விற்பனை குறைந்ததால், முதல் காலாண்டில் 5 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி சரிவு : வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல்


விற்பனை குறைந்ததால், முதல் காலாண்டில் 5 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி சரிவு : வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல்
x
தினத்தந்தி 18 April 2019 12:16 PM GMT (Updated: 18 April 2019 12:16 PM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

விற்பனை குறைந்ததால்,, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) 5 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

20 சதவீத வளர்ச்சி

இந்தியாவில், 2017-18 நிதி ஆண்டில், 28 லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 20 சதவீத வளர்ச்சியாக இருந்தது. சென்ற நிதி ஆண்டில் (2018-19) இரு சக்கர வாகனங்கள் விற்பனை 4.86 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,11,81,390-ஆக உயர்ந்துள்ளது. இதில், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள், பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ். மோட்டார், ராயல் என்பீல்டு ஆகிய 5 முன்னணி நிறுவனங்களின் விற்பனை ஒட்டுமொத்த அளவில் 6 சதவீதம் குறைந்துள்ளது.

உள்நாட்டில், கடந்த மார்ச் மாதத்தில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 17.31 சதவீதம் சரிவடைந்து 14,40,663-ஆக குறைந்து இருக்கிறது. இதில் மோட்டார்சைக்கிள் விற்பனை 14.27 சதவீதம் சரிந்து (11,45,879-ல் இருந்து) 9,82,385-ஆக குறைந்துள்ளது.

விற்பனை சரிவடைந்துள்ளதால் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியும் குறைந்துள்ளதாக தெரிகிறது. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 54 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி ஆகி இருக்கிறது. இது 5 காலாண்டுகளில் இல்லாத பின்னடைவாக கருதப்படுகிறது. இதற்கு முன் 2017 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் குறைந்தபட்சமாக 52.50 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப்

கடந்த நிதி ஆண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 78,20,745 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 59,00,840 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்ற நிதி ஆண்டில் அந்த நிறுவனம் 26 சதவீத வளர்ச்சியுடன் 42,36,873 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் விற்பனை 12 சதவீதம் உயர்ந்து 37 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.

Next Story