தினம் ஒரு தகவல் : முதுமலை காடும் கிண்டி பூங்காவும்..


தினம் ஒரு தகவல் :  முதுமலை காடும் கிண்டி பூங்காவும்..
x
தினத்தந்தி 17 April 2019 7:17 AM GMT (Updated: 17 April 2019 7:17 AM GMT)

நமது வீடோ, அலுவலகமோ அமைந்திருக்கும் இடத்தில் என்றைக்கோ காடு இருந்திருக்கும். காடுகள், நாம் வாழும் நிலப்பகுதிகளின் விளிம்புகளுக்கு தள்ளப்பட்டுவிட்ட மோசமான நிலை இன்றைக்கு நிலவுகிறது.

எஞ்சியுள்ள காடுகள் தான் நம் வாழ்க்கைக்கு ஆதாரமான தண்ணீர், சுத்தமான காற்று, வெப்பநிலையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது போன்ற பல இலவச இயற்கை சேவைகளை வழங்கி வருகின்றன. தமிழகம் எங்கும் எஞ்சியிருக்கும் வனப்பகுதிகளில் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

உலகப்புகழ் பெற்ற நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மையப் பகுதிதான் முதுமலை சரணாலயம். யுனெஸ்கோவின் உலக மரபு சின்னம் பரிந்துரை பட்டியலில் இந்த சரணாலயமும் இடம்பெற்றுள்ளதே இதன் பெருமையை சொல்லும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த சரணாலயம் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகம், கேரளம், கர்நாடக எல்லைகளின் சந்திப்பில் உள்ளது. அதன் மொத்தப் பரப்பு 321 சதுர கிலோமீட்டர்.

வடக்கே கர்நாடகத்தில் பந்திப்பூர் புலிகள் காப்பகம், மேற்கே கேரளத்தின் வயநாடு காட்டுயிர் சரணாலயத்தையும் எல்லையாக கொண்ட இப்பகுதி ஒவ்வொரு பருவ காலத்திலும் பல்வேறு உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு வழித்தடமாக திகழ்கிறது. யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கழுதைப்புலி, நரி, கரடி, புனுகுப் பூனை, மரநாய், வெளிமான், மந்தி, தேவாங்கு, மலபார் மலை அணில், பறக்கும் அணில் முதலிய பாலூட்டிகளும், அரிய வகை தாவரங்களும் இங்கே உள்ளன. 266 வகை பறவையினங்கள் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் தமிழகமெங்கும் பரவலாக தென்பட்ட பாறு எனும் பிணந்தின்னிக் கழுகுகள் தற்போது 99 சதவீதம் அழிந்து, ஒரு சில பறவைகளே எஞ்சியுள்ளன. மிகவும் ஆபத்துக்குள்ளான பறவையினங்களில் ஒன்றான அவை, தமிழகத்தில் முதுமலை வனப்பகுதியில் மட்டுமே எஞ்சியுள்ளன.

சென்னை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒருசில தேசியப் பூங்காக்களில் ஒன்று கிண்டி தேசிய பூங்கா. சென்னையின் நுரையீரல் என்று போற்றப்படுகிறது. சென்னை மாநகரின் மத்தியில் கவர்னர் மாளிகை, ஐ.ஐ.டி.க்கு இடைப்பட்ட பகுதியில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஐ.ஐ.டி., புற்றுநோய் நிறுவனம், தலைவர்களின் நினைவு இல்லப் பகுதி முன்பு காடாக இருந்தவைதான்.

இந்தியாவின் மிகச் சிறிய தேசியப் பூங்காக்களில் ஒன்று என்ற பெருமையும் கிண்டி பூங்காவுக்கு உண்டு. தென்னகத்தின் அரிய வகை வாழிடமான கடலோர வறண்ட பசுமை மாறா புதர் காடுகளை கொண்டது. நரி, வெளி மான், புள்ளி மான், பல வகை பாம்புகள், பறவைகள், தாவரங்களைக் கொண்டது. மாநகரின் நெருக்கடிகளை மீறி வெளிமான், நரி போன்றவை இன்னமும் இப்பகுதியில் எஞ்சியுள்ளன. திட்டமிட்டு பாதுகாத்தால், எத்தனை பெரிய நெருக்கடிக்கு மத்தியிலும் இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கிண்டி பூங்கா விளங்குகிறது.

Next Story