ரசித்து சமையல் செய்தால் ருசித்து சாப்பிடலாம்...


ரசித்து சமையல் செய்தால் ருசித்து சாப்பிடலாம்...
x
தினத்தந்தி 14 April 2019 6:52 AM GMT (Updated: 14 April 2019 6:52 AM GMT)

உமாராணி, தன்னம்பிக்கை நிறைந்த பெண். வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து முன்னேறியவர்.

மாராணி, தன்னம்பிக்கை நிறைந்த பெண். வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து முன்னேறியவர். தன்னைப்போல் மற்ற பெண்களும் கஷ்டங்களை அனுபவித்துவிடக்கூடாது என்பதற்காக இதர பெண்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிபாய்ச்சுகிறார். பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்கள் முன்னேற்றத்துக்கு வழிகாட்டுகிறார்!

உமாராணி, மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர். பெண்களின் நம்பிக்கை நாயகியான இவர், கேட்டரிங் சர்வீஸ் செய்து வருகிறார். இவரிடம், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் அனைவரது வாழ்க்கையும் சோக பின்னணிகொண்டது. அதாவது கணவரை இழந்த பெண்கள், கணவரால் கை விடப்பட்ட பெண்கள், தாய்-தந்தையை இழந்த பெண்கள் என சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை கொடுத்துள்ளார்.

உமாராணியிடம் பேசுவோம்!

“நான் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவள். எனது கணவர் பரதன், தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் வேலையை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக கஷ்டம் எங்களை துரத்த தொடங்கியது. அதில் இருந்து தப்பிக்கும் வழிதெரியாமல் திணறினோம். திருமணம் முடிந்து 12 வருடங்களாக எங்களுக்கு குழந்தையும் பிறக்காமல் இருந்ததால் சொந்தபந்தங்களும் எங்களை வெறுக்கத் தொடங்கினார்கள். நாங்கள் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்தோம்.

வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் கொண்டு போடுவது, பேப்பர் போடுவது, கோலப்பொடி விற்பனை, மாவு விற்பனை என சின்னசின்ன வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தேன். அதன்பிறகு சமையல் துறையில் இறங்க விரும்பி, அதுசம்பந்தமான படிப்பை 6 மாதங்கள் பயின்றேன். அதில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. புதுமையான முயற்சிகளிலும் ஈடுபட்டேன்.

நான் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் சமைத்ததால் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி படிப்படியாக முன்னேறி கேட்டரிங் துறையில் என்னுடன் என்னை போன்ற பெண்களையும் வேலைக்கு சேர்த்து கொண்டேன். பெண்களால் எதையும் சாதிக்க முடியும். எந்த சூழலையும் சாதுரியமாக சமாளிக்கும் ஆற்றல் பெண்களிடம் உண்டு என்பதை உணர்ந்த நான், பெண்களுக்கு தன்னம்பிக்கையும், பயிற்சியும்கொடுத்து என்னுடன் பணிபுரிய வைத்தேன்.

முதலில் மீனாட்சி மகளிர் குழு என்ற பெயரில் பெண்களை ஒருங்கிணைத்தேன். அதன் மூலம் அறிமுகமானவர்களை கேட்டரிங்கில் பயன்படுத்தினேன். கேட்டரிங் வேலை என்பது எளிதல்ல. எவ்வாறு சமைக்க வேண்டும், எவ்வாறு பரிமாற வேண்டும் என்பதை அறிந்திருந்தால் மட்டுமே அன்புடன் பரிமாற முடியும் என்பதால் வேலைக்கு சேரும் பெண்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்தேன். அதன்பிறகு எனது பெயரிலேயே கேட்டரிங் சென்டரை தொடங்கி பல வருடங்களாக நடத்தி வருகிறோம்.

சமையல் பரிமாறுவதற்கென தனி பெண்கள், சமைப்பதற்கு, பாத்திரம் கழுவுவதற்கு, காய்கறிகள் வெட்டுவதற்கு என எல்லாவற்றுக்கும் தனித்தனி குழுக்களாக பெண்களை வைத்திருக்கிறோம். அதுபோல் வரவேற்கவும், விருந்துக்கு வரும் முதியோர்களை கவனிக்கவும், நிகழ்ச்சியில் பங்குபெறும் குழந்தைகளை அன்புடன் நடத்தவும் தனித்தனியாக பெண்கள் குழுக்களை வைத்திருக்கிறோம்.

அன்றாட உணவுக்குகூட வழியில்லாத பெண்களை உடனடியாக வேலைக்கு சேர்த்துக்கொள்வோம். ஏற்கனவே எங்களிடம் பெண்கள் வேலை செய்வதால் புதிதாக வேலைக்கு வருபவர் களுக்கு எந்தவித அச்சமும் இருக்காது. உழைப்பின் மூலம் முன்னேற முடியும் என்பதை நிஜமாக்கி சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். முதியோர்களுக்கு இலவச உணவும் வழங்கிவருகிறேன்.

சமுதாயத்தில் பெண்களுக்கு தனிமரியாதை கிடைக்க வேண்டும். பெண்கள் எல்லா துறையிலும் சாதிக்க வேண்டும் என்பது எனது ஆசை. எனது பொழுதுபோக்கு, வேலை எல்லாமே சமையல்தான். சமையல் மட்டும் தான் குறிக்கோள். தொலைக்காட்சி பார்க்க மாட்டேன், சினிமாவுக்கு செல்லமாட்டேன். எனது வாழ்க்கையே சமையல்கலைதான். சமையலை ரசித்துக்கொண்டே, சிரித்துக்கொண்டே செய்வேன். அப்படி செய்தால்தான் அது ருசியாக அமையும்” என்கிறார், உமாராணி. இவரது சமையலை பாராட்டி பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன.

Next Story