இன்று மார்ச் 21-ந் தேதி உலக காடுகள் தினம்


இன்று மார்ச் 21-ந் தேதி உலக காடுகள் தினம்
x
தினத்தந்தி 21 March 2019 5:56 AM GMT (Updated: 21 March 2019 5:56 AM GMT)

பூமியை பல வகையில் பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் தினமாக இந்நாள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும். பல அரிய வகை மரங்களையும், ஏராளமான விலங்குகளையும் கொண்ட இயற்கை வரம்தான் காடு. பூமியின் மொத்த பரப்பளவில் 30 சதவீதம் காடுகளாலேயே அமைந்ததாகும்.

காடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. உலகத்திற்கு தேவையான மழையையும், சுத்தமான காற்றையும் வழங்குவதில் காடுகளின் பங்கு மிக மிக முக்கியமானது. உலகெங்கும் சூழ்ந்துள்ள காடுகள் அதனதன் தட்பவெட்ப நிலைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஊசியிலை காடுகள், சதுப்பு நில காடுகள், இலையுதிர் காடுகள், வெப்ப மண்டல காடுகள் என பல வகையில் அவைகள் பிரிக்கப்பட்டாலும் எல்லா காடுகளும் ஒருசேர்ந்த ஓர் முக்கிய பணியையே செவ்வனே செய்கிறது. அது புவிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை சுவாசித்து பூமிக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுவதுதான்.

ஒரு மரமானது தன் சராசரி ஐம்பது வருட வாழ்நாளில் ஆறாயிரம் பவுண்ட் ஆக்சிஜனை வெளியிடுகிறதாம். இது ஒரு வருடம் முழுக்க நான்கு பேர் சுவாசிக்கக்கூடிய ஆக்சிஜனின் மொத்த அளவாகும். மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களும் இயற்கை வழியில் சுவாசிக்க மரங்களே காரணம். மேலும் பல்வேறு சீதோஷ்ண நிலையில் வாழக்கூடிய வனவிலங்குகளுக்கு இயற்கை சரணாலயமாக விளங்குவது காடுகள்தான். இதில் வெப்பமண்டல காடுகள் மட்டும் மனிதன் மட்டுமின்றி கிட்டத்தட்ட பூமியின் 50 சதவீதம் உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளது. அதுமட்டுமின்றி வெப்பத்தையும் குளிரையும் கட்டுப்படுத்தி சீரான காலநிலையை உண்டாக்குதல். பருவமழையின் அளவை அதிகரித்தல், மண் வளம் காத்தல், மண் அரிப்பு, நிலச்சரிவு, வெள்ள ஆபத்துகளை தடுத்தல் என காடுகளின் பயன்கள் மிகவும் ஏராளம்.. இது போன்ற அற்புத பயன்கள் கொண்ட காடுகள் மனிதனின் வாழ்வியல் நோக்கிற்காக வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது என்பது உலகை அச்சுறுத்தக்கூடிய பெரும் உண்மையாகும். ஒவ்வொரு ஆண்டும் பூமி 18.7 மில்லியன் ஏக்கர் காடுகளை இழந்து வருவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஏற்கனவே உலகின் வெப்பமண்டல காடுகள் பாதியாக குறைந்துவிட்டதாக சர்வதேச கணக்கெடுப்புகள் அதிர்ச்சி தகவல் தருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் நூறாண்டுகளில் மழைத் தரக்கூடிய காடுகள் முற்றிலும் அழிந்து விடும் நிலை ஏற்படலாம் என்றும் உலக அளவில் காடழிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று கூறுகிறது. இதன் காரணமாக அடுத்த கால் நூற்றாண்டில் பூமியில் இருந்து சுமார் 28 வகை உயிரினங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிந்து போகலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நகரமயமாக்குதல், நிலம் ஆக்கிரமித்தல், வியாபார நோக்கிற்காக மரங்கள் வெட்டப்படுதல் என்று நீண்டு கொண்டே போகும் மனிதனின் தேவைக்காக காடுகள் அதி வேகத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மழையின்மை, புவி வெப்பமயமாகுதல், அரிய வகை விலங்குகள் அழிதல் மற்றும் உறைவிடம் தேடி காடு தாண்டி மனிதன் வாழும் இடங்கள் நோக்கி விலங்குகள் வருதல் என்று பல்வேறு மோசமான பின் விளைவுகளும் ஏற்பட்டுக்கொண்டுத் தான் இருக்கிறது.

மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, காற்று மாசு, புவி வெப்பமயமாகுதல் என்று பல்வேறு கேள்விகளால் திணறி வரும் மனிதனுக்கு இனி இயற்கைதான் விடையாகும். அந்த இயற்கையை பாதுகாப்பதை தவிர மனிதனுக்கு வேறு வழியில்லை. ஒரு மரம் ஏதோ ஒரு காரணத்திற்காக வெட்டப்படும் அதே நேரம் அதை ஈடு செய்ய பத்து மரம் நட வேண்டும் என்ற பொதுவிதியை நாம் அனைவரும் கட்டாயமாக கடைப்பிடித்தால் மட்டுமே இனி வருங்காலத்தில் காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும். ஆதி மனிதன் காடுகளையே வீடாக கொண்டு வாழ்ந்தான். ஆனால் இன்றோ நவீன சாயல் பூசிக்கொண்ட தற்கால மனிதக்குலம் தன் முப்பாட்டன் வீட்டைத் தானே அழிக்கக்கூடாது என்பதை உணர்ந்தால் மட்டுமே காடுகள் அழிவதை தடுத்து, பின்வரும் தலைமுறைக்காக இயற்கையின் வளங்களை சேமிக்க முடியும். ஆகவே, உலக காடுகள் தினமான இன்று நாட்டின் வளம் காக்க காட்டின் வளம் காப்போம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தி.ஞா.நித்யா, இணைப் பேராசிரியர், தனியார் கல்வி நிறுவனம், சென்னை.


Next Story