அளவு அடிப்படையில் தாவர எண்ணெய் இறக்குமதி 26 சதவீதம் அதிகரித்தது


அளவு அடிப்படையில் தாவர எண்ணெய் இறக்குமதி 26 சதவீதம் அதிகரித்தது
x
தினத்தந்தி 17 April 2019 8:46 AM GMT (Updated: 17 April 2019 8:46 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

மார்ச் மாதத்தில், அளவு அடிப்படையில் தாவர எண்ணெய் இறக்குமதி 26 சதவீதம் அதிகரித்து 14.46 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்து இருக்கிறது.

சமையல் எண்ணெய்

நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் (சமையல் எண்ணெய் மற்றும் இதர எண்ணெய் வகைகள்) இறக்குமதியில் சமையல் எண்ணெயின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. உள்நாட்டில், முந்தைய நிதி ஆண்டில் (2017-18) 2.30 கோடி டன் சமையல் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதில் ஏறக்குறைய 1.50 கோடி டன் எண்ணெய் இறக்குமதி ஆகி இருந்தது.

நம் நாட்டில் நவம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலம் எண்ணெய் பருவம் ஆகும். கடந்த பருவத்தில் (2017-18) 1.50 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி ஆகி உள்ளது. 2016-17 பருவத்தில் அது 1.54 கோடி டன்னாக இருந்தது. ஆக, இறக்குமதி 2.72 சதவீதம் குறைந்துள்ளது. அதில் பாமாயில் இறக்குமதி (92.90 லட்சம் டன்னில் இருந்து) 87 லட்சம் டன்னாக குறைந்து இருக்கிறது.

நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி 7 சதவீதம் உயர்ந்து 12.42 லட்சம் டன்னாக அதிகரித்தது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் 14.46 லட்சம் டன் தாவர எண்ணெய் இறக்குமதி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 26 சதவீதம் உயர்வாகும்.

இதே காலத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி (11,22,685 டன்னில் இருந்து) 13,93,255 டன்னாக உயர்ந்துள்ளது. மற்ற எண்ணெய் ரகங்களின் இறக்குமதி 2 மடங்கிற்கு மேல் அதிகரித்து 53,302 டன்னாக உள்ளது.

நடப்பு எண்ணெய் பருவத்தின் முதல் 5 மாதங்களில் (2018 நவம்பர்-2019 மார்ச்), நாட்டின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 63 லட்சம் டன்னாக இருக்கிறது. இது கடந்த பருவத்தின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 6.7 சதவீதம் உயர்வாகும். அப்போது இறக்குமதி 59 லட்சம் டன்னாக இருந்தது.

பாமாயில்

இறக்குமதியாகும் சமையல் எண்ணெயில் பாமாயிலின் பங்கு பொதுவாக 65 சதவீதமாக உள்ளது. பாமாயில் பெரும்பாலும் இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு 86 சதவீதமாக இருந்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் அது 62 சதவீதமாக குறைந்தது.

Next Story