தினம் ஒரு தகவல் : குப்பையை காசாக்கலாம்...


தினம் ஒரு தகவல் : குப்பையை காசாக்கலாம்...
x
தினத்தந்தி 26 March 2019 8:51 AM GMT (Updated: 26 March 2019 8:51 AM GMT)

குப்பை ஒரு கழிவு அல்ல, அதை உரிய முறையில் பயன்படுத்தினால் அது இன்னொரு கச்சாப் பொருள் ஆகும்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு அது பல்வேறு பரிமாணங்களை கடந்து இப்போது, திட மற்றும் திரவ வள மேலாண்மை என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

வீட்டுக்குள் இருக்கும் குப்பையை 12 மணி நேரத்துக்குள் வெளியே கொண்டு வந்துவிட்டால், அது கெடாமல் இருக்கும். அதேபோல, உணவுக் கழிவை 6 மணி நேரத்துக்குள்ளும், மாமிசக் கழிவை 3 மணி நேரத்துக்குள்ளும், காய், கனி மார்க்கெட் கழிவை 4 மணி நேரத்துக்குள்ளும் வெளியே கொண்டு வந்துவிட்டால் கெடாமல் சேமித்துவிடலாம். இதை புரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டம் செயல்படுத்தினால் குப்பையின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

வீட்டுக் குப்பை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து சேகரிக்கப்படும் குப்பை, மார்க்கெட் கழிவு, இறைச்சிக் கழிவு ஆகியவை குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை சேகரிக்கப்பட்டு மையத்துக்கு வந்து சேர்ந்தால் போதும். அங்கே, மக்கும் குப்பை 21 வகைகளாகவும், மக்காத குப்பை 24 வகைகளாகவும் தரம் பிரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பை ஒவ்வொன்றையும் விற்று காசாக்கிவிட முடியும்.

ஒரு வாழை இழை மக்கி உரமாவதற்கு 120 நாட்கள் ஆகும். ஆனால், அதையே மாட்டுக்குக் கொடுத்தால் 8 மணி நேரத்தில் சாணமாகி, 72 மணி நேரத்தில் உரமாகவும் மாறிவிடும். சாணத்திலிருந்து எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மீன், மாமிச கழிவைச் சேமித்து, அவற்றை வாத்துகளுக்கு தீவனமாக கொடுத்து வந்தால், ஒரு வாத்திலிருந்து மாதம் 24 முட்டைகளை உற்பத்தி செய்ய முடியும்.

சலூன், பியூட்டி பார்லர்களில் இருந்து 6 விதமான கழிவு வகைகள் வெளிவருகின்றன. இவற்றை மற்ற குப்பைகளோடு சேர்க்காமல் தனியாகச் சேமிக்க வேண்டும். இதில் பெண்களின் கூந்தல் கிலோ ரூ.2,500 வரை விலை போகிறது. அதேநேரம் தெர்மாகோல் கழிவு போன்ற எந்த வகையிலும் பயன்படாத குப்பை வகைகள் 15 உள்ளன.

ஒரு வீட்டின் குப்பையில் இருந்து தினசரி மூன்று ரூபாய் வருமானம் கிடைக்கும். அதன்படி, 25 லட்சம் வீடுகளையும், ஐந்து லட்சம் வணிக நிறுவனங்களையும் கொண்ட பெங்களூரு நகர குப்பையிலிருந்து ஒரு மாதத்துக்கு ரூ.27 கோடி சம்பாதிக்க முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சீனிவாசன் என்பவர்.

மேலும் இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தினால் 18 மாதங்களில் சென்னையை குப்பை இல்லா மாநகராக்கிவிடலாம் என்று சொல்கிறார். வட மாநிலங்களில் இவருடைய திட்டத்தை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள். அதனால், தமிழகத்தை விட்டுவிட்டு வடக்கே புலம் பெயர்ந்து விட்டார். இப்போது குஜராத், சிக்கிம், ராஜஸ்தான், புதுடெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் இவருடைய திட்டம் செயல்படத் தொடங்கி இருக்கிறது.

Next Story