சிறப்புக் கட்டுரைகள்

பரிணாம இயலின் தந்தை டார்வின்...! + "||" + Darwin's father of evolutionary ability

பரிணாம இயலின் தந்தை டார்வின்...!

பரிணாம இயலின் தந்தை டார்வின்...!
இன்று (ஏப்ரல் 19-ந் தேதி) விஞ்ஞானி சார்லஸ் டார்வின் நினைவுநாள்.
தனது அறிவுக் கூர்மையினால் புதிய அறிவியல் கொள்கைகளைக் கண்டுபிடித்து வகுத்தளித்து, மனித சிந்தனையில் புரட்சிகரமான திருப்பங்களை உண்டாக்கிய விஞ்ஞானிகள் ஒரு சிலரே. அவர்களுள் டார்வினும் ஒருவர். சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். உயிர்ப் பரிணாம இயலின் தந்தை என்று இவர் போற்றப்படுகிறார். இவரது தாத்தாவும், தந்தையும் மருத்துவர்கள். இவரையும் மருத்துவராக்கவே அவர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் இவரது ஆர்வமோ வேறாக இருந்தது. சிறு வயது முதலே இவர் பூச்சிகள், விலங்குகள் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவற்றைப் பிடித்து பரிசோதித்துப் பார்த்துவந்தார். இவரை பாதிரியாராக ஆக்கிவிடலாம் என்று பிறகு முயற்சித்தனர். அதுவும் நடக்கவில்லை. 1831-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து பீகிள் என்ற கப்பல் தென் அமெரிக்காவின் கடல் பகுதிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்றது. இந்த கப்பலில் இயற்கை விஞ்ஞானியாக டார்வினும் பயணம் செய்தார். கடல் வழியாகவும், ஆங்காங்கே இறங்கி நிலவழியாகவும் 5 ஆண்டு காலத்திற்கு இவர் மேற்கொண்ட பயணம் மிக முக்கியமான திருப்பமாக அமைந்துவிட்டது. உயிரினங்களிடையே காணப்படும் ஒற்றுமை, வேற்றுமைகளைப் பற்றி புரிந்துகொள்வதற்கு பயணத்தின் போது இவர் முயற்சித்தார். எலும்புகள் போன்றவற்றை சேகரித்தார். குறிப்புகளை எழுதி எடுத்துவந்தார். ஒரு தீவுக்கூட்டத்தில் இருக்கும் வெவ்வேறு தீவுகளில் வாழும் ஒரே இனத்தைச் சேர்ந்த குருவிகளின் அலகு அமைப்புகள், அவைகளுக்கு ஆங்காங்கே கிடைக்கக்கூடிய உணவுக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு இருப்பதை அவர் கண்டார்.

350 கோடி வருடங்களாக பூமியில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்போது காணப்படும் அனைத்து வகையான உயிரினங்களும் ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்திருக்கவில்லை. இவை ஆரம்பகால உயிரினத்திலிருந்து பரிணமித்து ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைவிட்டு வளர்ந்து, வெவ்வேறு காலகட்டங்களில் உருவாகி வந்திருக்கின்றன என்பது டார்வினின் கோட்பாடு. உயிர் என்பதை மரம் என்று வைத்துக்கொண்டால், அனைத்து வகையான உயிரினங்களும் அந்த மரத்தின் கிளைகள் போன்றவை. மரத்தில் கிளைகள் படரப்படர பல வகையான மாறுபாடுகளைக் கொண்ட உயிரினங்கள் உருவாகின்றன. பழைய வகை உயிரினங்கள் காலத்தால் அழிகின்றன. டைனோசார் போன்றவை அழிந்துபோன வகைகளுக்கான உதாரணம்.

உயிரினங்கள் ஒவ்வொன்றும் கடவுளால் தனித்தனியாக படைக்கப்பட்டவை என்று மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் நம்பிவந்தனர். மதங்களின் கோட்பாடுகளும் இந்த வகையினதாகவே இருந்தன. மாடுகளின் சாணத்திலிருந்து பூச்சிகள் உருவாகின்றன என்று அவர்கள் நம்பினர். காலகாலமாக நம்பப்பட்டு வந்த இத்தகைய சிந்தனைகளுக்கு மாற்றாக டார்வினின் கோட்பாடுகள் அமைந்தன. படைப்புக்கொள்கை என்பதை மறுத்து பரிணாமக் கொள்கையை டார்வின் முன்வைத்தார். டார்வினுக்கு முன்பாகவே இனம், பேரினம், குடும்பம் என்று விலங்கினங்களும், தாவர இனங்களும் விஞ்ஞானிகளால் வகைப்படுத்தப்பட்டிருந்தன. லாமார்க் என்பவர் பரிணாமக் கோட்பாடுகள் சிலவற்றை டார்வினுக்கு முன்பே கூறியிருந்தார். ஆனாலும், மாறிவரும் சூழல்களில், ஒரு உயிரினம் பரிணாம வளர்ச்சி கண்டு எப்படி பிழைத்து வாழ்கிறது என்பதை டார்வினின் பரிணாமக் கோட்பாடுகள்தான் சிறப்பாக விளக்கின. ‘இயற்கைத்தெரிவு வழிமுறைகளின்படி உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூலை டார்வின் 1859-ம் ஆண்டில் வெளியிட்டார். உயிரினங்கள் படிப்படியான சில குறிப்பிட்ட மாற்றங்களை காலஓட்டத்தில் மெல்ல மெல்ல அடைகின்றன என்பது டார்வினின் தத்துவம். மனித இனமும் இப்படித்தான் உருவாகி வளர்ந்து வந்திருக்கிறது என்பது அவரது முடிவு. டார்வினின் பரிணாம விதி மிகவும் மெதுவாக இயங்கும் ஒரு தத்துவம்.

மனிதனின் வம்சாவளி என்ற புத்தகத்தை 1871-ல் டார்வின் வெளியிட்டார். மனிதன் குரங்கினத்திலிருந்து பரிணமித்தவன் என்று அவர் ஆராய்ந்து தெரிவித்தார். ஆப்பிரிக்க நாட்டு குரங்கினங்களோடு மனிதனைத் தொடர்புபடுத்தி, மனித இனம் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது என்று டார்வின் கூறினார். அது உண்மைதான் என்று பிறகு நடைபெற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. சிம்பன்சி, கொரில்லா, ஒராங்குட்டான் போன்ற குரங்கினங்கள் உடல் தோற்றத்திலும், சிலவகை நடத்தைகளிலும் மனிதர்களை ஒத்திருக்கின்றன. முக அசைவுகள் மூலமும், ஒலிக்குறிப்புகளாலும் பேசிக்கொள்கின்றன. குரங்கினம், மனித இனம் ஆகியவற்றின் மண்டைஓட்டின் அமைப்பு, தாடை, பல் அமைப்புகளில் ஒற்றுமை அதிகமான அளவில் காணப்படுகிறது. இவ்விரு இனங்களின் கரு வளர்ச்சியிலும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன என்பது ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்திருக்கிறது.

எல்லா உயிரினங்களுக்கும் செல் எனப்படும் உயிரணுக்களின் அளவில் பொதுவான தன்மை நிலவுகிறது. உயிர் அணுக்கள் மாறுவதும், வளர்வதும், உணவினால் ஊட்டம் பெறுவதும், இனப்பெருக்கத்திற்கு துணை செய்வதும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை. டார்வினின் கோட்பாடுகளை சுருக்கமாக இப்படி விவரிக்கலாம்: எல்லா உயிரினங்களுக்கும் அபரிமிதமான இனப்பெருக்க ஆற்றல் இருக்கிறது. உணவும், வசிப்பிடமும் ஒரு அளவுக்கு உட்பட்டே இருக்கின்றன. ஒரே வகை உயிரினத்தின் மத்தியிலும், வெவ்வேறு வகை உயிரினங்களுக்கு இடையிலும் உயிர் வாழ்வதற்கான போராட்டம் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு போராடி வாழக்கூடிய உயிரினங்களை மட்டுமே இயற்கை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. மற்ற வகை உயிரினங்கள் அழிந்துவிடுகின்றன. ஒரே கரு முட்டையிலிருந்து உருவான இரட்டையர்கள் தவிர வேறெந்த இரண்டு உயிரினமும் ஒத்த உடலமைப்புடன் இருப்பதில்லை. உயிரினங்களிடையே காணப்படும் வேறுபாடுகள் நீண்ட காலப்போக்கில் புதிய உயிரின வகை உருவாவதற்குக் காரணமாகின்றன.

டார்வினுக்கு பத்து குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அனைவருடனும் அன்போடு பழகி, விளையாடி மகிழ்ந்து, அவர்களின் ஆர்வங்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஊக்கம் தந்து வளர்த்து வந்தார். இத்தகைய பெற்றோரைக் காண்பது அரிது.

டார்வின் தன்னுடைய 73-வது வயதில், 1882-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதியன்று மறைந்தார். 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அரச குடும்பத்தைச் சேராத ஐந்து பேரில் சார்ல்ஸ் டார்வினும் ஒருவர். இவரது கோட்பாடுகளை மறுத்து பேசுபவர்கள் இன்றும் கூட இருக்கத்தான் செய்கின்றனர். 

- முனைவர் த.சித்தார்த்தன், நிகழ்ச்சிப்பிரிவு முன்னாள் தலைவர், வர்த்தக ஒலிபரப்பு, சென்னை வானொலி.