அளவுக்கு மிஞ்சினால் குப்பையும் நஞ்சு...!


அளவுக்கு மிஞ்சினால் குப்பையும் நஞ்சு...!
x
தினத்தந்தி 9 May 2019 6:32 AM GMT (Updated: 9 May 2019 6:32 AM GMT)

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உருவாகும் திடக் கழிவுகள் மற்றும் குப்பையின் எடை 6.2 கோடி டன்கள்.

ஒரு டன் என்றால் ஆயிரம் கிலோ. இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் மொத்தமும் இப்படித்தான் நடக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு இப்படியாக கொட்டப்படும் நகர்ப்புற குப்பைகளின் அளவு 202 கோடி டன்கள். இது போல எத்தனை எத்தனை ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கிறோம்.

இப்படிக் குவிக்கப்படும் குப்பைகள் என்னவாகின்றன? குப்பைகளில் உலோகங்கள், காகிதங்கள், அழுகும் பொருட்கள், நச்சுப் பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் கண்ணாடி என்று பல்வேறுவிதமான பொருட்கள் கலந்துகிடக்கின்றன. உலோகங்கள், காகிதம் போன்ற சிலவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். அழுகும் மற்றும் மக்கும் பொருட்களால் தீமை குறைவு. நாளடைவில் அவை மண்ணில் கரைந்துவிடும். ஆனால், பெரும்பாலான குப்பைகள் இந்த வகைகளாக பிரிக்கப்படாமல்தான் கொட்டப்படுகின்றன.

இவற்றை வகை வாரியாக பிரிப்பதற்கு பெரும் முயற்சியும், நேரமும், பணமும் செலவாகும். அதனால் பெரும்பாலான நாடுகளில் அவை பிரிக்கப்படுவதில்லை. ஊர்களுக்கு நகர்களுக்கு வெளியே கொட்டப்படுகின்றன. குவிந்துவிடும் குப்பைகள் இரு வகைகளில் கையாளப்படுகின்றன. ஒன்று ‘இன்சினரேஷன்’ எனப்படும் எரித்து அழிக்கும் முறை. இரண்டாவது முறை, பூமியில் பெரும் பள்ளங்கள் தோண்டி புதைத்து விடுவது. இதை ‘லேண்ட் பில்’ முறை என்று அழைக்கிறார்கள். வெளியில் சொல்லப்படாத மூன்றாவது முறை ஒன்றும் இருக்கிறது. அது, குப்பைகளை கடலில் கொட்டி விடுவது.

எந்த அளவு கடலில் கொட்டி இருக்கிறார்கள் என்றால் 2040-ம் ஆண்டுவாக்கில், கடலில் வாழும் மொத்த உயிரினங்களின் எடையைக் காட்டிலும் குப்பைகளின் எடை அதிகமாக இருக்கப்போகிறதாம்.

பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதால் சுற்றுப்புறச்சூழல் கெடுகிறது. புதைக்கும் குப்பைகள் சிலவற்றில் இருந்து மண்ணுக்குள் நச்சுப் பொருட்கள் கசிந்து சுற்றுப்புறமெங்கும் மண்ணைக் கெடுக்கிறது. கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்கள் நச்சுப் பொருட்களாக மாறி கடல்வாழ் உயிரினங்களையும் அவற்றின் உணவுச் சங்கிலியில் இருக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் கேடு செய்கின்றன. டைனோசர்கள் முன்பு இருந்திருக்கின்றன. இப்போது இல்லை. அவை ஏன் இல்லாமல் போயின என்பதை அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சிகளின்படி டைனோசர்கள் மட்டுமல்ல, விலங்குகள் மட்டுமல்ல, முன் சில காலங்களில் இருந்த பல்வேறு உயிரினங்களும் இப்போது இல்லை. காரணம், உலகில் வாழும் உயிரினங்களில் பெருமளவு, வெவ்வேறு காலகட்டங்களில் கூண்டோடு அழிந்துபோயிருக்கின்றன.

உயிரினம் என்றால் மரம், செடி, கொடி, பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள் என்று எல்லாம். இப்படி நடப்பனவற்றை ‘மொத்தமாக இல்லாமல் போவது’ எனும் பொருள் பட ‘மாஸ் எக்ஸ்டிங்ஷன்’ என்கிறார்கள். பல லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று இதுவரை, ஐந்து முறை அப்படி நிகழ்ந்திருப்பதால் இவற்றுக்கு ‘பிக் 5’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இப்போது நாம் எல்லோருமாக சேர்ந்து ‘பிக் 6’ என்ற ஆறாவது ‘மொத்தமாக இல்லாமல் போவது’ எனும் ‘மாஸ் எக்ஸ்டிங்ஷன்’னை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஒரு மாதம் பெய்ய வேண்டிய அளவு மழை, சில மணி நேரங்களிலேயே பெய்வது போன்ற இயற்கையின் புதிய செயல்பாடுகள் ‘எல்நினோ எபெக்ட்’ காரணமாக என்கிறார்கள்.

உலோகங்கள், பெட்ரோலிய பொருட்கள், மரம், தாதுக்கள், மணல் என்று அறிவியல் வளர்ச்சி காரணமாக எந்திரங்கள் உதவியுடன் பூமியை குறிப்பாக 1970-ம் ஆண்டு முதல் மிக வேகமாக சுரண்டி வருகிறோம். வேகம் என்றால் இயற்கை புதுப்பிக்கக்கூடிய வேகத்தைக் காட்டிலும் மிக விரைவாக. பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் ஆளுக்கு இரண்டு போன்கள், இரண்டு கார்கள், இருசக்கர வாகனங்கள், வீடுகள், வீட்டிற்குள் அதிக எண்ணிக்கையில் அறைகள், அதற்குள் பெருமளவில் எந்திரங்கள் என்று இயற்கையை அழித்து பொருட்கள், கட்டுமானங்கள் செய்து குவிக்கிறோம். மேலும், ஆண்டுக்கு 8 கோடி என்கிற அளவில் மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. இதே போக்கு தொடர்ந்தால், 2050-ம் ஆண்டு வாக்கில் இப்போது எடுப்பது போல மூன்று மடங்கு பொருட்களை பூமியில் இருந்து எடுக்கப்போகிறார்கள்.

இயற்கையிலிருந்து எடுப்பது, அதை குறுகிய காலம் பயன்படுத்துவது பின் குப்பை என எறிந்து விட்டு மீண்டும் இயற்கையிடம் இருந்து எடுத்து புதிய பொருள் செய்து பயன்படுத்துவது என உலகம் ஒரு நேரியல் பொருளாதாரத்தில் ‘லீனியர் எக்கானமி’ பெருமிதம் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படியாக காடுகள், மலைகள், ஆறுகள், கடல்கள், பூமிக்கு கீழ் என்று தொழிற்புரட்சிக்குப் பின், தொடர்ந்து சில நூறாண்டுகளாக பெரும் எந்திரங்கள் உதவியோடு பெரும் அளவில் இயற்கை சுரண்டி அழிக்கப்படுகிறது. இதனால் இயற்கை சூழலுக்கும், உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த மே 6-ந் தேதி, பாரீஸ் நகரில், உலகின் 50 நாடுகளைச் சேர்ந்த 145 அறிஞர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும், ஐ.பி.பி.ஈ.எஸ் என்ற அமைப்பின் ‘நவீன நாகரிகத்தால் இயற்கைக்கு நேரும் சேதங்கள்’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டிருப்பனவற்றை 130 நாடுகள் ஆமோதித்திருக்கின்றன.

அந்த அறிக்கை, உலகில் தற்போதுள்ள 80 லட்சம் வகையான உயிரினங்களில், பத்து லட்சம் வகை உயிரினங்கள் இன்னும் சில பத்து ஆண்டுகளில் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது என்று எச்சரிக்கிறது.

இந்த நிலையில் என்ன செய்யவேண்டும்?

‘எடுப்பது உருவாக்குவது எறிவது’ என்ற பொருளாதாரத்தில் இருந்து மாறி, ‘எடுப்பது நுகர்வது மறுசுழற்சி செய்து மீண்டும் அதையே நுகர்வது’ என்கிற சுழற்சி பொருளாதாரத்திற்கு ‘சர்குலர் எக்கானமி’ மாற வேண்டும். பொருட்களை ‘குறைவாக பயன்படுத்துதல், மறுபடி பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல்’ என்கிற பாதைக்கு மாறி, அதிக பொருட்களை பயன்படுத்துவதை விடுத்து, பயன்படுத்தும் பொருட்களை மிக அதிக காலத்திற்கு பயன்படுத்த வேண்டும். புதிய பொருட்களின் தேவைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் பன்னெடுங்காலம் உயிரினங்கள் வாழ, இந்த பூமிப்பந்து நெறியோடும் பொறுப்போடும் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஒருவருக்கே அதிக எண்ணிக்கையிலான மற்றும் பெரிய வீடுகள், கார் வண்டிகள் மற்றும் பிற உபயோகப் பொருட்கள் என்பது தனிபட்ட மனிதர்களுக்கு, அவர்களது பொருளாதார வசதி காரணமாக சாத்தியப்படலாம். ஆனால், இந்த பூமிக்கு அது தாங்காது. குறைவான பொருட்கள், பயன் படுத்த மட்டுமே பொருட்கள், பயன்படுத்தும் பொருட்களை மறுசுழற்சி செய்து முழுதாக பயன்படுத்துதல், குப்பைகளை கண்டிப்பாக வகைப்படுத்திப் போடுதல் என்று அவசரமாக செய்ய ஆரம்பிக்க வேண்டியவை பல இருக்கின்றன.

- டாக்டர் சோம வள்ளியப்பன்

Next Story