சிறப்புக் கட்டுரைகள்

காணாமல் போன அரசியல் கட்சிகள்! + "||" + Missing political parties!

காணாமல் போன அரசியல் கட்சிகள்!

காணாமல் போன அரசியல் கட்சிகள்!
ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் உருவாவது என்பது பசி எடுப்பது போல! கொள்கை பசி, அதிகாரப் பசி, அடையாளப் பசி போன்றவை அரசியல் கட்சிகள் உதயமாக காரணமாகின்றன!
அரசியல் களத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்தில் மக்களின் விருப்பமாகவோ அல்லது ஒரு வரலாற்று தேவையாகவோ அரசியல் கட்சிகள் உருவாகின்றன. சில கட்சிகள் நிலைத்து நின்று விடுகின்றன. பல கட்சிகள் விண்மீன்களை போல ஜொலித்துவிட்டு மறைந்து விடுகின்றன. 

கொள்கை என்ற வரையறைக்குள் இந்திய தேசியம், தமிழ் தேசியம், திராவிடம், சோசலிசம், முதலாளித்துவம் ஆகியவை வருகின்றன.

மாநிலங்களுக்கு அல்லது தேசிய இனங்களுக்கு அதிகாரம் என்ற காரணத்தால் உருவானவை மாநில கட்சிகள்.

சமூக ரீதியில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தி, எண்ணிக்கை என்ற ஜனநாயகம் தரும் அதிகாரம் வழியாக அங்கீகாரம் பெற முயன்றவை சாதி கட்சிகள் என நாம் கட்சிகளை மூன்று தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

திராவிடக் கட்சிகளின் மூலம்

இந்திய தேசிய காங்கிரசில் பிராமணர் அல்லாதவர்களுக்கு போதுமான முக்கியத்துவம் கிடைக்கவில்லை, அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கும் உரிய பங்களிப்பு வேண்டும் ஆகிய காரணங்களுக்காக உருவான இயக்கம் தான் தென் இந்திய நல உரிமை சங்கம். அது பின்னர் நீதி கட்சியாக பரிணாம வளர்ச்சி பெற்றது. ஆட்சி அதிகாரத்துக்கும் வந்தது. ஆனால் அந்த கட்சிக்கு பெரியார் தலைவரானதும் 1944-ல் அந்த கட்சிக்கு திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் தந்ததோடு, அரசியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை மீட்பு போன்ற லட்சியங்களை உருவாக்கினார். அதன் பின்னர் அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற அபிலாஷைகளுக்கு வடிவம் காண அதிலிருந்து பிரிந்து உருவான கட்சி தான் தி.மு.க.

முதன்முதலாக தி.மு.க.வில் இருந்து வெளியேறிவர்கள் தமிழ் தேசிய கட்சி கண்ட ஈ.வெ.கி.சம்பத், கவிஞர் கண்ணதாசன், எம்.பி.சுப்பிரமணியம், பழ நெடுமாறன் ஆகியோர் சிறிது காலத்திலேயே இந்த கட்சியை காங்கிரசோடு இணைத்தனர்.

தி.மு.க.வில் கருணாநிதியோடு கருத்து மாறுபட்டு வெளியேறி எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அ.தி.மு.க.

முதலில் தி.மு.க.வில் இருந்தும் பிறகு அ.தி.மு.க.வில் இருந்தும் வெளியேறி தனிக்கட்சி கண்டு சமாளிக்க முடியாமல் மீண்டும் வந்த இடத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டவர் நெடுஞ்செழியன்.

கருணாநிதிக்கு பின் அக்கட்சிக்கு அடுத்த தலைவராக வரக்கூடியவராக கருதப்பட்ட வைகோவும் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்று தனிக்கட்சி தொடங்கினார்.

காந்தியின் காங்கிரஸ் முதலில் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததால், அதிலிருந்து விலகி ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் சுயராஜ்ய கட்சி. தமிழகத்தில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தவர் சத்தியமூர்த்தி. பிறகு காங்கிரசோடு சுயராஜ்யா இணைந்துவிட்டது.

சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரசோடு மாறுபட்டு காங்கிரசில் இருந்து வெளியேறிய கட்சிகள் ஏராளம்! தமிழகத்தில் பல மாநில கட்சிகளின் தாய் கட்சி அல்லது மூல கட்சி ஒன்று நீதி கட்சி மற்றொன்று ஸ்தாபன காங்கிரஸ்.

சுதந்திரத்துக்கு பிறகான அரசியல் கட்சிகள்

ஜவகர்லால் நேருவின் சோசலிச கொள்கையில் இருந்து மாறுபட்டு ராஜாஜி கட்சி ஆரம்பித்தார். சுதந்திரா கட்சி தமிழக கட்சியாக மட்டுமாக இருக்கவில்லை. அகில இந்திய கட்சியாக இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட்டது என்பது கூடுதல் சிறப்பாகும். அக்கட்சியும் ராஜாஜி மறைவையடுத்து மறைந்துவிட்டது.

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி.
காமன் வீல் கட்சி மாணிக்கவேலு நாயக்கர்,
இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் ராஜாஜி, சுதந்திரா கட்சி ராஜாஜி.
தமிழரசு கழகம் ம.பொ.சிவஞானம்
ஜனதா கட்சி பா.ராமச்சந்திரன்
காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் குமரி அனந்தன்
தமிழக காமராஜ் காங்கிரஸ் பழ.நெடுமாறன்
தமிழக முன்னேற்ற முன்னணி சிவாஜி கணேசன்
ராஷ்டிரிய சஞ்சய் மஞ்ச் திருஞானம்
அம்பேத்கர் மக்கள் இயக்கம் வை.பாலசுந்தரம்
ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி,  எஸ்.எல்.கிருஷ்ணமூர்த்தி
முற்போக்கு முஸ்லிம் லீக் செங்கம் ஜப்பார்
லோக் தளம் டாக்டர் சந்தோஷம்
ஐக்கிய கட்சி ஏ.ஆர்.தாமோதரன்
லேபர் சோசலிஸ்ட் கட்சி எஸ்.சி.சி.அந்தோணி பிள்ளை
கள் வேண்டுவோர் சங்கம் டாக்டர் கரீம்
தமிழ் தேசிய கட்சி ஈ.வெ.கி.சம்பத்
ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி கல்யாணசுந்தரம்
மககள் தி.மு.க. இரா.நெடுஞ்செழியன்
அண்ணா கழகம் நீரோட்டம் அடியார்
நமது கழகம் எஸ்.டி.சோமசுந்தரம்
எம்.ஜி.ஆர். முன்னேற்ற கழகம் பாக்யராஜ்
எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க .திருநாவுக்கரசு
திவாரி காங்கிரஸ் வாழப்பாடி ராமமூர்த்தி
தமிழ்நாடு ராஜீவ் காங்கிரஸ் வாழப்பாடி ராமமூர்த்தி
காங்கிரஸ் ஜனநாயக பேரவை ப.சிதம்பரம்
தமிழ் பா.ம.க. பேராசிரியர் தீரன்
லட்சிய தி.மு.க. டி.ராஜேந்தர்
ஆகியவை முக்கியமானவையாகும்.

சுதந்திரத்துக்கு பிறகான முதல் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வன்னிய சமூகத்திற்கு போதுமான பிரதிநிதித்துவம் காங்கிரஸ் கட்சி தர மறுக்கிறது என்று குற்றம் சொல்லி உருவான கட்சிகள் தான் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும், காமன்வீல் கட்சியும்!

இக்கட்சிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் அங்கம் வகித்தன. பிறகு இந்த இரு கட்சிகளும் காங்கிரசோடு இணைந்துவிட்டன.

சுதந்திரப் போராட்ட தியாகியான ம.பொ.சி, “காங்கிரஸ் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க தவறிவிட்டது” என்று கூறி வெளியேறி தமிழரசு கழகத்தை தொடங்கினார். நீண்ட காலம் தனிக்கட்சி நடத்திவிட்டு கடைசி காலத்தில் தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார்.

முக்குலத்து மக்களின் தெய்வமாக கருதப்படும் முத்துராமலிங்க தேவர் பார்வர்டு பிளாக் என்று நேதாஜி தொடங்கிய தேசிய கட்சியின் தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்தார். அவரது மறைவுக்கு பிறகு அக்கட்சியும் செல்வாக்கு குறைந்து தேய்பிறையானது.

எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி நமது கழகம் என்று புதிய கட்சி கண்ட எஸ்.டி.சோமசுந்தரம் பிறகு அ.தி.மு.க.வுடனேயே கட்சியை இணைத்துவிட்டார்.

அந்த காலத்தில் கொள்கை பற்று, சுயமரியாதைக்கு பங்கம், தனித் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சி போன்றவை கட்சி ஆரம்பிக்க காரணமாயின. கட்சி ஆரம்பித்தவர்கள் ஓரளவு மக்கள் செல்வாக்கை நம்பித்தான் கட்சி கண்டனர். பணபலத்தை நம்பி கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆனால், இன்றோ பணபலத்தை நம்பி மட்டுமே கட்சிகள் தொடங்கப்படுகின்றன.

காங்கிரசில் அதிருப்தியுற்று தமிழக முன்னேற்ற முன்னணி என்று தனிக்கட்சி கண்டு பிறகு வி.பி.சிங்கின் ஜனதா தளம் கட்சியின் தமிழக தலைவரானார் சிவாஜி கணேசன்.

காமராஜரின் மறைவையடுத்து காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்று கட்சி நடத்தி பிறகு காங்கிரசிலேயே கட்சியை இணைத்துவிட்டார் குமரி அனந்தன். அதேபோல இந்திரா காங்கிரசில் இருந்து விலகி காமராஜ் காங்கிரஸ் என்ற கட்சியை சில காலம் நடத்தி, பிறகு தேர்தல் அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பழ நெடுமாறன்.

தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் கருப்பையா மூப்பனார் கட்சி ஆரம்பித்தார். 1996-ல் காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட த.மா.கா. பிறகு தானே அ.தி.மு.க.வுடன் கூட்டணி கண்டது என்பது வரலாற்றின் வினோதங்களில் ஒன்று. பிறகு பிரிந்து வந்த காங்கிரசுடனே ஐக்கியமாகிவிட்டது. ஆனால், தற்போது மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன் மீண்டும் அக்கட்சிக்கு உயிர் கொடுத்துள்ளார்.

சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், கார்த்திக் போன்றவர்கள் சினிமா புகழ் அரசியலுக்கு கை கொடுக்கும் என்று நம்பி களம் கண்டு தோல்வி கண்டவர்கள்.

கட்சி தொடங்கி தேர்தலில் வென்றும் தொடர்ந்து நடத்த முடியாமல் போனவர்களில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து அதிருப்தியாகி வெளியேறி தமிழக ராஜீவ் காங்கிரஸ் கண்ட வாழப்பாடி ராமமூர்த்தி குறிப்பிடத்தக்கவர்.

எம்.ஜி.ஆர்.கழகம் என்று தனிக்கட்சி தொடங்கி தி.மு.க.வோடு கூட்டணி வைத்தவர் ஆர்.எம்.வீரப்பன். இக்கட்சியில் இருந்து பலர் விலகி தி.மு.க.வில் இணைந்தனர். தற்போது தேர்தல் அரசியலில் தீவிரமாக ஈடுபடாவிட்டாலும், எம்.ஜி.ஆர். கழகம் பெயரளவுக்கேனும் செயல்பட்டு கொண்டுள்ளது.

கடைசியாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொஞ்சம் ஜெயலலிதா சாயலில் இருக்கிறார் என்ற காரணத்திற்காக ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என கட்சி தொடங்கினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவை பெற்று கட்சி தொடங்கி கவனம் பெற்ற ஜெ தீபா, தற்போது அ.தி.மு.க.வோடு தன் இயக்கத்தை இணைத்துக் கொள்ள காத்திருக்கிறார்.

இந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்தில் உருவாகி செயல்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. 2014-ம் ஆண்டு கணக்குப்படி களத்தில் 180 கட்சிகள் இருந்தன.

2019-ம் ஆண்டு இந்த கட்டுரை எழுதப்படும் காலகட்டம் வரையிலான கணக்குப்படி 141 கட்சிகள் களத்தில் உள்ளன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் மாறக்கூடியது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.