புன்னகையால் புவியை நிரப்புங்கள்...!


புன்னகையால் புவியை நிரப்புங்கள்...!
x
தினத்தந்தி 20 March 2019 6:03 AM GMT (Updated: 20 March 2019 6:03 AM GMT)

இன்று (மார்ச் 20-ந் தேதி), சர்வதேச மகிழ்ச்சி தினம்.


யாருக்குத்தான் மகிழ்ச்சியாயிருக்கப் பிடிக்காது? மணக்கும் மலர்களைப் போல் சிரிக்கும் முகங்கள் எப்போதும் அழகானவை. பிறந்த குழந்தையின் மாசுமருவற்ற சிரிப்பு, பொக்கை வாய் திறந்து பாட்டி தாத்தா சிரிக்கும் சிரிப்பு, வெளியூர் போய்விட்டு வீட்டுக்குள் நுழையும்போது கண்களை இடுக்கி மனைவி சிரிக்கும் சிரிப்பு.. இப்படி எத்தனை மத்தாப்புச் சிரிப்புகள் தினமும் நம்மைச் சுற்றி! பின் நாம் ஏன் துக்கத்தைக் கக்கத்தில் தூக்கிக்கொண்டு திரியவேண்டும்? சிரிக்கும் நாளே நம் வாழ்வில் சிறந்தநாள்.

யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை? யாருக்குத்தான் கவலை இல்லை? கவலைகளின் கலவையா நாம்? பறக்கச் சிறகுகள் இருந்தாலும் பறவைகளையும் நிலத்தில் நிறுத்தி வைத்துத்தான் வறுத்தெடுக்கிறது வாழ்க்கை. அதற்கெல்லாம் வருந்தித்தான் ஆகவேண்டுமா? இல்லையே! தினமும் ஆயிரமாயிரம் உயிர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது நமக்கு வாழ ஒவ்வொரு விடியலிலும் ஒரு வாய்ப்பளித்திருக்கிறதே இந்த வாழ்க்கை! ஒருபறவை கொத்துகிற தினையைவிடவா இந்த உலகம் பெரியது? பிறர்மீது வெறுப்பை அள்ளி வீசித்தான் நம் இருப்பை நாம் காட்டவேண்டுமா? சிறகுதிர்த்த நாளிலும் பறவைகள் பறத்தலை மறப்பதில்லையே. அருகில் இருப்பவர் மீது அன்பு செலுத்த முடியாத உறவு என்ன உறவு?

நிலநடுக்கத்தைவிட எல்லாவற்றுக்கும் அஞ்சுகிறவனின் மனநடுக்கம் கொடுமையானது. மரணத்திற்கு முன் மரணிப்பது நாம் நம்பிக்கை இழந்த நடுக்க நிமிடங்களில் மட்டும்தான். கோபமாய் நாம் உதிர்க்கும் சொற்களில் சிதறும் நம் உறவுகள். துன்பம் வரும் வேளையில் துடிப்பதனாலோ, அழுது புலம்புவதனாலோ எந்தப் பயனும் இல்லை. ஒரு புன்னகையைச் சிந்தி உங்கள் போக்கில் நடந்து செல்லுங்கள், துன்பம் சொல்லாமல் கொள்ளாமல் உங்களை விட்டுப்போய்விடும் என்று வள்ளுவர், ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று துன்பத்திற்கே துன்பம் தர வழிசொல்கிறார். இந்த உலகில் நடப்பதை எதைக்கொண்டு நீங்கள் தடுக்கமுடியும்? நடப்பது நடந்தே தீரும் என்று உணர்ந்தால் துக்கம் ஏது? துன்பம் ஏது? உள்ளத்தில் உள்ளதுதான் உலகம் என்று புரிந்துகொண்டவனுக்கு வருத்தம் வருமா? அப்போது பிறப்பும் இறப்பும் நமக்கு ஒன்றாகும். “கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன், அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்” என்று அதனால்தான் கவியரசு கண்ணதாசன் சொன்னார். நாம் அனுமதிக்காமல் நம்மை யாரும் துன்பப்படுத்திவிட முடியாது. எதற்கும் எப்போதும் தயாராக இருப்பவர்கள் வெற்றி கண்டு துள்ளுவதில்லை, தோல்விகண்டு துவளுவதுமில்லை. எல்லாம் என்னுடையது என்று நினைப்பவர்கள் புன்னகையைத் தொலைக்கிறார்கள், ஏதும் என்னுடையதில்லை என நினைப்பவர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே எல்லாவற்றையும் இயல்பாகக் கடக்கிறார்கள்.

எல்லா தானங்களையும் செய்து முடித்தவர்களுக்கு நிதானம் தானாக வருகிறது, கொஞ்ச நேரம்தான் வாழ்க்கை என்று புரிந்தவர்கள் நேரத்தைக்கூடக் கொஞ்சி வாழ்கிறார்கள். முகத்தில் இறுக்கத்தைப் பொருத்தி வாழ்கிறவர்கள் சிரிப்பைத் தொலைத்துவிட்டு சினத்தோடு அலைகிறார்கள். கிடைத்ததை அப்படியே ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு துன்பம் ஏது? துக்கம் ஏது? அந்தந்த வினாடியை ரசித்து அனுபவித்து வாழ்வதிலிருக்கிறது வாழ்வும் சிரிப்பும். “வீடு எரிந்துவிட்டதே நான் என்ன செய்யப்போகிறேன்?” என்று ஜென்குருவிடம் சீடன் பதற்றத்துடன் கேட்க, உன்னை நிலவு பார்க்கவிடாமல் தடுத்த கூரை எரிந்துவிட்டது இனி தாராளமாய் நீ நிலவைப் பார்க்கலாம், அழுவதற்கா நீ அன்னை வயிற்றில் பிறந்தாய்? என்று ஜென் குரு சிரித்தபடி கேட்டார். குழந்தைகளும், ஞானிகளும் எதற்கும் கலங்காமல், இதுவும் கடந்துபோகும், எதுவும் கடந்துபோகும் என்று இயல்பாயிருக்கிறார்கள். சிரிப்பைச் சிந்திக் கடப்பவர்களை அது ஏதும் செய்யாமல் கடக்கிறது. இறப்புக்கும், இழப்புக்கும் கூடக் கலங்காதவர்கள் இந்தப் புவியில் இருக்கவே செய்கிறார்கள். எல்லோரும் அவரவர் கெடிகாரம் காட்டும் நேரமே சரியென்று சாதிக்கும்போது எல்லாவற்றுக்கும் தீர்ப்பு சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமா?

நேற்றைய நாட்களைப் பற்றிய கவலையின்றி, நாளையைப் பற்றிய பயமுமின்றி இந்த நிமிடத்தில் சிரித்தபடி வாழ்ந்தால் எப்போதும் மகிழ்வலையே! புன்னகையால் புவியை நிரப்புவோம்.

- சவுந்தர மகாதேவன், தமிழ் பேராசிரியர், திருநெல்வேலி.


Next Story