சிறப்புக் கட்டுரைகள்

கொன்றை மரப்பூக்களும்.. குவிந்த அழகுப் பெண்களும்.. + "||" + Konnaparkalukalum .. and the acclaimed beauty ladies ..

கொன்றை மரப்பூக்களும்.. குவிந்த அழகுப் பெண்களும்..

கொன்றை மரப்பூக்களும்.. குவிந்த அழகுப் பெண்களும்..
சித்திரை மாதம். சுட்டெரிக்கும் சூரியன் தன் கோபக்கனலை பூமியின் மீது வெப்பமாக வெளியேற்றும் காலம். மண் எங்கும் நீர்வற்றிப்போக, செடி-கொடிகள் வாழ வழி எங்காவது கிடைக்குமா? என்று ஏங்கும் காலம். ஆனால், இத்தோடு வாழ்க்கை முடிந்து விடவில்லை. வசந்தகாலம் மிச்சமிருக்கிறது என்று இயற்கைக்கு காலம் மஞ்சள் பூக்கள் மூலம் உணர்த்துகிறது.
மங்கல அழைப்பு விடுக்கும் மஞ்சள் பூக்கள் பலவும் சித்திரையில் பூக்கின்றன. குறிப்பாக கொன்றை மரங்கள் தன் சிரிப்பினை மொட்டுகளில் இருந்து வெடித்துக்காட்டி, அழகிய மஞ்சள் பூக்களாய் பூத்துக்குலுங்கும்.

சித்திரையின் தொடக்கத்தில் கொன்றை மற்றும் கொன்றை மரத்தின் இனத்தை சேர்ந்த அத்தனை மரங்களும் பூத்துக்குலுங்குகின்றன.

கோடையின் வெப்பம் ஒரு புறம் வாட்டினாலும், உயர்ந்த கொன்றை மரங்களில் எங்கிருந்து பார்த்தாலும் மஞ்சள் போர்வை விரித்தார்போன்று அழகாய் காட்சி அளிக்கும் இந்த பூக்கள் மனதுக்குள் இன்பத்தை ஏற்படுத்தும். கொன்றை மரங்களுக்கு சரக்கொன்றை, ராஜ கொன்றை என்ற பெயர்களும் உண்டு. இதன் பூக்கள் சரம் போன்று பூத்து தொங்குவதால் இதற்கு ‘சரக்கொன்றை’ என்று பெயர். சங்க காலத்தில் முல்லை நிலத்துக்கு உரிய பூவாக குறிப்பிடப்படும் கொன்றை, சித்திரைத் திருவிழாவின் முக்கிய பூவாகும். முல்லை நிலத்து மன்னர்கள் போரில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு சூடும் மலராகவும் இருந்தது.

சித்திரை விழா தொன்று தொட்டு நம் மண்ணில் கொண்டாடப்பட்டு வருகிறது. சிலப்பதிகாரத்தில் சித்திரை மாதத்தின் சித்திரை நட்சத்திர முழு பவுர்ணமி அன்று சித்திரைத்திருநாள் இந்திர விழாவாக கொண்டாடப்பட்டது குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஈரோடு நந்தா என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நிழல் கொடுக்கும் முக்கிய இடத்தில் இருக்கும் கொன்றைப்பூக்கள் சித்திரையை முன்னிட்டு பூத்துக்குலுங்கி எங்கும் மங்கல வண்ணத்தை பரப்பி நிற்கின்றன. அந்த பூக்களோடு பூக்களாக மாணவிகளும் நடமாடி, மொட்டுகளில் இருந்து மெல்ல விரியும் பஞ்சுபோன்ற பூக்களை வருடி மகிழ்கிறார்கள்.

தாவரவியல் அடிப்படையில் பபேசியே குடும்பத்தை சேர்ந்த காசியா பேரினத்தை சேர்ந்தது இந்த பூக்கள் என்று அறிவியல் விளக்கம் அளிக்கிறார்கள் மாணவிகள். தமிழகத்தில் சித்திரை விழாவின் போது பூத்துக்குலுங்கினாலும் இது கேரளாவின் மாநில மலராக உள்ளது. இந்தியாவை தாயகமாக கொண்ட கொன்றை மரங்கள் பாகிஸ்தான், பர்மா, இலங்கையிலும் உள்ளன என்ற தகவல்களை கொட்டும் மாணவிகள் அந்த மலர்களோடு ஒட்டி உறவாடி மகிழ்கிறார்கள். அவர்களை மட்டுமல்ல... பார்ப்பவர்களை கவரும் கொன்றை மலர்கள் நம் பாரம்பரியத்தை சார்ந்தது. காலம் காலமாக நம் பழக்க வழக்கங்கள் மாறிப்போனாலும் இயற்கை எதையும் மறக்காமல் மறுக்காமல் தன் சிறப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இயற்கையோடு இயைந்து வாழ்வோம் என்பதை உணர்த்துகின்றன கொன்றைப்பூக்கள்.

இதுபோன்று சித்திரை மாதத்தில் அத்திமரங்கள் பூக்கும். பல சிவாலயங்களில் இது தல விருட்சமாக உள்ளது.

இயற்கையை காப்போம்... சித்திரை மகளை வரவேற்போம்!