தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் ; விசாரணை- சரியா? தவறா?


தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் ; விசாரணை- சரியா? தவறா?
x
தினத்தந்தி 15 May 2019 5:11 AM GMT (Updated: 15 May 2019 5:11 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு குழு, தலைமை நீதிபதி மீது எந்த தவறும் இல்லை என்று அறிவித்து விட்டது. அந்த பெண் கொடுத்த புகாரை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி இந்திய நீதித் துறைக்கு ஒரு சோதனையான நாள் என்று தான் சொல்ல வேண்டும். அன்று காலையில் சில வலைத்தள ஊடகங்கள் வெளியிட்டு இருந்த ஒரு தகவல் நாடு முழுவதும் ஒரு பூகம்பத்தை உண்டாக்கியது. அதாவது, சுப்ரீம் கோர்ட்டு அனைத்து நீதிபதிகளுக்கும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் வேலை செய்த முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அனுப்பிய அதிர்ச்சிகரமான புகார்களை கொண்ட பிரமாண பத்திரத்தின் நகல் தான் அந்த வலைத்தளங்களில் செய்தியாக வெளியாகி இருந்தன.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தன்னை பணி நீக்கம் செய்து விட்டார். அதுமட்டுமல்ல காவல்துறையில் பணியாற்றும் தன் கணவரது வேலையையும், சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் உறவினர் வேலையையும் பறித்து விட்டார் என்று அந்த பெண் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.

இந்த புகார் குறித்து முதலில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அந்த விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டை தலைமை நீதிபதி மறுத்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதிக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. போராட்டம் வெடித்தது. டெல்லி வக்கீல் உத்சவ்சிங் பெயின்ஸ், ‘தலைமை நீதிபதி நேர்மையானவர். அதனால் பாதிக்கப்பட்ட நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள புரோக்கர்கள், கார்ப்பரேட் முதலைகள், ஊழல்வாதிகளும் சேர்ந்து செய்யும் சதிவேலை இது’ என்று குற்றம் சாட்டினார்.

அதேநேரம், சில வக்கீல் சங்கங்கள், தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. தலைமை நீதிபதி மீதான புகாரை சட்டப்படி விசாரிக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேநேரம், சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்கள் சங்கம் தலைமை நீதிபதிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் இயற்றியது. பெண் ஊழியர் தலைமை நீதிபதிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் ஊழியர்கள் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து, தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட உள்ளுறை குழு அமைக்கப்பட்டது. அதில் ஒரு நீதிபதியாக என்.வி.ரமணா இருந்தார். இவர் தலைமை நீதிபதிக்கு வேண்டப்பட்டவர் என்று கூறி குழுவில் அவர் இடம்பெற்றதற்கு புகார் அளித்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி என்.வி.ரமணாவுக்கு பதில், பெண் நீதிபதி இந்து மல்கோத்ராவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அதன்படி நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோரை கொண்ட உள்ளுறை குழு விசாரணையை தொடங்கியது. ஆனால், இந்தக்குழுவின் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று புகார் கொடுத்த பெண் திடீரென பல்டி அடித்தார். விசாரணையின்போது, தனக்கு உதவியாக வக்கீல் வைத்துக்கொள்ள நீதிபதிகள் அனுமதிக்கவில்லை, தனியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது, இந்த குழுவில் உள்ள நீதிபதிகள் மீது நம்பிக்கை இல்லை, அவர்களது விசாரணை தன்னை அச்சுறுத்துவது போல உள்ளது என்று அந்த பெண் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் தான் கூறும் குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரங்களுடன் மனுவை அளித்தார். அதேநேரத்தில், புகார் கொடுத்தவர் விசாரணைக்கு வராவிட்டாலும், எங்களது விசாரணை தொடரும் என்று உள்ளுறை குழுவின் நீதிபதிகள் அறிவித்தனர். நீதிபதிகளின் இந்த முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட் எதிர்ப்பு தெரிவித்தார். உள்ளுறை குழுவின் தலைவர் எஸ்.ஏ.பாப்டேவுக்கு அவர் கடிதம் எழுதினார். அந்த பெண் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் விசாரணையை தொடரக்கூடாது. அந்த குழுவில் சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரையும், பெண் வக்கீல் ஒருவரையும் நியமிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதையடுத்து உள்ளுறை குழு நீதிபதிகள் முன்பு விசாரணைக்காக தலைமை நீதிபதி ஆஜரானார். தன் மீது பெண் ஊழியர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை எல்லாம் மறுத்தார். அவை தன் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த சுமத்தப்பட்டவை என்று விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் செகரட்டரி ஜெனரல் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் கொண்ட உள்ளுறை குழு விசாரணையை முடித்து அறிக்கை கொடுத்துள்ளது. அதில் தலைமை நீதிபதி மீது எந்த தவறும் இல்லை என்று அறிவித்து விட்டது. அந்த பெண் கொடுத்த புகாரை 3 நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்’ என்று கூறியிருந்தார்.

ஒருவழியாக தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு இவ்வாறு முற்றுப்புள்ளி வைத்தாலும், பொதுமக்கள், வக்கீல்கள் மத்தியில் நிலவும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கும், ஆதரவு கருத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. ஒரு தரப்பினர் தலைமை நீதிபதிக்கும், மற்றொரு தரப்பினர் புகார் கொடுத்த பெண்ணுக்கும் ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஓய்வுப் பெற்ற நீதிபதி, வக்கீல்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆதரவும்


அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவரும், தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்தின் தலைவருமான எஸ்.பிரபாகரன்:

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை பழி வாங்க வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியின் அலுவலகம், வீடு ஆகியவை பலத்த பாதுகாப்புடன் இருக்கும். இந்த பெண் சொல்வதை போன்று எந்த சம்பவமும் அங்கு நடக்க வாய்ப்பு இல்லை.

பொதுமக்களின் கடைசி நம்பிக்கையாக திகழ்வது நீதித்துறையாகும். அப்படிப்பட்ட புனிதமான ஒரு அமைப்பின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் சமூகவிரோதிகள் செய்யும் செயலாகத்தான் இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியது உள்ளது. எனவே மக்களின் கடைசி நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலில் ஈடுபடும் நபர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையென்றால், நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்பட்டு விடும். நீதிபதிகளால் சுதந்திரமாக, தைரியமாக பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும். பெண்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டம் எல்லாம், சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு எதிராக தவறான பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த சட்டங்களை எல்லாம் நீதித்துறை மறு ஆய்வு செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.சுதா (சென்னை ஐகோர்ட்டின் பாலியல் புகார் கமிட்டி உறுப்பினர்):

பாலியல் புகாரை பொறுத்தமட்டில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப சூழ்நிலை, சமுதாயத்தில் தங்களுக்கு இருந்து வரும் மரியாதை போன்ற பல்வேறு காரணங்களினால் புகார் அளிக்க முன்வருவது இல்லை. தனக்கு எதிரான நபர்களையும், தனக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளையும் வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் புகார் கொடுக்கும் பெண்கள் தான் தைரியமாக வெளியே வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது புகார் அளித்த பெண், உண்மையிலேயே பாதிக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழு முன்பு ஆஜராகி இருப்பார். சுப்ரீம் கோர்ட்டு குழு முன்பு அவர் ஆஜராகாதபோதே அந்த பெண்ணின் புகார் பொய்யானது என்றும், அவரை யாரோ பின்னணியில் இருந்து இயக்கி இருப்பதும் தெளிவாக தெரிகிறது. இந்த புகாரை பொறுத்தமட்டில் நீதித்துறைக்கு விடுக்கும் சவாலாகவே கருத வேண்டியது உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு முன்பு ஆஜராகாத நிலையில், இந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை சரியானது என்று தான் கருத வேண்டும்.

ஐகோர்ட்டு பெண் வக்கீல் எஸ்.சுஜாதா:

தலைமை நீதிபதிக்கு எதிரான புகாராக மட்டும் இதை கருத்தில் கொள்ள முடியாது. இது, ஒட்டுமொத்த நீதித்துறையை களங்கப்படுத்தும் செயலாகும். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு முன்பு புகார் அளித்த பெண் ஆஜராகி உண்மையை சொல்ல வேண்டியது தானே?. ஏன் ஓடி ஒளிய வேண்டும்?. விசாரணையின் போது தன்னோடு வக்கீலையும் அனுமதிக்கவேண்டும் என்று ஏன் கேட்கவேண்டும். வக்கீலை எதற்கு துணைக்கு அழைக்கவேண்டும்?. தலைமை நீதிபதி மீது வீண் பழி சுமத்திய அந்த பெண் மீது கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்ப்பும்



ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு:

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு சட்டப்படி போதிய வாய்ப்பு கொடுக்கவில்லை. பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

நல்லவனான தன் கணவன் கோவலனை கள்வன் என்று கூறி மரணதண்டனை விதித்ததை எதிர்த்து சராசரிப் பெண்ணான கண்ணகி, பாண்டியன் அரசவைக்கு சென்று அரசனே குற்றவாளி என்று ஆதாரத்துடன் நிரூபித்தார். தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை கூறி அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அவையில் இருந்த சான்றோர்களும், பொதுமக்களும் அமைதியாக தலைகுனிந்து நின்றனர்.

அதுபோன்ற நிகழ்வு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விவகாரத்தில் நடக்கவில்லையே?. பொதுவாக ஒரு வாதம், போட்டி என்றால் சம பலம் வாய்ந்தவர்களுக்கு மத்தியில் தான் நடைபெற வேண்டும். சட்டஞானம் அதிகம் பெற்ற மூன்று நீதிபதிகள் முன்பு போதிய சட்டஞானம் இல்லாத இந்த பெண் விசாரணையை எப்படி எதிர்கொள்ள முடியும்?

தனக்கு வக்கீல் வைத்துக்கொள்ள அனுமதி கேட்ட அந்த பெண்ணின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் வக்கீல் வைத்துக்கொள்ள நியாயப்படி அனுமதித்திருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க கண்ணகிக்கு கிடைக்காத வாய்ப்பையாவது இந்தப் பெண்ணிற்கு குடியாட்சியில் வழங்கப்பட்டிருக்க வேண்டாமா?.

ஐகோர்ட்டு வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன்:

ஒ ழுங்கீனமாக நடந்து கொள்ளும் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வகுத்துள்ள நடைமுறை(இன் அவுஸ் புரசிஜர்) அடிப்படையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது.

பாலியல் குற்றச்சாட்டு என்பது ஒழுங்கீனத்தின் கீழ் தான் வரும் என்றாலும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு தனியாக ஒரு சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே தலைமை நீதிபதி மீதான புகாரை விசாரித்து இருக்க வேண்டும்.

அதாவது, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகாரை விசாரித்து இருக்க வேண்டும். அதை விடுத்து சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள நடைமுறை அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது நியாயமற்றது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு அளித்த அறிக்கை சட்டப்படியான ஒரு அறிக்கை அல்ல. இந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் உதாசீனப்படுத்தி விட்டு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

ஐகோர்ட்டு வக்கீல் அ.அருள்மொழி:-

ஒரு குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் அதுதொடர்பான விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று நினைக்க நிறைய வாய்ப்பு உள்ளது. பொய் குற்றச்சாட்டு என்று வெளிப்படையாக தெரிந்தாலும், அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு இருந்தாலும் விசாரணை நடைமுறையில் இருந்து மாறக்கூடாது.

பாலியல் புகார் மீது எப்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதோ அதற்கு நேர்மாறாக இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் சட்டப்படியான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து மேற்கொள்ள வேண்டும்.


Next Story