உருக்குப்பொருள்கள் இறக்குமதி 78 லட்சம் டன்னாக அதிகரிப்பு


உருக்குப்பொருள்கள் இறக்குமதி 78 லட்சம் டன்னாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 April 2019 7:23 AM GMT (Updated: 15 April 2019 7:23 AM GMT)

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில் உருக்குப்பொருள்கள் இறக்குமதி 78 லட்சம் டன்னாக அதிகரிப்பு

புதுடெல்லி

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில் கம்பி, தகடு உள்ளிட்ட உருக்குப் பொருள்கள் இறக்குமதி 78 லட்சம் டன்னாக அதிகரித்து இருக்கிறது.

டாட்டா ஸ்டீல்

நம் நாட்டில் செயில், ஆர்.ஐ.என்.எல்., டாட்டா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் (ஜே.எஸ்.பி.எல்) ஆகிய 6 நிறுவனங்கள் உருக்குப் பொருள்கள் உற்பத்தியில் முன்னிலையில் இருந்து வருகின்றன. நாட்டின் மொத்த உருக்கு உற்பத்தியில் இந்த நிறுவனங்களின் பங்கு அதிகமாக உள்ளது.

2030-31-ஆம் நிதி ஆண்டுக்குள் கச்சா உருக்கு உற்பத்தி திறனை ஆண்டுக்கு 30 கோடி டன்னாகவும், உற்பத்தியை 25.50 கோடி டன்னாகவும் உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது கச்சா உருக்கு உற்பத்தி திறன் 10 கோடி டன்னாக இருக்கிறது.

இந்நிலையில், கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் கம்பி, தகடு போன்ற உருக்குப் பொருட்கள் இறக்குமதி 78 லட்சம் டன்னாக உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.7 சதவீதம் உயர்வாகும். இதே காலத்தில் உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி 34 சதவீதம் குறைந்துள்ளது.

நடப்பு 2019-ஆம் ஆண்டில், உள்நாட்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக உயரும் என இந்திய உருக்கு சங்கம் மதிப்பீடு செய்துள்ளது. இதன்படி 7.1 சதவீத வளர்ச்சி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை இல்லாத புதிய சாதனை அளவாக இது இருக்கும்.

உலக அளவில் கச்சா உருக்கு உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் உருக்கு துறையின் பங்கு சுமார் 2 சதவீதமாக இருக்கிறது. மேலும் எட்டு முக்கிய துறைகளில் ஒன்றாகவும் இது உள்ளது. உருக்கு துறையில் தற்காலிக சவால்கள் அதிகம் உள்ளன. எனினும் நீண்ட கால அடிப்படையில் இத்துறைக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

10.23 கோடி டன்

நம் நாட்டில், கடந்த நிதி ஆண்டில் (2018-19) உருக்குப் பொருள்கள் உற்பத்தி 6-8 சதவீதம் உயர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய நிதி ஆண்டில் (2017-18) இந்தப் பொருள்கள் உற்பத்தி, வரலாறு காணாத அளவிற்கு 10.23 கோடி டன்னை எட்டி இருந்தது.


Next Story