சிறப்புக் கட்டுரைகள்

இவர் ஒரு முன் உதாரணம்...! + "||" + Tomorrow (April 17th)

இவர் ஒரு முன் உதாரணம்...!

இவர் ஒரு முன் உதாரணம்...!
நாளை (ஏப்ரல் 17-ந் தேதி) வ.சுப.மாணிக்கனார் பிறந்தநாள்.
வாழ்நாள் வரை தமிழுக்காக வாழ்ந்தவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வ.சுப.மாணிக்கனார். மூதறிஞர் எனவும், தமிழ்ச்செம்மல் எனவும் அழைக்கப்பெறும் வ.சுப.மாணிக்கனார், புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி என்ற ஊரில் 1917-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி பிறந்தார். இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்த மாணிக்கனார், தம் தாய்வழி, தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்தார். குருகுல கல்வி முறையில், தொடக்க கல்வியை தாம் பிறந்த ஊரில் வாழ்ந்த, நடேச அய்யரிடம் கற்றார். பின்னர் பர்மா சென்று, நகரத்தார் இன மரபுப்படி வணிக தொழில் பழகினார். தான் பணியாற்றிய கடையில், முதலாளி உரைத்தபடி பொய் சொல்லாத காரணத்தால், வேலை இழந்து 18 வயதில் தமிழகம் வந்தார். அறிஞர், பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் உறுதுணையால், வித்வான் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் பி.ஓ.எல்., எம்.ஓ.எல்., பட்டமும், முதுகலை தமிழ் பட்டமும் பெற்றார். தமிழில், அகத்திணை கொள்கைகள் எனும் பொருளில் ஆய்வு செய்து, 1957-ல் முனைவர் பட்டம் பெற்றார். வ.சுப.மாணிக்கனார் தாம் பயின்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே 1941-ல் விரிவுரையாளராக பணியேற்றார். ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். 1948-ல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில், தமிழ் பேராசிரியர் பணியில் இணைந்தார். 1964-1970-ல் அக்கல்லூரியில் முதல்வராக பணிபுரியும் பேரும் பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகம் மீண்டும் பணியாற்ற அவருக்கு அழைப்பு விடுத்தது. அதன் காரணமாக 1970-1977 வரை தமிழ் துறை தலைவராகவும், இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணியாற்றினார்.

வ.சுப.மாணிக்கனார் மிக சிறந்த தமிழ் புலமையும், தமிழ் பற்றும் உடையவர். 20-ம் நூற்றாண்டு உரைநடை இலக்கியத்தில் இவருக்கு தனி இடம் உண்டு. தமிழ்வழி கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தம் வாழ்க்கையில் திருக்குறள் கருத்துக்களை ஏற்று கடை பிடித்தவர். தொல்காப்பியத்தையும், பிற சங்க இலக்கியங்களையும் உயர்வாக எண்ணியவர். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். வள்ளல் அழகப்பரின் புகழை கவிதை நடையில் கொடை விளக்கு எனும் நூலாக ஆக்கித்தந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, கம்ப ராமாயண செம்பதிப்பு பணியை செய்தவர். அழகப்பா கல்லூரியில் பணியாற்றியபோது, தமிழ் ஆராய்ச்சி துறையை தோற்றுவித்தார். 18 தமிழ் நூல்களை படைத்தார். தொல்காப்பிய கடல், வள்ளுவம், தமிழ்க்காதல், சமயநெறி, காப்பிய பார்வை, இலக்கியச்சாறு, சிந்தனை களங்கள் ஆகியவை அவற்றுள் முக்கியமானவை. ஆங்கிலத்தில் இவர் எழுதிய நூல்கள் நான்கு. மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில் என்ற பெயர்களில் நாடக இலக்கியங்களை படைத்தார். இவரது தமிழ் நடை, தனித்தன்மை கொண்டது. அதில் சொற்செட்டு, சுருக்கமாக சொல்லுதல், தெளிவாக சொல்லுதல் ஆகியவை உள்ளடக்கம். எந்த கருத்தையும், புதுமை கோணத்தில் பார்த்து, ஆராய்ந்து, முடிவுகள் சொல்வது இவரது நேர்த்தி. இவரது நூல்கள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., இவரின் தமிழ் புலமையை அறிந்து, அப்போதைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரியின் ஒப்புதலுடன், இவரை எவ்வித போட்டியுமின்றி மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக்கினார். 1979 ஆகஸ்டு 17 முதல் 1982 ஜூன் 30 வரை இப்பொறுப்பை வகித்தார். துணைவேந்தராக பதவியேற்ற முதல் ஐந்து நாட்களிலேயே அவர் தம் தனித்தன்மையை வெளிப்படுத்தியதையும், குறுகிய காலத்திற்குள் பல்வேறு ஆக்கப்பணிகளை மிக திறம்பட முடித்து காட்டியதையும், பலரும் வியந்து பாராட்டியுள்ளனர். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியதை, தம் கையேட்டில் குறித்து கொண்டு, எவர் உதவியுமின்றி தாமாகவே முடிவெடுக்கும் திறன் பெற்றவர்.

மடலோ, கோப்போ எதுவாயினும் நன்றாக படித்து பார்த்த பின்பே கையெழுத்திடுவார். பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும்படியாக எல்லா செயல்களும் அமைய வேண்டும் என நினைப்பார். பல்கலைக்கழகத்தில் ஒரு காசு செலவு செய்வதாக இருந்தாலும், அதனால் விளையும் பயனைத்தான் எண்ணுவார். தமது சொந்த வாழ்க்கையானாலும், பல்கலைக்கழகமானாலும் வசதிகளை பெருக்கி கொள்ளலாகாது என்பார். தரம் பார்த்தே படிப்புக்கும், ஆராய்ச்சிக்கும் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பார். அதிகார மட்டங்களிலிருந்து வரும் பரிந்துரைகளுக்கு செவி சாய்க்க மாட்டார். மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது பல்கலைக்கழகம் சார்பில் அரிய கண்காட்சியை அமைத்து காட்டியவர். பல புதிய துறைகளை தொடங்கியவர்.

பல்கலைக்கழகத்தின் அனைத்து கோப்புகளும், குறிப்புகளும், தமிழிலேயே இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தவர். ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு பணி உறுதி, பதவி உயர்வு போன்ற பல்வேறு நன்மைகளை செய்தவர். பல்கலைக்கழக நிதி நிலைமையை சீர் செய்து அப்போதே இரண்டு கோடிக்கு மேல் சேமித்து காட்டியது இவரது செயல் திறனுக்கு சான்று.

வ.சுப.மாணிக்கனார் துணைவேந்தராக பதவி வகித்தபோது அவருக்கு தரப்பட்ட வாகனத்தில் காரைக்குடியில் உள்ள தன் வீடு வரை பல்கலைக்கழக வாகனத்தை பயன்படுத்தாமல், மதுரை பேருந்து நிலையம் வரை மட்டுமே வந்து விட்டு வாகனத்தை பல்கலைக்கழகத்துக்கே திருப்பி அனுப்பிவிடுவார். காரைக்குடிக்கு பஸ்சில் தன் சொந்த செலவிலேயே வருவார்.

பணி நிமித்தமாக சென்னை செல்கின்றபோது, விடுதியில் தங்க நேர்ந்தால் தான் திரும்பும் நாள் மற்றும் நேரத்தை கணக்கிட்டு, அந்த அடிப்படையிலேயே விடுதியில் தங்குவார். ஒரு வேளை முன்னதாக சென்றுவிட்டால், ஒரு நாள் வாடகைக்கு அதிகமாக ஆக கூடாது என்பதற்காக, அந்த நேரங்களை கடற்கரை மணலில் நடந்து நேரத்தை கழிப்பாராம்.

முழுமையாக மூன்று ஆண்டு காலமும், துணைவேந்தர் பதவியில் இருக்காமல், பதவிக்காலம் முடியும் சில மாதங்களுக்கு முன்னரே, தாமாகவே விரும்பி பதவியிலிருந்து விலகினார்.

ஆளுனருக்கு கைப்பட எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழக கல்வியாண்டு ஜூலை முதல்நாள் தொடங்குவதாலும், புதிய துணைவேந்தர் அன்று பதவி ஏற்றால், நிர்வாக செயல்முறைகள் வலுவாக இருக்கும் என்பதன் அடிப்படையில் விலகுகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

துணைவேந்தர் பதவியிலிருந்து விடுபட்ட பின்னர் திருவனந்தபுரம் திராவிட மொழியியற் கழகத்தில், தமிழ் யாப்பியல் வரலாறும், வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டார்.

மேலைச்சிவபுரி சன்மார்க்க சங்கம் அளித்த ‘செம்மல்’ விருது, குன்றக்குடி ஆதீனம் வழங்கிய ‘முதுபெரும் புலவர்’, அண்ணாமலை பல்கலைக்கழக பொன் விழாவில் ‘மூதறிஞர்‘ பட்டம், தமிழக அரசு வழங்கிய ‘திருவள்ளுவர் விருது’ ஆகியவை இவருக்கு சிறப்பு சேர்த்தது. தமிழ் பல்கலைக்கழக வடிவமைப்பு குழு தலைவராகவும், தமிழக புலவர் குழு தலைவராகவும், பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்ற தலைவராகவும், தமிழ் பல்கலைக்கழக தொல்காப்பிய தகைஞர் பதவியையும் வகித்தார். வாழ்நாள் வரை தமிழுக்காக வாழ்ந்த வ.சுப.மாணிக்கனார் 1989 ஏப்ரல் 25-ந் தேதி இயற்கை எய்தினார். இன்று வரை அவர் தமிழாக வாழ்கிறார். இவரைப் போற்றி புகழ்வது தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மகா.பாலசுப்பிரமணியன், கல்வியாளர், காரைக்குடி.