இத்தாலியின் ‘டயட் பீட்சா’


இத்தாலியின் ‘டயட் பீட்சா’
x
தினத்தந்தி 13 April 2019 2:43 PM IST (Updated: 13 April 2019 2:43 PM IST)
t-max-icont-min-icon

சமீபத்தில்தான் இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்

இத்தாலியை பூர்வீகமாக கொண்ட பஸ்க்வாலோ கோஸோலினோ, பிரபல சமையல் கலைஞர். இவர் சமீபத்தில்தான் இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார். அமெரிக்காவின் உணவு பழக்கமும், சோடா பருகும் பழக்கமும் பஸ்க்வாலோவை பருமனாக்கிவிட்டது. 90 கிலோ இருந்தவர், வெகுவிரை விலேயே 168 கிலோ எடை கொண்டவராக மாறியிருக்கிறார்.

திடீர் எடை அதிகரிப்பால் அவதிப்பட்ட பஸ்க்வாலோவை, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இவருக்கு நெருக்கமான பிரபலங்களும் அனுதாபங்களை அள்ளிவீச, வெகு விரைவிலேயே மூட்டு வலி, முதுகு வலி, அல்சர் என்று பல பிரச்சினைகளும் அவருக்கு வந்து சேர்ந்தன. தன்னுடைய எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்த கோஸோலினோ, அதற்காக இத்தாலிக்கு திரும்பினார். ஏனெனில் இத்தாலி நாட்டில் பழமையான டயட் உணவு ஒன்று இருக்கிறதாம். அதுதான் ‘டயட் பீட்சா’.

சுத்திகரிக்கப்படாத மாவு, தண்ணீர், உப்பு, ஈஸ்ட் என்ற 4 பொருட்களை மட்டுமே சேர்த்து தயாரிக்கப்படும் இந்த டயட் பீட்சாவில், வெண்ணெய் உட்பட வேறு எந்தப் பொருட்களும் சேர்ப்பதில்லை. குறிப்பாக பீட்சா தயாரிக்க பயன்படும் மாவை 36 மணி நேரம் ஊறவைத்துதான், பீட்சாவாக சமைக்கவேண்டுமாம். டயட்டின் விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடித்த பஸ்க்வாலோ, பீட்சாவில் தக்காளி சாஸ், பச்சைக் காய்கறிகளை மட்டும் சேர்த்து கொண்டார். இது மதிய உணவுக்கானது. காலையில் பல வகை தானியங்கள், பழங்கள், ஆரஞ்சு ஜூஸ், காபியை மட்டும் எடுத்துக்கொண்டார். இரவில் காய்கறிக் கலவை, கடல் உணவு, ஒரு டம்ளர் ஒயின். இப்படியே 3 மாதங்கள் கழிய, 18 கிலோ குறைந்ததாம்.

‘‘இயற்கையான, பாரம்பரிய உணவுகள் மூலம் எடையைக் குறைக்க முடியும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன். தினமும் பீட்சா சாப்பிடுவதால் நொறுக்குத்தீனி சாப்பிடுவதை விட்டுவிட்டேன். உடலுக்குத் தேவையான சரிவிகித சத்துகள் கிடைத்தன. 7 மாதங்களில் 46 கிலோ எடை குறைந்துவிட்டது. இடுப்பு அளவு 48 அங்குலத்தில் இருந்து 36-க்கு வந்துவிட்டது. என் முகமே மாறிவிட்டது. மிக உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன்’’ என்கிறார் கோஸோலினோ.

1 More update

Next Story