தேர்தல் அறிக்கையும், வாக்காளர் கடமையும்...!


தேர்தல் அறிக்கையும், வாக்காளர் கடமையும்...!
x
தினத்தந்தி 24 March 2019 6:52 AM GMT (Updated: 24 March 2019 6:52 AM GMT)

தேர்தல் காய்ச்சல் இந்தியாவில் ஆரம்பித்து விட்டது.

தேர்தலை காய்ச்சல் என்று சொல்வதை விட திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். உலகத்தின் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் நடக்கவிருக்கும் இந்த நாடாளுமன்ற தேர்தலை உலகமே உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் கணக்கின் படி அங்கீகாரம் பெற்ற கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட கட்சிகளும், கணக்கிலடங்காத சுயேச்சைகளும் இந்த தேர்தல் திருவிழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். அனைத்து கட்சிகளையும் அவர்களின் வாக்குறுதிகளையும் மக்கள் வெகு கவனமாக கவனித்து வருகிறார்கள். கட்சிகள் தங்களது வாக்குறுதிகளை மக்களை நேரடியாக சந்தித்தும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும், இன்னபிற சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில்தான் தேர்தல் அறிக்கைகளைப் பற்றி நாம் பேசவேண்டியிருக்கிறது.

தேர்தல் அறிக்கைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வெளியிடுவது, மற்றொன்று மக்கள் இவையெல்லாம் நாங்கள் போட்டியிடும் கட்சிகளிடமிருந்து, எங்களின் பிரதிநிதிகளாக வரப்போகிறவர் செய்யவேண்டியவைகள் என்று எதிர்பார்த்து கோரிக்கைகளாக வெளியிடுவது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்போது பல கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்து விட்டன. பெண் விடுதலைக்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் சில தேர்தல் அறிக்கைகள் தமிழக அளவில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. ஆனால் மக்கள் சார்பாக நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதற்கான வேலையில் யாரும் ஈடுபட்டதாக இதுவரை தெரியவில்லை.

தேர்தல் அறிக்கைகளை வாசித்து அதைப் பற்றிய விவாதத்தை மக்கள் ஆரம்பிக்க வேண்டும். தேர்தல் அறிக்கைகள் ஏதோ தொலைக் காட்சி விவாதங்களில் பேசுவதற்கான ஒன்றாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கைகளை வாசிப்பது என்பது ஏதோ படித்த மேல்தட்டு வர்க்கம் செய்யவேண்டியது என்பது போலவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் தேர்தல் அறிக்கை என்பது ஒவ்வொரு சாமானிய மக்களும் படித்து விவாதிக்க வேண்டியது. ஆனால் அதற்கு முன்பாக தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தேர்தல் அறிக்கை பற்றி என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். 2013-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிக்கைகள் பற்றிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அந்த வழிமுறைகளில் மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 1956-ன் பிரிவு 123- ன்படி இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகள் தருவது ஊழல் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாதென்றாலும் இது மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி நியாயமாக தேர்தலை நடத்துவது என்பதையே பெருமளவு பாதிக்கும் என்றும் கூறுகிறது.

இச்சூழலில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 324-ன் படி தேர்தலை நடத்துகிற தேர்தல் ஆணையம் சில வழிமுறைகளை தேர்தல் அறிக்கைகளை வெளியிடும் கட்சிகளுக்கு வகுத்தளித்தது. அதன்படி இந்த தேர்தல் அறிக்கைகள் போட்டியிடும் கட்சிகளின் சமநிலையை பாதிக்கும் வண்ணமோ, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவோ, இந்திய தேர்தல் ஆணையம் வகுத்தளித்த தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவோ இருக்கக்கூடாதென்று கூறியிருக்கிறது. அதன்படி இலவசங்களை அறிவிக்கும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடும் கட்சிகள் அந்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற எப்படி நிதி ஒதுக்கப்படும், பெறப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் அவைகளை இக்கட்சிகள் சரியாக பின்பற்றுகின்றனவா என்பதும் அதை தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறதா என்பதும் தனிக்கதை. ஆனாலும் தேர்தல் அறிக்கைகள் ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக செயல்பட்டு வருகிறது என்பது திண்ணம்.

எனவேதான் மக்கள் இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு தேர்தல் அறிக்கைகள் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டும். எட்டு வழிச்சாலை வேண்டாம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் வேண்டாம் போன்ற மக்களின் கோரிக்கைகள் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இல்லையென்றால் அவைகளை பற்றி மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அதுமட்டுமின்றி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளை ஒப்பிடவேண்டும். எந்த கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மக்களுக்கு சரியானதாக தெரிகிறது என்பதை பார்க்கவேண்டும். அதுபோக கடந்த முறை மாநில மத்திய ஆளும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மீண்டும் கலந்தாலோசித்து ஆளுங்கட்சிகள் சென்ற முறை வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் கொடுத்த வாக்குறுதிகளில் எந்த அளவிற்கு நிறைவேற்றியுள்ளன என்பது பற்றிய மதிப்பீட்டு ஆய்வையும் நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி வாக்குறுதிகளை அள்ளித்தந்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தனிச்சட்டமோ, ஆணையோ பிறப்பிக்கப் பட வேண்டும்.

இப்படியாக தேர்தல் அறிக்கைகளின்மீது வாக்காளர்கள் ஆரோக்கியமான விவாதமொன்றை நடத்தவேண்டும். இதற்காக கிராமம், பள்ளி, கல்லூரிகள், வட்டம், மாவட்டந்தோறும் தேர்தல் அறிக்கை விவாதக்குழுக்களை உருவாக்கவேண்டும். இதன்மூலம் அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்கும். வாக்குக் கேட்டு வரும் வேட்பாளர்கள் வாக்காளர்கள் மத்தியில் வெறுமனே இதைச்செய்வோம் அதைச்செய்வோம் என்று பொய் சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது. வரும் வேட்பாளர்களை அவர்களின் தேர்தல் அறிக்கைகளை வைத்து மக்கள் கேள்வி கேட்பார்கள். ஓர் ஆரோக்கியமான விவாதத்திற்கான களத்தை இது அமைத்துத்தரும். வாக்காளர்கள் தேர்தல் அறிக்கைகளை வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு அதை கையில் வைத்துக்கொண்டு வாக்குக்கேட்டு வரும் வேட்பாளர்களிடம் கலந்துரையாடல் ஒன்றை நடத்த வேண்டும். கலந்துரையாடலே ஜனநாயகத்தின் திறவுகோல்.

முதுமுனைவர் குணா.தர்மராஜா,

தேர்தல் கருத்துக்கணிப்பாளர், சென்னை


Next Story