பாபுவுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.

‘‘நான் தேர்தலில் நிற்பதற்கு எனது குடும்பத்தினர் தடை போட்டதே இல்லை. சொல்லப் போனால், இந்த விஷயத்தில் என்னை என் மனைவிதான் உற்சாகப்படுத்தி வந்தார். தரையில் நான் நிற்க முடிகிறவரை, தேர்தலில் நிற்பேன்’’ என்கிறார் திடமாக.

தேர்தலில் வெற்றி பெற சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படுவது உண்டு. ஆனால் ஷியாம்பாபு சுபுதிக்கு பொதுமக்கள்தான் தாங்களாக முன்வந்து தேர்தல் செலவுக்குப் பணம் கொடுக்கிறார்களாம்.

Next Story