பிப்ரவரி இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 120.54 கோடி


பிப்ரவரி இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 120.54 கோடி
x
தினத்தந்தி 20 April 2019 12:17 PM GMT (Updated: 20 April 2019 12:17 PM GMT)

5ஜி என்பது செல்போன் அகண்ட அலை வரிசை தொழில்நுட்பமாகும். தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இத்தொழில்நுட்பத்திற்கான களப்பரிசோதனைகள் 2019-ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்க இருக்கின்றன...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நம் நாட்டில், பிப்ரவரி இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை (செல்போன்+லேண்டுலைன்) 120.54 கோடியாக உள்ளது. முந்தைய மாதத்தில் அது 120.38 கோடியாக இருந்தது.

0.14 சதவீத வளர்ச்சி

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

நம் நாட்டில், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 120.38 கோடியாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் நிகர அடிப்படையில் 87 லட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது 0.14 சதவீத வளர்ச்சியாகும். இதனையடுத்து இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 120.54 கோடி எட்டி இருக்கிறது.

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை மட்டும் (118.19 கோடியில் இருந்து) 118.36 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அது 117 கோடியாக இருந்தது.

ரிலையன்ஸ் ஜியோ

பிப்ரவரி மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 77.93 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி உள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் மொத்த இணைப்புகள் 29.7 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்து பொதுத்துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல். நிறுவனம் சுமார் 9 லட்சம் புதிய இணைப்புகளை அளித்து இருக்கிறது. இந்நிறுவனத்தின் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 11.62 கோடியாக உள்ளது.

இந்த நிலையில் வோடாபோன் ஐடியா நிறுவனம் அதிகபட்சமாக 57.87 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 40.93 கோடியாக குறைந்துள்ளது. அடுத்து டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் 11.47 லட்சம் இணைப்புகளையும், பார்தி ஏர்டெல் நிறுவனம் 49,456 இணைப்புகளையும் இழந்துள்ளன. எம்.டி.என்.எல். நிறுவனம் 4,652 இணைப்புகளை இழந்து இருக்கிறது.

பிப்ரவரி மாதத்தில் லேண்டுலைன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் (ஜனவரி) அது 2.17 லட்சம் கோடியாக இருந்தது. பீ.எஸ்.என்.எல். நிறுவனம் சுமார் 1 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது. அதே சமயம் பார்தி ஏர்டெல் 42,456 புதிய லேண்டுலைன் இணைப்புகளை வழங்கி உள்ளது. அடுத்து வோடாபோன் நிறுவனம் 17,563 இணைப்புகளை அளித்து இருக்கிறது.

அகன்ற அலைவரிசை

பிப்ரவரி மாதத்தில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 1.89 சதவீதம் வளர்ச்சி கண்டு 55 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இதில் செல்போன் அகன்ற அலைவரிசை இணைப்புகள் 53.10 கோடியாக இருக்கிறது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 29.70 கோடி இணைப்புகளுடன் முன்னிலையில் உள்ளது. அடுத்து பார்தி ஏர்டெல் (11.21 கோடி), வோடாபோன் (11 கோடி), பீ.எஸ். என்.எல். (2.1 கோடி) ஆகிய நிறுவனங்கள் அதிக இணைப்புகளை வழங்கி இருக்கின்றன. ஜனவரி மாதத்தில் செல்போன்களில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 52.10 கோடியாக இருந்தது.

இவ்வாறு டிராய் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

5ஜி தொழில்நுட்பம்

5ஜி என்பது செல்போன் அகண்ட அலைவரிசை தொழில்நுட்பமாகும். தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இத்தொழில்நுட்பத்திற்கான களப்பரிசோதனைகள் 2019-ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்க இருக்கின்றன. இத்தொழில்நுட்பம் 2020-2021-ஆம் ஆண்டுகளில் பரவலாகி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இன்றைய 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை விட பத்து மடங்கு அதிகமான அழைப்புகள் மற்றும் தகவல் போக்குவரத்தை கையாளும் விதத்தில் 5ஜி தொழில்நுட்பம் இருக்கும். தகவல்கள் பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பதிவிறக்க வேகம்

தற்போது 4ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. பிப்ரவரி நிலவரப்படி, 4ஜி தொழில்நுட்ப கட்டமைப்பில் இணைய தகவல் பதிவிறக்க வேகத்தில் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும், அதன் பதிவிறக்க வேகம் நொடிக்கு 20.9 மெகா பைட்டாக இருப்பதாகவும் டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

Next Story