மலர்களில் மயங்கும் மனசுகள்


மலர்களில் மயங்கும் மனசுகள்
x
தினத்தந்தி 14 April 2019 7:24 AM GMT (Updated: 14 April 2019 7:24 AM GMT)

மானோடு, மயிலோடு, நிலவோடு என்று இயற்கையின் அத்தனை அம்சங்களோடும் பெண்களை ஒப்புமைப்படுத்துவது புலவர் களின் வழக்கம். இதில் முக்கியமாக பூக்களோடு வர்ணிப்பது என்றால் புலவர்களுக்கு பிடிக்கும். அதை கேட்கும் பெண்களுக்கும் ரசிக்கும்.

இறைவன் படைப்பில் அழகு என்ற பட்டியலில் முதல் இடத்தை பிடித்து நிற்பவை பூக்கள்தான். இன்னும் பல ஆயிரம் அழகியல் விஷயங்கள் உலகில் இருக்கலாம். ஆனால் அனைவரும், கண்டு, உணர்ந்து, அனுபவித்த அழகு என்றால் அது பூக்களின் அழகுதான்.

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களைப்பற்றி பாடி இருப்பார். சங்க காலத்தில் கபிலர் அறிந்த இந்த மலர்கள் அனைத்தும் அந்த காலத்து பெண்கள் பார்த்து, பறித்து, சூடி, விளையாடியவை. இன்று அவற்றில் பல பூக்கள் குறித்து நாம் அறிந்திருக்கவில்லை. பார்க்கவும் முடிவதில்லை. அப்போது இல்லாத பல பூக்கள் இப்போது நம் கண்முன் விரிந்து கிடப்பதையும் பார்க்க முடிகிறது. பெயர்களோ, வாசனைகளோ மாறினாலும் பூக்கள் என்றால் அழகு என்கிற பதம் மட்டும் மாறவில்லை.

ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர் தங்கள் மனங்கவர்ந்த மலர்களை பற்றி சொல்கிறார்கள்!

எஸ்.மவுனிகா: பூக்களை பறிக்காதீர்கள் என்பது என்னுடைய வேண்டுகோள். பூக்கள் செடியில் இருக்கும்போது எத்தனை அழகாக சிரிக்கின்றன. நாம் பறித்தால் சில நொடிகளிலேயே அவற்றின் சிரிப்பு மறைந்து விடுகிறது. எனவே நான் பூக்கள் சூடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஏதேனும் விழாக்களுக்கு செல்வதாக இருந்தால் அப்பாவின் அன்புக்கட்டளைக்காக பூவைத்துக்கொள்வேன். பூக்களில் என்னை அதிகம் கவர்ந்தது என்றால், செம்பருத்தி பூ தான். விரிந்த அதன் அழகிய இதழ்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அது மருத்துவக்குணம் மிக்கது. சிவப்பு செம்பருத்தியின் அழகு அப்படியே என்னை ஈர்க்கும்.வெளிர் சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல்வேறு நிறங்களில் செம்பருத்தி மலர்ந்தாலும் சிவப்பு செம்பருத்திதான் அழகு. மலர்ந்த செம்பருத்தியை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தால் மனம் பூரிக்கும்.

ஜி.மோனிகா: எனக்கு பிடித்த பூ, ரோஜா. எத்தனை பூக்கள் இருந்தாலும் ரோஜாவை பார்த்தால் மனதுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்படும். ரோஜா மலர் மற்ற பூக்களை விட அனைவரையும் எளிதில் கவரும் தன்மை கொண்டது. அதன் மணம் கிளர்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளை அதிகம் நேசித்த நமது முதல் பாரத பிரதமர் நேருவுக்கு பிடித்த பூ ரோஜா என்பதால் அதன் மீது எனக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது. மிகவும் மன அழுத்தமான நேரங்களில் நான் ரோஜா செடிகளிடம்தான் நேரத்தை போக்குவேன். இதற்காகவே வீட்டில் 5 நிறங்களில் ரோஜா செடிகளை நட்டு வைத்திருக்கிறேன். ரோஜா மருத்துவ குணங்கள் கொண்ட மலர். இதன் இதழ்கள் ஒன்றிரண்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ரோஜா இதழ்களை அரைத்து சருமத்தில் பூசினால் மினுமினுக்கும். பலவிதமான அழகு சாதனங்கள் ரோஜாப்பூ சாறில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

ஆர்.சவுந்தர்யா: எத்தனை பூக்கள் இருந்தாலும் பெண்கள் அனைவருக்கும் பிடித்த பூ என்றால் மல்லிகைதான். ரோஜாவை மிகவும் பிடித்தவர்கள் அதை ரசிக்கலாம். ஒன்றிரண்டை தலையில் சூடிக் கொள்ளலாம். ஆனால் மல்லிகையை தலையே கொள்ளாத அளவு சூடிக் கொள்ளலாம். பெண்களை கூடுதல் அழகாக காட்டுவதே மல்லிகை பூதான். மல்லிகை பூவை தலையில் வைத்தால் அந்த நாள் முழுவதும் தலைமுடியில் நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும். மல்லிகை பூ சூடும் வழக்கம் இருப்பவர்கள் தலை முடிக்கென்று பிரத்யேக நறுமண பொருட்கள் எதையும் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. பச்சை நிற மல்லிகை செடியில் இருந்து முத்துப்பற்கள் போல வெள்ளையாக மொட்டு விடும்போதே எனக்கு மல்லிகை மீதான ஆசை பெருக்கெடுக்கும். அதை பறிக்கும்போது காம்பு கள் பச்சையாக ஒட்டிக்கொண்டு இருக்கும். பச்சை நூல்கண்டில் மல்லிகைப்பூவை கட்டி தலையில் வைத்தால் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். யாரிடம் வேண்டுமானாலும் கேளுங் கள் மல்லிகையை அடித்துக்கொள்ள வேறு பூ இருக்கிறதா என்ன?.

ஜி.சவுந்தர்யா தேவி: சூரியகாந்தி எனக்கு பிடித்த பூ. காரணம் எல்லா பூக்களும் சூரிய ஒளியை மையமாக வைத்தே மண்ணில் மலர்கின்றன. ஆனால் சூரியனின் பெயரை தாங்கி, சூரியனின் முகத்தை பார்த்தே வாழும் பூ சூரியகாந்தி. பக்தியால் வாழும் மக்கள் கடவுள் என்ற எண்ணத்தில் இருப்பதுபோல, சூரியகாந்தி எப்போதும் சூரியன் என்ற எண்ணத்தில் இருப்பதும் சூரியன் மறைந்து விட்டால் முகம்வாடி சுருங்கிப்போவதும் இயற்கையிலேயே என்னை கவர்ந்த விஷயம். சூரியகாந்தி அழகிய மஞ்சள் நிறத்தில் பார்ப்பவர்களை எல்லாம் கவரும். யாராவது சூரியகாந்தியை பார்த்தால் சாதாரணமாக கடந்து போய் விடுவதில்லை. சூரியன் எங்கே இருக்கிறது. சூரியகாந்தி எங்கே பார்த்து விரிந்திருக்கிறது என்று பூவையும், சூரியனையும் ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு செல்வார்கள். மருத்துவ குணம் கொண்ட சூரியகாந்தி மனிதர்களின் வாழ்வோடு ஒன்றிய மிக அழகிய மலர்.

Next Story